தி.மு.க தமிழகத்திற்கான கட்சி என்ற தகுதியை இழந்துவிட்டது – கோவையில் பிரதமர் பேச்சு

25 February 2021, 8:30 pm
Quick Share

கோவை: தி.மு.க ஒட்டுமொத்த தமிழகத்திற்கான கட்சி என்று கூறும் தகுதியை இழந்துவிட்டது என்றும், அக்கட்சி முழுமையான பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்து 25 ஆண்டுகள் கடந்துவிட்டது என்றும் கோவையில் நடைபெற்ற பா.ஜ.க பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பேசியுள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடி இன்று கொடிசியா வளாகத்தில் பல்வேறு திட்டப்பணிகளை துவக்கி வைத்த பின், கொடிசியா அருகே உள்ள மைதானத்தில் நடைபெற்ற பா.ஜ., பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டார். வணக்கம் தமிழ்நாடு, வணக்கம் கோயம்புத்தூர், வெற்றிவேல் வீர வேல் என்று பிரதமர் தனது உரையைத் தொடங்கினார். தொடர்ந்து அவர் பேசியதாவது:- உங்களோடு இருப்பதில் மகிழ்ச்சியடைகிறேன். கொங்கு மண்டலம் பல சிந்தனையாளர்களையும், அறிஞர்களையும், விடுதலை வீரர்களையும் விஞ்ஞானிகளையும் உருவாக்கிய மண்.


இங்கும், தமிழகத்தில் பல பகுதிகளில் உள்ள பிரம்மாண்ட கோவில்களும் உலகத்தின் மக்களை சுண்டியிழுத்து வரவைக்கிறது. நான் இப்போது சில திட்டங்களை துவக்கி வைத்துள்ளேன். மின்துறை, துறைமுகம் நவீன மயமாக்கல், வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி திட்டங்கள் துவக்கி வைக்கப்பட்டன. இவை நமது வாழும் வசதிகளை சுலபமாக்கும் மற்றும் தமிழக மக்களின் கண்ணியமான வாழ்க்கைக்கு உத்தரவாதம் அளிக்கும் திட்டங்களாகும். இந்த ஆண்டு தமிழகம் புதிய அரசை தேர்வு செய்யப் போகிறது. இந்திய வரலாற்றில் இக்கட்டான இந்த காலகட்டத்தில் தேர்தல் நடைபெற உள்ளது.

கடந்த சில ஆண்டுகளாக வலிமையான செய்தியை மக்கள் கூறுகின்றனர். வளர்ச்சியை மையமாக வைத்து செயல்படும் அரசு மட்டுமே வேண்டும் என்கின்றனர். செயல்படும் அரசு மட்டுமே வெற்றி பெறுகின்றன. வளர்ச்சிக்கு எதிரானவர்களை இந்திய மக்கள் தள்ளி வைக்க விரும்புகிறார்கள். தேசிய ஜன நாயக கூட்டணி அரசும், தமிழக அரசும் கூட்டுறவு கூட்டாட்சிக்கு நல்ல உதாராணமாக செயல்படுகிறது. தமிழக மக்கள் நலனுக்காக சேர்ந்து பணியாற்றுகிறோம். இந்த அரசு சிறிய வியாபாரிகளுக்கும், சிறிய விவசாயிகளுக்கும் தான் முக்கியத்துவம் கொடுக்கிறது.

சிறு குறு மற்றும் நடுத்தர தொழிலகங்கள் (எம்.எஸ்.எம்.இ) தன்னிறைவு பெற்ற பாரதத்திற்கு மதிப்பைச் சேர்த்துள்ளன. அவர்களுக்காக இந்திய அரசு பல நடவடிக்கை எடுத்துள்ளது. உதாரணமாக அரசு உத்தரவாதம் தரும் குறுகிய கால திட்டம் நிறைய பேருக்கு சென்று சேர்ந்துள்ளன. கொரோனா காலகட்டத்தில் இது போன்ற திட்டங்கள் எம்.எஸ்.எம்.இ துறைக்கு முக்கிய பங்காற்றும் திட்டமாக இருந்தது. தமிழகத்தில் மட்டும் 3.5 லட்சம் சிறு, குறு தொழில் நிறுவனங்களுக்கு ரூ.14 ஆயிரம் கோடி கடன் வழங்கியுள்ளோம். கோவையில் மட்டும் 25 ஆயிரம் சிறு, குறு தொழிலகங்கள் இந்த திட்டத்தின் மூலமாக பலன் பெற்றன.

