‘சிப்ஸ் ஏன் இவ்வளவு தூளாக இருக்கு..?’…. சினிமா தியேட்டர் ஊழியரை தாக்கிய போதை இளைஞர்கள்.. வைரலாகும் வீடியோ!!

Author: Babu Lakshmanan
14 May 2024, 2:53 pm

சிப்ஸ் ஏன் தூளாக உள்ளது என கேட்டு சினிமா தியேட்டர் ஊழியரை போதை இளைஞர்கள் தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி கச்சேரி சாலையில் உள்ள திரையரங்கில் நேற்று முன்தினம் இரவு காட்சியின் போது, சுமார் 50க்கும் மேற்பட்டோர் படத்தை கண்டு களித்து வந்தனர். இந்த நிலையில் படத்தின் இடைவேளையின் போது, கிரிசமுத்திரம் பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் சிலர் கேண்டினில் தின்பண்டங்கள் வாங்க சென்றபோது, சிப்ஸ் ஏன் தூளாக உள்ளது என கேட்டதாகவும், அதற்கு ஊழியர்கள் மாற்றி கொடுத்து விடுகிறோம் என்று சொல்லியும், போதையில் இருந்த இளைஞர்கள் சிலர் கேண்டினில் இருந்த ஊழியரை தாக்கியுள்ளனர்.

இதனை கண்டு தியேட்டர் ஊழியர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து அந்த இளைஞர்களை வெளுத்து வாங்கிய காட்சி சினிமா படத்தில் வரும் காட்சிகளையே மிஞ்சியுள்ளது. இதனால், பொழுதுபோக்கிற்காக படத்தை காண வந்த பொதுமக்கள் நிம்மதியாக படம் பார்க்க முடியாமல் அச்சமடைந்தனர்.

மேலும் படிக்க: இரவாகியும் வீடு திரும்பாத பள்ளி மாணவர்கள்.. கிணற்றை எட்டிப் பார்த்த பெற்றோருக்கு ஷாக்…சோகத்தில் மூழ்கிய கிராமம்!!!

பின்னர், தகவல் அறிந்த தியேட்டர் மேலாளர் இரு தரப்பினரையும் சமாதானம் செய்த போது, போதை இளைஞர்களுடன் வந்த மற்ற இளைஞர்கள் தாங்கள் செய்தது தவறுதான் என ஒப்புக் கொண்டு சென்றதாக கூறப்படும் நிலையில், மோதல் நடைபெற்ற வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி பெரும் பரபரப்பு ஏற்படுத்தி வருகிறது.

நாளுக்கு நாள் கஞ்சா மற்றும் மது போதையில் இளைஞர்கள் சீரழிந்து வரும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும், இது போன்ற சம்பவங்கள் பல பகுதிகளில் நடைபெறுவதால் பொதுமக்களும் அச்சத்துக்குள் வாழ்ந்து வரும் சூழல் நிலவி வருவதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

  • tourist family negative review from valaipechu team படம் வர்ரதுக்கு முன்னாடியே நெகட்டிவ் விமர்சனம்; டூரிஸ்ட் ஃபேமிலி குறித்து வாய்விட்ட பிரபலம்!