தீராத விளையாட்டு பிள்ளை உதயநிதி… திமுக ஆட்சியில் உள்ளவர்கள் முட்டாள்கள், மூடர்கள் : செல்லூர் ராஜூ விமர்சனம்!!

Author: Udayachandran RadhaKrishnan
20 January 2023, 11:38 am

சீனியர் அமைச்சர்களை பின்னுக்கு தள்ளி விட்டார் உதயநிதி- தீராத விளையாட்டு பிள்ளை அவர் என முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ விமர்சனம்.

மதுரை ஜெய்ஹிந்த்புரம் பகுதியில் அதிமுக சார்பில் முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின் 106 வது பிறந்தநாளை முன்னிட்டு நடைபெறும் பொதுக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ கலந்து கொண்டு பேசினார். இக்கூட்டத்தில் ஏராளமான அதிமுகவினர் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

பொதுக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ பேசுகையில், எம்ஜிஆர் 36 ஆண்டுகள் முன்பு மறைந்தாலும் அவர் பெயரை சொல்லாமல் தமிழகத்தில் யாராலும் அரசியல் நடத்த முடியவில்லை.

தற்போதைய முதல்வர் ஸ்டாலின் கூட எம்ஜிஆரை சித்தப்பா என்று கூறிதான் அரசியல் பேச வேண்டி உள்ளது. எம்ஜிஆரை சித்தப்பா என சொல்வது மக்களை ஏமாற்ற இதையும் ஒரு வழியாக பயன்படுத்த தான்.

தமிழகத்தில் யாராக இருந்தாலும் அரசியல் செய்ய எம்ஜிஆர் பெயரை பயன்படுத்தியே ஆக வேண்டும். ஆனால் கலைஞர் பெயரை சொல்லி அரசியல் செய்ய முடியுமா. கப்பக்கிழங்கையும், பலாக்கொட்டையையும் சாப்பிட வைத்தவர் கலைஞர்.

தமிழகத்திற்கான உரிமையை பெற்றுத்தராத ஆட்சி திமுக. நல்ல நல்ல கருத்துக்களை தன் படம் மூலம் எடுத்து சொன்னவர் எம்ஜிஆர்.
எம்ஜிஆர் மறைந்தார் என்று சொன்னால் கிராமத்தில் இப்போதும் கூட யாரும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.

அதிமுகவினர் யாருடைய வாரிசு? யாரும் நடிகர் விஜயோட வாரிசு என சொல்லி விடாதீர்கள். நாம் ஜெயலலிதா எம்ஜிஆரின் வாரிசு. அரிதாரம் பூசியவன், நடிகன் என எம்ஜிஆரை கேலி பேசினாலும் கேலி பேசியவர் குடும்பத்தையும் வாழ வைத்தார்.

அரசியலில் தங்கள் வாரிசுகளை அறிமுகப்படுத்தாதவர்கள் எம்ஜிஆரும், ஜெயலலிதாவும். கோட்டை பக்கமே உறவுகளை வரவிடாமல் செய்தவர்கள் எம்ஜிஆரும், ஜெயலலிதாவும். ஆனால் கலைஞர் குடும்ப ஆட்சி நடத்தியவர்.

மக்களை தான் தன் வாரிசுகளாக எம்ஜிஆரும், ஜெயலலிதாவும் நினைத்தனர். ஜெயலலிதா போல உத்திரபிரதேச முதல்வர் மாணவர்களுக்கு லேப்டாப் கொடுப்பதாக சொன்னார். ஆனால் அவரால் கொடுக்க முடியவில்லை.

ஜெயலலிதா மந்திரி சபையில் 3வது 6வது இடத்தில் இருந்த எடப்பாடி எல்லோரும் மூக்கில் விரல் வைக்கும் வகையில் 4 ஆண்டு காலம் சிறப்பான ஆட்சியை நடத்தி காட்டினார்.

பொய்மூட்டைகளை சட்டமன்றத்திலும், பொதுக்கூட்டத்திலும் அவிழ்த்து விடுகிறார்கள் திமுக. தற்போது ஆட்சியில் இருக்கும் முட்டாள்கள், மூடர்கள், மந்திரிகள் நீட் விவகாரத்தில் என்ன நடந்தது என்று தெரியாமல் பேசி கொண்டிருந்தார்கள்.

மத்தியில் திமுக கூட்டணியில் இருந்த போது நீட் தேர்வுக்கு கையெழுத்து போட்டுவிட்டு, நீட்டை சபையில் வரவேற்று பேசிவிட்டு, கூட்டணியில் உள்ள ப.சிதம்பரத்தின் மனைவி வாதாடி நீட்டை கொண்டு வந்து மாங்காய் பார்ப்பது போல பார்த்துவிட்டு நீட்டை நுழைத்து விட்டார்கள்.

