தேர்தல் நடத்தை விதிகள் அமல்: எம்.எல்.ஏ. அலுவலகங்களுக்கு சீல் வைக்கும் பணி தீவிரம்..!!

Author: Aarthi Sivakumar
16 September 2021, 2:04 pm
Quick Share

விழுப்புரம்: தேர்தல் விதிகள் அமலுக்கு வந்ததையடுத்து எம்.எல்.ஏ. அலுவலகங்களுக்கு சீல் வைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

தமிழகத்தில் விழுப்புரம், கள்ளக்குறிச்சி உள்ளிட்ட 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல் 2 கட்டங்களாக அடுத்த மாதம் 6, 9ம் தேதிகளில் நடைபெற உள்ளது. இதற்கான தேர்தல் தேதியை கடந்த 13ம் தேதியன்று மாலை தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் அறிவித்தது.

தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட சில மணி நேரங்களிலேயே மேற்கண்ட 9 மாவட்டங்களிலும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் உடனடியாக அமலுக்கு வந்தன. இதையொட்டி தேர்தல் நடத்தை விதிமுறைப்படி நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர் அலுவலகங்கள் பூட்டி சீல் வைக்கப்பட வேண்டும்.

அந்த வகையில் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள 7 சட்டமன்ற தொகுதி உறுப்பினர் அலுவலகங்களுக்கும் சீல் வைக்கும்படி தேர்தல் நடத்தும் அலுவலர்களுக்கு மாவட்ட தேர்தல் அதிகாரியும், கலெக்டருமான டி.மோகன் உத்தரவிட்டுள்ளார்.

அதன்படி விழுப்புரம் கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தின் அருகில் உள்ள விழுப்புரம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தை விழுப்புரம் தாசில்தார் வெங்கடசுப்பிரமணியன், மண்டல துணை தாசில்தார் வினோத் உள்ளிட்டோர் பூட்டி சீல் வைத்தனர்.

இதேபோல் மற்ற சட்டமன்ற தொகுதிகளான திண்டிவனம், வானூர், விக்கிரவாண்டி, செஞ்சி, திருக்கோவிலூர், மயிலம் ஆகிய சட்டமன்ற தொகுதி உறுப்பினர் அலுவலகங்களையும் சீல் வைக்கும் பணியில் தேர்தல் அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர்.

Views: - 105

0

0