பேருந்து படியில் நின்று பயணம் செய்த திமுக எம்எல்ஏ : பள்ளி மாணவர்களின் ஆபத்தான பயணத்தை போக்க மினி பேருந்து இயக்கப்படும் என உறுதி!!

Author: Udayachandran RadhaKrishnan
12 March 2022, 4:12 pm
DMk Mla - Updatenews360
Quick Share

திருவள்ளூர் : படியில் நின்று பேருந்தில் ஆபத்தாக பயணம் செய்வதாக பள்ளி மாணவிகள் கோரிக்கை வைத்த நிலையில் திமுக எம்எல்ஏ பேருந்தில் கூட்டநெரிசலில் படிக்கட்டில் தொங்கியபடி பயணம் செய்தார்.

திருவள்ளூரை அடுத்த பூண்டியில் சமூக நலத்துறை சார்பில் தாலிக்கு தங்கம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பங்கேற்க வந்த திருவள்ளூர் தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ. வி.ஜி. ராஜேந்திரன் பயனாளிகளுக்கு தங்கம் வழங்கினார்.

பின்னர் அவர் அங்கிருந்து புறப்பட்டு அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு நடை பயணமாக சென்றார். அப்போது பஸ்சுக்காக காத்திருந்த மாணவிகள் எம்.எல்.ஏ. வி.ஜி.ராஜேந்திரனிடம் காலை மற்றும் மாலை நேரங்களில் பள்ளி மாணவ- மாணவிகள் வசதிக்காக கூடுதல் பஸ்களை இயக்க வேண்டும். போதிய பஸ் வசதி இல்லாததால் மாணவர்கள் படியில் தொங்கியபடி உயிருக்கு ஆபத்தான நிலையில் பயணம் செய்கிறார்கள் என்று தெரிவித்தனர்.

அந்த நேரத்தில் பூண்டியில் இருந்து புறப்பட வேண்டிய பேருந்து அங்கு வந்து நின்றது. அதில் மாணவர்கள் முண்டியடித்து ஏறினார்கள். அப்போது மாணவர்கள் பயணம் செய்த பஸ்சில் படிக்கட்டில் தொங்கியபடி எம்.எல்.ஏ. வி.ஜி.ராஜேந்திரன் மற்றும் தி.மு.க. நிர்வாகிகள் பயணம் செய்தனர்.

ஆரம்ப சுகாதார நிலையம் வரை அவர்கள் பஸ் படிக்கட்டில் தொங்கிய படியே பயணம் செய்தனர். இது அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது.

முன்னதாக தங்களது கிராமங்களுக்கு பள்ளிக்கூடம் வந்து செல்வதற்கு போதிய பேருந்து வசதிகள் இல்லாததால் இது போன்று பேருந்துகளில் முண்டியடித்துக்கொண்டு ஆபத்தான நிலையில் மாணவ மாணவியர்கள் பயணிக்க வேண்டியுள்ளது என்றும் சட்டமன்ற உறுப்பினர் இதில் கவனம் செலுத்தி மினி பேருந்துகள் கிராமங்களுக்கு இயக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.

Views: - 718

0

0