சலீம் அலி பறவைகள் ஆராய்ச்சி மையத்திற்குள் நுழைந்த ஒற்றை காட்டு யானை… வாக்கிங் சென்ற வடமாநில ஆராய்ச்சி மாணவருக்கு நேர்ந்த கதி…!!

Author: Babu Lakshmanan
17 May 2023, 1:16 pm

கோவை அருகே மத்திய அரசு நிறுவனத்திற்குள் யானை தாக்கியதில் வட மாநிலத்தை சேர்ந்த ஆராய்ச்சி மாணவர் மருத்துவ சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கோவை ஆனைக்கட்டி அருகே மத்திய அரசு நிறுவனமான சலீம் அலி பறவைகள் ஆராய்ச்சி மையம், செயல்பட்டு வருகிறது. இங்கு ஆராய்ச்சி படிப்புகளும் பயிற்றுவிக்கப்படுகிறது.

இம்மையத்தில் நாடு முழுவதும் பல்வேறு இடங்களை சேர்ந்தவர்கள் ஆராய்ச்சி படிப்புகளை மேற்கொள்கின்றனர். அதே சமயம் இது யானைகள் உட்பட பல்வேறு வனவிலங்குகள் நடமாடும் பகுதியாகும்.

இந்நிலையில் ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த ஆராய்ச்சி மாணவர் விஷால் ஸ்ரீமல் (23) என்பவர் நேற்றிரவு நிறுவன வளாகத்திற்குள் நடந்து சென்று கொண்டிருக்கையில், அவ்வழியாக வந்த ஒற்றை காட்டு யானை தாக்கியது. இதனையடுத்து, அவரது அலறல் சத்தம் கேட்டு வந்த அருகில் இருந்தவர்கள் விஷாலை மீட்டு உடனடியாக கேரள மாநில எல்லைக்குட்பட்ட கோட்டைதுரை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர்.

விஷாலுக்கு மார்பெலும்பு முறிவு, வலது கால் பகுதியில் ரத்தக்கசிவு ஏற்பட்ட நிலையில் அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக கோவை தனியார் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார். அவருக்கு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து தடாகம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

  • G.V. Prakash understood Sainthavi at the time of separation.. Affection blossomed during the divorce case பிரியும் நேரத்தில் சைந்தவியை புரிந்து கொண்ட ஜி.வி பிரகாஷ்.. விவாகரத்து வழக்கில் மலர்ந்த பாசம்!