கடந்தாண்டு சிறு குறு நடுத்தர தொழில் என்பதற்கான வரையறை முற்றிலுமாக மாற்றியமைக்கப்பட்டது. சிறு குறு தொழில் துறை பிரச்சனைகளை களைய உதவிகள் தேவை என்பது புரிந்து கொண்டேன். அதனால், தான் அர்ப்பணிக்கப்பட்ட சேம்பியன் இணையதளம் நிறுவப்பட்டு அதன்மூலம் தொழில்களுக்கு உதவிகள் செய்யப்படுகின்றன. இந்தாண்டு எஃகு பொருட்கள் கலால் வரி குறைப்பு, இரும்பு ஸ்கிராப் பொருட்களுக்கு வரி விலக்கு, இரும்பு ஸ்குரூ மற்றும் பிளாஸ்டிக் கட்டிடப்பொட்கள், மீது வரி உயர்த்தப்பட்டுள்ளது. இந்த அரசு கடந்த 7 ஆண்டுகளாக வலிமையான ஜவுளி துறையைக் கட்டமைக்க நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.

அரசு ஜவுளித்துறைக்கு கடன் வழங்கி அதன் உட்கட்டமைப்பை நவீனப்படுத்தியுள்ளது. இந்தாண்டு பட்ஜெட்டில் ஜவுளிப்பூங்கா திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. இன்னும் மூன்றாண்டுகளில் இந்தியாவில் 7 ஜவுளி பூங்காக்கள் அடுத்த 3 ஆண்டுகளில் வரும். தோல் பொருட்கள், ஆடைகள், கைவினைப்பொருட்கள் ஏற்றுமதி ஊக்குவிக்கப்படுகிறது. சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுடன் நான் இருக்கிறேன். இந்த தேசம் இத்தொழில்களால் பெருமைப்படுகிறது. இந்தியாவின் சிறிய விவசாயிகளுக்காக செயலாற்றி வருகிறோம். சிறிய விவசாயிகளுக்கு இடைத்தரகர்களால் தொல்லை ஏற்பட்டுவிடக்கூடாது என்று விரும்புகிறோம்.

11 கோடி விவசாயிகள் கிசான் திட்டம் மூலம் பயன்பெற்றுள்ளனர். குறைந்த பட்ச ஆதார விலை உயர்வை கொண்டு வந்த பெருமை இந்த அரசுக்கு உள்ளது. பிரதமரின் இலவச வீடுகள் திட்டம் மூலம் 12 லட்சம் வீடுகள் கொடுக்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் நகர் புறங்கள் வேகமாக வளர்ந்து வருகின்றன. தமிழகத்தில் பெரும்பாலான நகரங்கள் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் மேம்படுத்தப்பட்டு வருகின்றன. தமிழ் பண்பாட்டில் நாம் பெருமைப்படுகிறோம். தமிழ் உலகின் தொன்மையான மொழி. தமிழன் திருவிழாக்கள் உலகம் முழுக்க கொண்டாடப்பட்டு வருகின்றன.

பொறியியல், மருத்துவம் கல்வியை உள்ளூர் மொழியில் அளிக்க முடிவு செய்துள்ளோம். இதன் மூலம் எண்ணற்ற இளைஞர்கள் பயனடைவார்கள். எதிர்கட்சிகளுக்கு சுயலாபம் தான் அரசியல், தம் சட்டைப்பைபய் நிரப்பத்தான் ஆட்சியைப் பிடிக்க முயற்சி செய்கின்றனர். காங்கிரஸ்-திமுக நடத்தும் கூட்டம் ஊழலுக்கான கணிப்பொறிபோல் உள்ளது. அவர்களுக்கு கொள்ளையடிக்க சிறந்த வழி சொன்னால் அமைச்சரவையில் பதவி கொடுக்கிறார்கள். அவர்கள் ஆட்சிக்கு வரும் போது மூர்க்கணின் பண்பாடு வளர்க்கப்படுகின்றது. ஒவ்வொரு மாவட்டத்திலும் தொல்லை கொடுக்கும் சமூக விரோதிகளை தங்கள் பக்கம் வைத்திருக்கிறார்கள். கட்சி தொண்டரகள் மாமூல் வசூலிக்கிறார்கள். இவர்களால் தமிழக பெண்கள் தான் பாதிக்கப்படுகிறார்கள்.

