சந்தி சிரிக்கும் சட்டம் ஒழுங்கு.. 2026ல் வெற்றி கூட்டணி – இபிஎஸ் சூளுரை!

Author: Hariharasudhan
24 February 2025, 1:42 pm

மிழ்நாடு முழுவதும் பெண் குழந்தைகளுக்கும். தாய்மார்களுக்கும், ஏன் காவல் பணியில் ஈடுபட்டிருக்கும் பெண்களுக்கும் கூட பாதுகாப்பற்ற நிலை உள்ளதாக எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

சென்னை: இன்று, மறைந்த தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 77வது பிறந்தநாள் விழா கொண்டாடப்படுகிறது. இதனை ஒட்டி, அதிமுக பொதுச் செயலாளரும், சட்டமன்ற எதிர்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி தனது எக்ஸ் தளப் பக்கத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்த அறிக்கையில், “எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவை இதயத்தில் கொண்டு வாழ்ந்து வரும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக உடன்பிறப்புகளுக்கும், தமிழ் நாட்டு மக்களுக்கும் என் அன்பு வணக்கம். நம் நெஞ்சமெல்லாம் நிறைந்திருக்கும் ஜெயலலிதாவின் 77-ஆவது பிறந்த நாளை எழுச்சியுடன் கொண்டாடும் இந்த வேளையில், அவரது புகழ் ஓங்குக என்ற வாழ்த்தொலி நம் உள்ளத்திலும், இல்லத்திலும் எதிரொலிக்கிறது.

பெண்களுக்கு பெருமை சேர்க்கும் வகையிலும், பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்திடும் வகையிலும், எல்லா நேரத்திலும் தாயாகவும், சகோதரியாகவும், உற்ற தோழமை கொண்டும், தனி வாழ்விலும், பொது வாழ்விலும் இமயம்போல் உயர்ந்து விளங்கிய ஜெயலலிதா ஒரு நாளின் ஒவ்வொரு நிகழ்விலும், நகர்விலும் தமிழ் நாட்டு மக்கள் நினைத்துப் பார்க்கின்றார்கள்.

Edappadi Palaniswami

அவருடைய அரசு எவ்வளவு எளிமையாகவும், மக்களின் தேவை அறிந்தும் நடைபெற்றது என்பதையும்; இன்றைய இருள் மிகுந்த விடியா திமுக அரசு எப்படியெல்லாம் மக்களை அலைக்கழித்து, அஞ்சி, அஞ்சி வாழச் செய்கிறது என்பது பற்றியும், தமிழ் நாடு முழுவதும் மக்கள் பேசுகிறார்கள். எப்போது தேர்தல் வரும்,ஜெயலலிதாவின் அரசை எப்போது மீண்டும் அமைக்க வாய்ப்பு கிடைக்கும் என்று மக்கள் காத்துக் கொண்டிருக்கின்றார்கள்.

மிகச் சிறந்த நிர்வாகியாகவும், மத்திய-மாநில உறவுகளை எப்படி கட்டமைக்க வேண்டும் என்பதில் தெளிவான சிந்தனையும், செயல் திட்டமும் கொண்டவராகவும், தமிழ் நாட்டின் உரிமைகளை எப்படிப் பாதுகாக்க வேண்டும் என்பதற்கு எடுத்துக்காட்டாகவும் திகழ்ந்தவர்.

பெண் கல்வி, பெண் விடுதலை, பெண்களுக்கு சம உரிமை, பெண்களின் பாதுகாப்பு, பெண்களுக்கான சமூக, பொருளாதார மேம்பாடு ஆகியவற்றில் தனி கவனம் செலுத்திய நம் புரட்சித் தலைவி அம்மா அவர்கள் பெண்களுக்காகவும், ஒட்டுமொத்த தமிழ்ச் சமூகத்தின் வளர்ச்சிக்காகவும் கொண்டு வந்த அற்புதமான திட்டங்களையெல்லாம் இந்த விடியா அரசு சீர்குலைத்து நிறுத்திவிட்டது.

திமுக – காங்கிரஸ் கூட்டணியின் நெருக்கடி: தமிழ் நாட்டில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி நடைபெற்ற நேரத்தில் எல்லாம், காங்கிரஸ்-திமுக கூட்டணியின் மத்திய அரசு நிதி நெருக்கடியைக் கொடுத்தும்; மாநில அரசின் கோரிக்கைகளை கிடப்பில் போட்டும் இம்சை அரசாக இருந்ததை அவ்வளவு எளிதாக மறந்துவிட முடியாது.

பேரறிஞர் அண்ணாவின் மாநில சுயாட்சிக் கொள்கைகளை காற்றில் பறக்கவிட்டுவிட்டு, ஜெயலலிதாவின் அரசை நிதி நெருக்கடிக்குத் தள்ளி, நிலைகுலையச் செய்ய வேண்டும் என்ற கெடுமதியுடன், திமுக அங்கம் வகித்த மத்திய அரசு தொடர்ந்து செயல்பட்டது.

இருந்தபோதிலும், தனது நிர்வாகத் திறமையால் அனைத்து சவால்களையும் சமாளித்து ஏராளமான நலத் திட்டங்களை தமிழ் நாட்டு மக்களுக்கு வழங்கியவர் புரட்சித் தலைவி அம்மா அவர்கள். அம்மா அவர்களின் நல்லாசியோடு செயல்பட்ட கழக அரசும் அந்த முயற்சியில் தொய்வின்றி செயலாற்றியது.

