‘ஆ..ஊன்னா என்னா?’.. ஆட்டம் கண்ட சட்டப்பேரவை.. இபிஎஸ் பேச்சால் பரபரப்பு!

Author: Hariharasudhan
9 December 2024, 3:02 pm

டங்ஸ்டன் சுரங்கம் அமைப்பதற்கு எதிராக கொண்டு வந்த தீர்மானத்தின் மீது ஸ்டாலின், இபிஎஸ் மற்றும் துரைமுருகன் ஆகியோர் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

சென்னை: தமிழக சட்டப்பேரவை இன்று (டிச.09) கூடியது. இந்த நிலையில், கேள்வி நேரத்தின் போது, மதுரை மாவட்டத்தில் இந்துஸ்தான் ஜிங்க் லிமிடெட் நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட டங்ஸ்டன் சுரங்க உரிமையை உடனடியாக ரத்து செய்யவும், சம்பந்தப்பட்ட மாநில அரசின் அனுமதியின்றி சுரங்க உரிமை ஏல நடவடிக்கைகளை மேற்கொள்ளக் கூடாது என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தீர்மானம் கொண்டு வந்தார்.

இந்த தீர்மானத்தை அமைச்சர் துரைமுருகன் வழிமொழிந்தார். அப்போது இதன் மீதான விவாதத்தின் போது பேசிய எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, “இந்த தீர்மானத்தில் என்ன இருக்கிறது என்ற முழு விவரங்கள் கூட எங்களிடம் சொல்லாமால் நாங்கள் ஆமாம் போட வேண்டுமா? இந்த டங்ஸ்டன் விவகாரத்தினை ஆரம்பத்திலேயே தடுத்திருந்தால் இந்த தீர்மானம் போட வேண்டிய தேவையே இருந்திருக்காது” என்றார்.

EPS in TN Assembly

மேலும் பேசிய அவர், “டங்ஸ்டன் சுரங்கத்திற்கான ஒப்பந்தப்புள்ளி கோரியபோதே அரசு தடுத்து நிறுத்தி இருக்கலாம். டங்கஸ்டன் சுரங்கம் அமைக்கக் கூடாது என்று பிரதமருக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம் எழுதியிருந்த நிலையில், அதற்கு மத்திய அரசு அனுப்பிய கடிதத்தில் ’இந்த திட்டம் கொண்டு வந்து 10 மாதங்கள் ஆகிறது. ஏன் காலதாமதம் என்று கேட்டிருந்தனர்’. மத்திய அரசு சொல்லியிருந்த அந்தக் காரணத்தை தான் நாங்கள் ஏன் என்று கேட்கிறோம்” எனக் கேள்வி எழுப்பினார்.

அப்போது குறுக்கிட்ட துரைமுருகன், “மீண்டும் மீண்டும் தவறானக் கருத்தை எதிர்கட்சித் தலைவர் பதிவு செய்கிறார். ஏலம் விடும் அதிகாரம் மத்திய அரசுக்கு மட்டுமே உள்ளது எனச் சட்டம் போடப்பட்டுள்ளது. இந்தச் சட்டத்தின் சுயமரியாதைக்கு மத்திய அரசு சவால் விட்டுள்ளது. தமிழக அரசு என்ன கைகட்டி வேலை செய்யும் வேலைக்காரனா?” என கேள்வி கேட்டார்.

இதன் பின்னர் பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், “நாங்கள் மத்திய அரசுக்கு கடிதம் எழுதி இருந்தோம். அதற்கு அவர்கள் பதில் அளித்து இருந்தனர். எல்லா விவரங்களையும் வெளியில் சொல்ல முடியாது” என்றார். அப்போது, “முழு விவரங்கள் தராமல் தீர்மானம் கொண்டு வந்தால் நாங்கள் ஆமாம் போட வேண்டுமா?

டங்ஸ்டன் சுரங்கம் அமைப்பதற்கு ஒப்பந்தம் போட்டு முடித்து தற்போது வரை 10 மாத காலம் என்ன செய்தீர்கள்? மாநில உரிமையைக் காக்காமல் நாடாளுமன்றத்தில் என்ன செய்தீர்கள்? இப்போது எடுக்கின்ற நடவடிக்கையை அப்போதே எடுத்திருந்தால் இப்போது இந்த தீர்மானம் போட வேண்டிய அவசியமே இருந்திருக்காது. அதைத்தான் சொல்கிறோம்” எனக் கூறினார்.

மேலும், “சட்டம் நிறைவேறிய பிறகு இப்போது தீர்மானம் கொண்டு வந்து என்ன பிரயோஜனம்? நாடாளுமன்றத்தில் குரல் கொடுத்திருக்க வேண்டும். அப்போது அமைதியாக இருந்துவிட்டீர்கள்” என்றார். அதற்கு, “நாங்கள் நாடாளுமன்றத்தில் குரல் கொடுத்தோம். ஆனால் பாஜகவுக்கு பெரும்பான்மை இருந்ததால் எங்கள் எதிர்ப்பை மீறி நிறைவேறிவிட்டது” என்றார் முதலமைச்சர் ஸ்டாலின்.

இதையும் படிங்க: சரியான அப்பா – அம்மாவுக்கு பிறந்திருந்தால் வழக்கு போடுயா…அண்ணாமலை சவால்!

தொடர்ந்து பேசிய இபிஎஸ், “சாதாரண மக்கள் பாதிக்கப்படுகிறார்கள். இதைத்தான் நாங்கள் சொல்கிறோம். இதுவரை இப்படி இருந்துவிட்டு, இவ்வாறு பதில் சொல்வது சரி அல்ல. ஏனென்றால் ஒரு அரசாங்கம் அவ்வப்போது விழித்துக்கொண்டு, அப்போதே அதற்கு தடை வாங்கியிருக்க வேண்டும்” எனக் கூறினார்.

பின்னர் பேசிய துரைமுருகன், “எதிர்கட்சித் தலைவர் ஒழுக்கமாகப் பேசுகிறார். நானும் பேசிவிடுவேன். ஏற்கனவே இந்தத் திட்டத்தை எல்லாம், தோண்டி எடுத்து மத்திய அரசுக்கு தெரிவித்தேன். காலதாமதம் ஆனதால் தான் இந்த தீர்மானத்தை கொண்டு வந்திருக்கிறோம்” என கோபமாகப் பேசினார்.

MK Stalin in TN Assembly

அப்போது ஆவேசமான இபிஎஸ், “ஒன்னும் சாதிக்க முடியவில்லை என்றால் இப்படித்தான் பேச முடியும். வேறு என்ன பேச முடியும்? இப்படி பேசினால் என்ன அர்த்தம்? ஆ.. ஊன்னு கத்த மட்டும் தான் தெரியும். சரக்கு இருந்தால் தானே பேசியிருப்பீர்கள். மூத்த உறுப்பினர் மற்றவர்களுக்கு வழிகாட்டியாக இருக்கனும்.

மக்களோட பிரச்னையை உயிரைக் கொடுத்தாவது காப்பாற்றனும். இந்த வேலை எல்லாம் இங்கு நடக்காது. எங்கள் குற்றச்சாட்டுக்கு உங்களிடம் பதில் இல்லை” என்றார். இதனால் அவையில் சிறுது நேரம் பரபரப்பான சூழல் ஏற்பட்டது.

  • G.V. Prakash understood Sainthavi at the time of separation.. Affection blossomed during the divorce case பிரியும் நேரத்தில் சைந்தவியை புரிந்து கொண்ட ஜி.வி பிரகாஷ்.. விவாகரத்து வழக்கில் மலர்ந்த பாசம்!