திருமணம் செய்வதாக கூறி பண மோசடி : பெண் தொழிலதிபரின் புகாரில் திமுக பிரமுகரின் மருமகன் கைது!!

Author: Udayachandran RadhaKrishnan
19 October 2021, 8:34 pm
Dmk Ex mla Son in Law arrest -Updatenews360
Quick Share

கோவை : கோவையைச் சேர்ந்த பெண்ணிடம் ரூ.1.5 கோடி மோசடி செய்த வழக்கில் தி.மு.க பிரமுகர் கோவை தங்கத்தின் மருமகன் அருண் பிரகாஷ் கைது செய்யப்பட்டுள்ளார்.

காளப்பட்டியை சேர்ந்த தொழிலதிபர் சிந்துஜா என்பவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு சென்னை டி.ஜி.பி அலுவலலத்தில் புகார் அளித்தார். அதன்படி, முன்னாள் எம்.எல்.ஏ.,வும் திமுக., பிரமுகரின் மருமகனுமான அருண் பிரகாஷ் தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறி ஏமாற்றி, ரூ.7 கோடி பணம் பறித்ததாகவும், அடித்து துன்புறுத்தியதாகவும், கோவை தங்கம் தனக்கு கொலை மிரட்டல் விடுப்பதாகவும் தெரிவித்திருந்தார்.

இதன் அடிப்படையில் அருண் பிரகாஷ் உட்பட மூவர் மீது கோவை கிழக்கு மகளிர் காவல் நிலையத்தில் 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இந்த சூழலில் செய்தியாளர்களைச் சந்தித்த திமுக பிரமுகர் கோவை தங்கம் தான் அந்த பெண்ணை பார்த்ததுகூட கிடையாது என்று கூறினார். மேலும், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சிலர் தன் மீது அவதூறு பரப்புவதற்காக அந்த பெண்ணை தூண்டி விட்டதாகவும். குற்றம் சாட்டியிருந்தார்.

தொடர்ந்து இந்த வழக்கின் விசாரணை நடைபெற்று வந்தது. இந்த சூழலில் சாய்பாபா காலனியை சேர்ந்த கோவை தங்கத்தின் மருமகன் அருண் பிரகாஷ் (வயது 41) சிந்துஜாவின் தந்தை செங்குட்டுவன் என்பவரிடம் ரூ.1.5 கோடி மோசடி செய்தது தெரியவந்தது. இதனைத்தொடர்ந்து ஐ.பி.சி 420 பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்த கோவை குற்றப்பிரிவு போலீசார், அருண் பிரகாசை இன்று கைது செய்துள்ளனர்.

முன்னதாக அருண்பிரகாஷ் தன்னை தாக்கியதாக சிந்துஜா அளித்த புகாரின் பேரில் அருண்பிரகாஷ் மீது கோவை கிழக்கு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டிருந்தது. ஜாமீனில் வெளியே வந்த அவர் தினமும் காவல் நிலையத்தில் கையெழுத்திட்டு வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Views: - 277

0

0