பாகுபலி யானையை எதிர்த்து நின்று போராடிய செல்லப்பிராணி… வீடியோ எடுத்து வைரலாக்கிய பொதுமக்கள்…!!

Author: Babu Lakshmanan
3 June 2022, 9:06 am
Quick Share

கோவை : ஊருக்குள் நுழைந்த காட்டு யானை பாகுபலியை நுழைய அனுமதிக்காமல் எதிர்த்து நின்று போராடிய நாயின் செயல் வைரலாகி வருகிறது.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் வனப்பகுதியில் இருந்து வெளியேறி அடிக்கடி ஊருக்குள்ளும் விளை நிலங்களுக்குள் புகுந்து காட்டு யானை பாகுபலி நடமாடி வருவதால் பொதுமக்கள் அச்சமடைந்து வருகின்றனர்.

கடந்த ஒரு மாதகாலமாக சமயபுரம், தாசம் பாளையம், ஓடந்துரை, ஊமப்பாளையம், குரும்பனூர் பகுதிகளில் தொடர்ந்து கிராமங்களில் காட்டுயானை பாகுபலி நடமாடி வருகிறது. இந்த நிலையில், இன்று இரவு நெல்லிமலை வனத்தில் இருந்து வெளியேறி சமயபுரம் பகுதியில் காட்டு யானை பாகுபலி ஊருக்குள் புகுந்தது.

நெல்லிமலை வனப்பகுதியில் இருந்து தேக்கம் பட்டி சாலையினை கடந்து தாசம் பாளையம் கிராமத்தில் யானை நுழைந்த போது, அங்கிருந்த நாய் ஒன்று காட்டுயானை பாகுபலியை ஊருக்குள் நுழைய விடாமல் குரைத்தபடியே தடுத்து நிறுத்த முயன்றது.

கானகத்தின் பெரிய உருவமான யானையை கண்டு சற்றும் அஞ்சாத அந்த நாய், யானையை பார்த்து குரைத்தப்படியே தடுக்க முயன்ற போது, யானை நாயை தாக்க முயன்றது. இருப்பினும், முயற்சியை கைவிடாது, விரட்டி சென்ற அந்த நாய் அந்த கிராம மக்களுக்கும் செய்தி சொல்லியபடி சென்றது. இதனையடுத்து, கிராமமக்கள் சுதாரித்து காட்டுயானை வருவதை அறிந்து வீட்டினுள் சென்றனர்.

தன்னைவிட பெரிய உருவம் என்று சற்றும் அஞ்சாமல் காட்டு யானையை எதிர்த்து நின்று தடுக்க முயன்ற நாயின் தைரியம் அனைவரும் பாராட்டினர்.

Views: - 519

0

0