‘நா லோக்கல் ஆளு…எங்கிட்டயே காசு கேக்குறயா’: ‘ஓசி’ டீ கொடுக்காததால் ஆத்திரம்…கடையை அடித்து நொறுக்கிய போதை ஆசாமி!!

Author: Aarthi Sivakumar
11 September 2021, 6:29 pm
Quick Share

சென்னை: குடித்த டீக்கு காசுகேட்ட ஆத்திரத்தில் கடையை அடித்து நொறுக்கிய போதை ஆசாமியின் வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

சென்னை நாவலூர் அருகே ரியாஸ் என்பவர் டீக்கடை நடத்தி வருகிறார். கேரளா மாநிலத்தைச் சேர்ந்த ரியாஸ் அந்த பகுதியில் கிட்டத்தட்ட மூன்று வருடமாகக் கடை நடத்தி வருகிற நிலையில் டீக்கடை உள்ள அதே கட்டிடத்தில் தினேஷ் என்பவர் சிறிய பெட்டிக்கடை வைத்ததாகக் கூறப்படுகிறது.

இதனால் அடிக்கடி தினேஷ் ரியாஸின் கடைக்கு டீ குடிக்க செல்வது வழக்கமாக வைத்துள்ளார். டீ குடித்துவிட்டு காசு கொடுக்காமல் பிறகு தருகிறேன் என சொல்லிவிட்டு செல்வதை வாடிக்கையாகக் கொண்டுள்ளார். இந்நிலையில், பொறுத்து பொறுத்து பார்த்த ரியாஸ், தினேஷிடம் எவ்வளவு நாள்தான் குடிச்ச டீக்கு காசு கொடுக்காமல் ஏமாற்றுவாய் எனக்கேட்டுள்ளார்.

அதற்கு தினேஷ் நான் லோக்கல் ஆளு என்னிடமே காசு கேட்கிறாயா என மிரட்டும் தொனியில் பேசிவிட்டுச் சென்றுள்ளார். இப்படி பலமுறை டீ குடித்துவிட்டு காசு தராததால் கடைக்காரரான ரியாஸ் கட்டிட உரிமையாளரிடம் இதுகுறித்து புகார் தெரிவித்துள்ளார். இதனையடுத்து கட்டிட உரிமையாளர் தினேஷிடன் இதெல்லாம் தவறு என எச்சரித்துள்ளார்.

இதனால் ஆத்திரம் கொண்ட தினேஷ், ரியாஸின் கடைக்கு மதுபோதையில் சென்று என்னைப்பற்றியே புகார் செய்கிறாயா என ரியாஸை தாக்கியதோடு, கடையையும் அடித்து நொறுக்கியுள்ளார். இது தொடர்பாக கேளம்பாக்கம் காவல் நிலையத்தில் புகாரளிக்கப்பட்ட நிலையில் அந்த பகுதியில் வைக்கப்பட்டிருந்த சிசிடிவியில் பதிவான காட்சிகள் அடிப்படையில் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

Views: - 248

0

0