இன்றைக்கு, விடியா திமுக அரசு இருமொழிக் கொள்கையை காப்பாற்றக்கூட திறனற்றதாக உள்ளது. மிகப் பெரிய எண்ணிக்கையில் நாடாளுமன்ற இரு அவைகளிலும் உறுப்பினர்களைக் கொண்டதாக இருந்தாலும், தமிழ் நாட்டின் உரிமைகளைக் காப்பாற்றுவதற்கு திறனற்ற அரசாக இருந்து கொண்டிருக்கிறது.

பொழுது விடிந்து, பொழுது போனால், தமிழ்நாடு முழுவதும் பெண் குழந்தைகளுக்கும். தாய்மார்களுக்கும், ஏன் காவல் பணியில் ஈடுபட்டிருக்கும் பெண்களுக்கும் கூட பாதுகாப்பற்ற நிலையும், பாலியல் வன்கொடுமைகளும் அரங்கேறிய வண்ணம் உள்ளன.

நான்கு திசைகளிலும் தினந்தோறும் கள்ளச் சாராயம், போதைப் பொருள் புழக்கம், வெட்டு, குத்து, கொலை என்று சட்டம்-ஒழுங்கு சந்தி சிரிக்கும் நிலை ஏற்பட்டிருக்கிறது. உண்மைகளை எடுத்துச் சொல்வோருக்கு வாய்ப் பூட்டு போடப்படுகிறது.

இந்த அவலங்களை எல்லாம் மாற்ற வேண்டும்; தமிழ் நாடு அமைதிப் பூங்காவாகத் திகழ வேண்டும்; தமிழ் நாடு பொருளாதார வளர்ச்சி அடைந்து மக்கள் மகிழ்ச்சியாக வாழ வழிவகை செய்ய வேண்டும் என்றால், அதற்கு ஒரே தீர்வு எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவின் நல்லாட்சிகளைப் போல, மீண்டும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி அமைய வேண்டும்.

நான் செல்லும் இடங்களில் எல்லாம் வெள்ளம்போல் திரண்டு வரும் கழக உடன்பிறப்புகளையும், தமிழ் நாட்டு நலன் நாடும் மக்களையும் பார்க்கையில், கழக ஆட்சியே அடுத்து மலரப்போகும் நல்லாட்சி என்ற நம்பிக்கை என்னுள் ஆழமாக வேரூன்றி இருக்கின்றது.

இன்றைக்கு, நம்முடைய கழகம் கொள்கை வீரர்களின் கூடாரமாகத் திகழ்கிறது. பதவிக்காகவும், பணம் சேர்ப்பதற்காகவும் கழகத்தைக் காட்டிக் கொடுக்கத் தயாராகி இருந்த திரைமறைவு அரசியல் பேராசைக்காரர்களின் கனவுகளும், கற்பனைகளும் காகித ஓடம் போல் கால வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்டுவிட்டன.

ஓநாயும், வெள்ளாடும் ஒன்றுபட்டு இருக்க முடியுமா ? களைகளும், பயிர்களும் ஒன்றாக வளர்ந்து வெள்ளாமை ஆகுமா? விசுவாசியும், துரோகியும் தோளோடு தோள் நிற்க முடியுமா? முடியாது, முடியாது என்று நீங்கள் முழங்குவது கேட்கிறது.

“அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்தான் உண்மையான மக்கள் இயக்கம்; மக்களுக்காகத் தன்னை அர்ப்பணித்துக்கொண்ட இயக்கம்; இந்த இயக்கம் இருக்கின்றவரை, நான் இருக்கின்றவரை இந்த இயக்கம் தமிழர்கள் வாழ்வு வளம்பெற செயல்படும்.

இதையும் படிங்க: ரஜினி – ஜெயலலிதா நடிக்க இருந்த படம் இதுவா? நடிக்காததற்கு ஜெயலலிதாவே சொன்ன காரணம்!

எனக்குப் பின்னாலும் இன்னும் எத்தனை நூற்றாண்டுகள் வந்தாலும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் மக்களுக்காகவே இயங்கும்” என்று ஜெயலலிதா சூளுரைத்தார். அந்த வெற்றி முழக்கத்தை, கொள்கைப் பிரகடனத்தை செயல்படுத்திட நாம் அனைவரும் உறுதி ஏற்க வேண்டிய நாள் தான் ஜெயலலிதா பிறந்தநாள்.

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான சிறப்பு மிக்க வெற்றிக் கூட்டணி அமையப் போகிறது. வியக்கத்தக்க வெற்றிகளை நாம் பெறப்போகிறோம். அதற்கேற்ப அயராது உழைப்போம், அம்மாவின் உண்மைத் தொண்டர்களாகப் பணியாற்றுவோம் என்று அனைவரையும் அன்போடு கேட்டுக்கொள்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.

  • G.V. Prakash understood Sainthavi at the time of separation.. Affection blossomed during the divorce case பிரியும் நேரத்தில் சைந்தவியை புரிந்து கொண்ட ஜி.வி பிரகாஷ்.. விவாகரத்து வழக்கில் மலர்ந்த பாசம்!