ஸ்டாலினின் உத்தரவை மதிக்காத திமுக பெண் நிர்வாகி… கம்யூனிஸ்ட்டுக்கு கல்தா கொடுத்து நகர்மன்ற தலைவராக பதவியேற்பு

Author: Babu Lakshmanan
10 March 2022, 5:55 pm
Quick Share

குமரி மாவட்டத்தில் புதிய நகராட்சியான கொல்லங்கோடு நகராட்சியில் திமுக தலைமையின் உத்தரவை மீறி திமுக நகர்மன்றத் தலைவராக திமுக பெண் பிரமுகர் பதவியேற்றுக் கொண்டார்.

தமிழகத்தின் கடைக்கோடி நகராட்சியும் கன்னியாகுமரி மாவட்டத்தின் புதிய நகராட்சியுமான கொல்லங்கோடு நகராட்சியில் நடைபெற்று முடிந்த நகர்மன்ற தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற ராணி ஸ்டீபன் திமுக, காங்கிரஸ் பாஜக உறுப்பிர்களின் ஆதரவுடன் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

திமுக தலைமை கூட்டணி கட்சியான கம்யூனிஸ்ட் கட்சிக்கு கொல்லங்கோடு நகராட்சியை ஒதுக்கீடு செய்துள்ள நிலையில், கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில் நின்று வெற்றிபெற்ற திமுகவினர் பதவி விலக வேண்டுமென திமுக தலைமை அறிவித்திருந்தது. மேலும் இது தொடர்பாக முதலமைச்சர் ஸ்டாலின் நேரடியாக வெற்றி பெற்ற திமுகவினர் பதவி விலகவேண்டும் என பேசி இருந்தார்.

இந்நிலையில்  கொல்லங்கோடு நகராட்சியில் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட திமுக கட்சியை சேர்ந்த ராணி ஸ்டீபன், திமுக தலைமையின் முடிவை ஏற்காமல் இருந்துள்ளார். அதைதொடர்ந்து, இன்று கொல்லங்கோடு நகராட்சியில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில், நகராட்சியின் நகர்மன்ற தலைவராக ராணி ஸ்டீபன் பதவியேற்றார். இந்த பதவியேற்பு விழாவில் திமுக, காங்கிரஸ், பாஜக உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். ஆனால் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்கள் நகர்மன்ற தலைவரின் பதவியேற்பு நிகழ்ச்சியை புறக்கணித்தனர்.

திமுக தலைமையின் உத்தரவை மீறி திமுக கட்சியை சேர்ந்தவர் நகர்மன்ற தலைவராக பதவியேற்றது கட்சியனரிடையே சலசலப்பை ஏற்படுத்தியது. இதேபோல் மாவட்டத்தில் திற்பரப்பு, குலசேகரம், பொன்மனை உள்ளிட்ட பல்வேறு பேரூராட்சிகளிலும் தலைவர்கள் பதவியேற்றுக்கொண்டனர்.

Views: - 735

0

1