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவை திமுக எப்படி நடத்தியது என்பதை மக்கள் அறிவார்கள். பெண்கள் மீதான அவர்களது எண்ணம் இதுதான். ஜெ.,க்கு தொல்லை கொடுத்தவர்களுக்கு திமுக-காங்., கட்சிகள் வெகுமதி கொடுத்தார்கள். தி.மு.க ஆட்சிக் காலத்தில் மின்வெட்டு பிரச்சினைகளை மறந்தது உண்டா? தேசிய ஜன நாயக கூட்டணியின் அணுகுமுறையே கருணையுடன் கூடிய ஆட்சிதான். சுகாதார திட்டத்தை சாதித்துக் காட்டியபோதும் கண்ணியமான வாழ்வு வாழ்ந்தவர்களும், ஆயுஷ்மான் பாரத் திட்டத்தாலும், இதய நோய் சிகிச்சைக்கும் மூட்டுமாற்று சிகிச்சைக்குமான கருவிகள் விலை குறைக்கப்பட்ட போதும் பயனடைந்தவர்கள் ஏழை எளிய மக்கள் தான்.

தி.மு.க ஒட்டுமொத்த தமிழகத்திற்கான கட்சி என்று கூறும் தகுதியை இழந்துவிட்டது. அக்கட்சி முழுமையான பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்து 25 ஆண்டுகள் கடந்துவிட்டது. இப்போது தமிழகம் என்ற பிராந்தியத்திற்குள் உள்ள பிராந்திய கட்சியாக உள்ளது. திமுக-காங்கிரஸ் குடும்பத்தை முன்னுக்குக்கொண்டு வரத் துடித்து தோற்றுப்போயினர். இரு கட்சிகளும் உள் முரண்பாடு நோயால் சிக்கித் தவிக்கிறார்கள். நல்லாட்சி அவர்களால் தர முடியாது. ஆனால், தேசிய ஜன நாயக கூட்டணி குடும்பம் போல் ஒற்றுமையுடன் உள்ளது. தமிழகத்தின் நலன் மட்டுமே எங்கள் குறிக்கோள்.

பல ஆண்டுகள் மாநிலத்தில் தி.மு.க.,வும் மத்தியில் காங்கிரசும் ஆட்சி செய்தன. ஆனால், தேவேந்திர குல வேளாளர்கள் சமூகம் குறித்து அவர்கள் கவலைப்படவில்லை. மாநிலத்தில் ஆளும் அ.தி.மு.க அரசும், தேசிய ஜன நாயக கூட்டணி அரசும் தான் இவர்கள் தேவேந்திர வேளாளர்கள் என்று ஏற்றுக்கொண்ட அரசாக உள்ளது. தேசிய ஜன நாயக கூட்டணியானது அனைத்து மாநில விருப்பங்களை நிறைவேற்றும் அரசாகவும் தேசத்தின் வளர்ச்சியை மையமாக வைத்தும் செயல்படுகிறது. அவ்வாறே கோவையில் தேசத்தின் வளர்ச்சிக்காக பணிகள் துவக்கப்பட்டுள்ளன.இவ்வாறு பிரதமர் பேசினார்.

மேலும் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்ட பிரதமருக்கு பா.ஜ.க., சார்பில் வேல் ஒன்று பரிசளிக்கப்பட்டது. இந்த பொதுக்கூட்டத்தில், மத்திய இணை அமைச்சர் கிஷான் ரெட்டி, தமிழக தேர்தல் பொறுப்பாளர் ரவி, மாநில தலைவர் முருகன், முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் மற்றும் பா.ஜ., துணைத் தலைவர்கள் கலந்து கொண்டனர்.

Views: - 5

0

0