திமுகவில் 35 பேர் அமைச்சராக இருந்தாலும் 10வது அமைச்சராக உதயநிதி உள்ளார். சீனியர் அமைச்சர்களை எல்லாம் பின்னுக்கு தள்ளி விட்டார் உதயநிதி ஸ்டாலின்.

என்மகனோ, உறவுகளோ கட்சிக்கும் ஆட்சிக்கும் வரமாட்டார்கள் என சொன்னவர் ஸ்டாலின். அதேபோல கட்சியில் மூத்தவர்கள் இருக்கும் போது நான் எப்படி அமைச்சராக முடியும் பேசியவர் உதயநிதி.

ஆனால் ஆட்சியில் அமைச்சராக பொறுப்பேற்று அப்பனுக்கு மகன் தப்பாமல் பிறந்து இருக்கிறார். திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு பற்றி பேசினால் சந்தி சிரிக்கிறது. நம்பர் ஒன் முதல்வர் ஸ்டாலின் என்கின்றனர். ஆனால் எதில் முதல் மாநிலம் என தெரியவில்லை.

தமிழக மக்களை ஏமாற்றி, பொய்யை சொல்லி புரட்டை சொல்லி எப்படியெல்லாம் ஏமாற்ற வேண்டுமோ அப்படியெல்லாம் தமிழக மக்களை ஏமாற்றி சொகுசு வாழ்க்கை வாழ்ந்து கொண்டுள்ளனர் திமுக அமைச்சர்கள். இவர்கள் ஏமாற்றுவதை எங்க போய் சொல்வது.

சம்சாரம் இல்லையென்றாலும் மின்சாரம் வேண்டும் என்ற காலத்தில் மின்சார கட்டணத்தை உயர்த்தி விட்டனர். தீராத விளையாட்டு பிள்ளை உதயநிதி என்று கையில் செங்கலை தூக்கினாரோ அன்றில் இருந்தே செங்கல் விலையும் உயர்ந்து விட்டது.

போதைப்பொருள் கடத்தல் மாநிலமாக திமுக தமிழகத்தை மாற்றிவிட்டார்கள். காக்கைக்கு தன் குஞ்சு பொன் குஞ்சு என்பது போல தன் மகனை புகழ்ந்து பேசுகிறார் ஸ்டாலின்.

கம்யூனிஸ்ட்டுகள், திருமாவளவன், வைகோ, முத்தரசன், பாலகிருஷ்ணன் திமுக ஆட்சியில் வாயில் திண்டுக்கல் பூட்டு போட்டுவிட்டார்கள்.

அதிமுக கட்அவுட் வைக்க கூடாது, குழாய் கட்டக்கூடாது என காவல்துறை நெருக்கடி கொடுத்ததாக கூறினார்கள். ஆனால் கம்யூனிஸ்ட்டுகளோ, திமுகவோ பத்து நாட்களுக்கு முன்பாகவே கட்அவுட்டும், ஒலிபெருக்கியும் கட்டி கொள்ளலாம்.

அமைச்சர்களில் 27 வது இடத்தில் நிதியமைச்சர் பிடிஆர் உள்ளார். வெளிநாட்டில் படித்து, 4 கம்பெனிகளை பார்த்த பிடிஆர்.பழனிவேல் தியாகராஜனையே பின்னுக்கு தள்ளி 10வது இடத்தில் உதயநிதியை வைத்துள்ளனர்.

என் மேற்கு தொகுதி உலகளவில் தெரிகிறது. ஆனால் மதுரையில் இப்போது இரண்டு அமைச்சர்கள் இருந்தும் ஒன்றும் செய்யவில்லை.

வரலாற்று சிறப்புமிக்க தமிழக சட்டமன்றத்தில் விரும்பத்தகாத நிகழ்வுகளை நிகழ்த்தி சட்டமன்றத்தில் கரும்புள்ளி ஏற்படுத்திய திமுகவை விட்டு வீட்டுக்கு அனுப்பும் காலம் மிக விரைவில் வர உள்ளது.

ஒருமுறை ஆட்சிக்கு வந்த திமுக மறுமுறை ஆட்சிக்கு வந்ததாக சரித்திரம் இல்லை. அதை மக்கள் நிறைவேற்றுவார்கள் என பேசினார்.

  • G.V. Prakash understood Sainthavi at the time of separation.. Affection blossomed during the divorce case பிரியும் நேரத்தில் சைந்தவியை புரிந்து கொண்ட ஜி.வி பிரகாஷ்.. விவாகரத்து வழக்கில் மலர்ந்த பாசம்!