3 அலையை தாண்டிட்டோம்… 4வது அலையை எதிர்க்க ரெடியா இருங்க : சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் எச்சரிக்கை!!

Author: Udayachandran RadhaKrishnan
13 May 2022, 8:15 pm
Radhakrishnan Warn -Updatenews360
Quick Share

கொரோனா விவகாரத்தில் இன்னும் நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் – கோவையில் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் பேட்டி.

தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்டார். தொடர்ந்து தமிழ்நாடு நகர்ப்புற சுகாதார திட்டத்தின் கீழ் கோவை அரசு மருத்துவமனையில் கட்டப்பட்டு வரும் புதிய கட்டிடத்தை பார்வையிட்டு அதிகாரிகளிடம் கேட்டறிந்து அறிவுரை வழங்கினார்.

மேலும் புதிய கோவிட் ஐ. சி. யு பிரிவு, குழந்தைகளுக்கான ஐ. சி. யு பிரிவு, இருதய நோய் பிரிவு உள்ளிட்ட அவசர சிகிச்சை பிரிவுகளில் ஆய்வு மேற்கொண்டு.
மருத்துவக்குழுவினர்களுக்கு அறிவுரை வழங்கினார்.

இதைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர் பேசும்போது, தமிழக முதல்வர் சுகாதாரத் துறைக்கு என 17 தலைப்பில் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார்.

நகர்ப்புற ஆரம்ப சுகாதார நல்வாழ்வு மையங்கள் மேம்படுத்த 208 நல்வாழ்வு மையங்களை அறிவித்துள்ளார்.கோவிட் காலத்தில் ஓரளவுக்கு கட்டுப்பாட்டில் வைத்தால் கூட மருத்துவ கட்டமைப்பை தொடர்ந்து மேம்படுத்திக் கொண்டே இருக்க வேண்டும் என்பது பாடமாக உள்ளது.

ஜெய்க்கா திட்டத்தில் கோவை அரசு மருத்துவமனையில் 12 அறுவை சிகிச்சை அரங்குகள் உடன் தீக்காய சிகிச்சை பிரிவு, குடல்நோய் துறை, நரம்பியல் துறை, எலும்பியல் துறை போன்ற துறைகள் பல்வேறு வசதிகளுடன் தயாராகி வருகிறது.

கோவை அரசு மருத்துவமனையில் 32 ஹைபிரீட் ஐ.சி.யு படுக்கைகள் பணி முடியும் தருவாயில் உள்ளது. அதை இன்று பார்வையிட்டோம். தமிழ் நாட்டில் கோவிட் 100 க்கு கீழே பதிவாகி வருகிறது. கடல் கொந்தளிப்பு போல் இருந்த மூன்று அலையை நாம் தாண்டி விட்டோம்.

கரை ஒதுங்கும் நேரத்தில் கவனக்குறைவாக இருக்கக்கூடாது. மூன்று அலையைத் தாண்டி விட்டோம் நான்காவது அலையில் மாட்டிக் கொள்ளக்கூடாது.
மூன்றாம் அலை பல்வேறு விழிப்புணர்வு மூலம் தடுக்கப்பட்டது. ஆனாலும் வெளிநாட்டில் இன்னும் தாக்கம் ஓயவில்லை.

டெல்லியில் தொடர்ந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாதிப்பு பதிவாகியுள்ளது.
ஐ ஐ டி, சத்யசாய் யூனிவர்சிட்டி ஆகியவற்றில் அதிகரித்த பாதிப்பை ஜீரோ ஆக்கினோம்.

இது இரண்டும் நமக்கு என்ன தெரிவிக்கிறது என்றால் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். கவனக்குறைவாக இருக்க கூடாது. தடுப்பூசியில் தமிழ் நாட்டில் 19 வயதிற்கு மேல் 94 விழுக்காட்டை எட்ட உள்ளோம். 2 வது தவணை எடுத்துக்கொள்ள வேண்டியவர்கள் 1.29 கோடி பேர் உள்ளனர். முதல் தவணை 45 லட்சம் எடுக்காதவர்கள் உள்ளனர். பூஸ்டர் டோஸ் எடுக்காதவர்கள் 10 லட்சம் பேர் உள்ளனர்

.

மருத்துவ கட்டமைப்பை வலுப்படுத்த தொடர்ந்து ஆய்வு மேற்கொள்ளப்படும்.
சவர்மா விவகாரத்தில் நன்றாக சமைத்த எந்த உணவையும் தடை செய்ய முடியாது என்றார். பழங்கள் வாங்கும் பொழுது பொது மக்கள் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். தவறான முறையில் பழங்களை பழுக்கவைப்பதை தடுக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம்.

கேரளாவில் தக்காளி காய்ச்சல் குறித்து அரசின் செயலாளரிடம் இன்று பேசினோம். இதற்கான விளக்கம் அளித்துள்ளனர். இது சாதாரண நோய். இதை கோவிட் போல பீதி கிளப்ப வேண்டிய தேவையில்லை. தமிழ்நாட்டில் இந்த பாதிப்பு இல்லை என தெரிவித்துள்ளனர்.

13 எல்லையோர மாவட்டங்களில் கண்காணிப்பு திட்டம் உள்ளது.மூன்றாவது அலையில் சுலபமாக வெளிவந்ததற்கு காரணம் தடுப்பூசி. ஊட்டி பழங்குடியின மாணவர்கள் தடுப்பூசி போட பாடம் தெரிவிக்கின்றனர். பழங்குடியினர் 100 விழுக்காடு தடுப்பூசி போட்டு விட்டனர்.கோவை அரசு மருத்துவமனையில் தூய்மைப் பணியாளர்களுக்கு குறைந்த பட்ச கூலி கொடுத்ததற்கு எஸ்சி எஸ்டி ஆணையம் நோட்டீஸ் வழங்கி உள்ளது குறித்த கேள்விக்கு, குறைந்தபட்ச கூலி தவறுதலாக கொடுக்கப்பட்டால் சரி செய்யப்படும். இது ஆட்சியர் முடிவு செய்யக் கூடியது. அதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.

கோவை அரசு மருத்துவமனையில் நடைபெற்ற இந்த ஆய்வில் மாவட்ட ஆட்சியர் சமீரன், மருத்துவமனையின் முதல்வர் நிர்மலா உள்ளிட்ட பல அதிகாரிகள் உடன் இருந்தனர்.

Views: - 599

0

0