‘குழந்தை சாப்பிடறத கண்ணு வெக்காதீங்க’.. கரும்பு லாரியை வழிமறித்து குட்டியுடன் ருசி பார்த்த யானை : ஸ்தம்பித்த போக்குவரத்து!!

Author: Udayachandran RadhaKrishnan
18 October 2021, 5:53 pm
Elephant Sugarcane - Updatenews360
Quick Share

ஈரோடு : சத்தியமங்கலம் அடுத்த ஆசனூர் அருகே குட்டியுடன் கரும்பு லாரியை வழிமறித்து சாவகாசமாக கரும்பு தின்று யானையால் போக்குவரத்து பாதிப்படைந்தது.

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்துக்கு உள்பட்ட வனப்பகுதியில் சத்தியமங்கலம், ஆசனூர், கேர்மாளம், ஜீர்கள்ளி, தாளவாடி உள்பட மொத்தம் 10 வனச்சரகங்கள் உள்ளன.

இந்த வனச்சரகங்களுக்கு உட்பட்ட வனப்பகுதியில் ஏராளமான யானை, காட்டெருமை, புலி, சிறுத்தை உள்பட பல்வேறு வன விலங்குகள் வசித்து வருகின்றன.

ஆசனூர் வனச்சரகத்திக்கு உட்பட்ட வனப்பகுதி வழியாக திண்டுக்கல் -பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை செல்கிறது. இதனால் வாகன போக்குவரத்து எப்போதும் இருந்து கொண்டே இருக்கும்.

மேலும் வனவிலங்குகள் வனப்பகுதியில் இருந்து தண்ணீர் மற்றும் உணவை தேடி அடிக்கடி சாலையை கடக்கின்றன. தற்போது தாளவாடியில் விளையும் கரும்புகள் லாரி மூலம் சத்தியமங்கலம் தனியார் சர்க்கரை ஆலைக்கு கொண்டு வரப்படுகிறது.

இந்த கரும்புகளை ருசித்து பழகிய யானைகள் சாலையில் முகாமிட்டு வருவது தொடர்தையாகி வருகிறது. இந்நிலையில் இன்று மாலை 4.00 மணியளவில் ஆசனூர் அடுத்த காராப்பள்ளம் தேசிய நெடுஞ்சாலையில் கரும்பு லாரியை எதிர்ப்பார்த்து குட்டியுடன் தாய் யானை சாலையில் உலா வந்தது கொண்டிருந்தது.

அப்போது அவ்வழியாக வந்த கரும்பு லாரியை கண்ட யானை குட்டியுடன் ஓடி சென்று லாரியை வழி மறைத்தது. லாரி ஓட்டுநர் அச்சத்தில் லாரியை நிறுத்தினார். பின்னர் லாரியின் அருகில் சென்று கரும்புகளை உருவி குட்டி யானைக்கு போட்டு தானும் சிறிது நேரம் சுவைத்தது.

இதனால் வாகனங்கள் அனைத்தும் சாலையில் அணிவகுத்து நின்றன. யானைகளை பார்க்கும் ஆவலில் பேருந்துகளில் இருந்து இறங்கிய பொதுமக்கள் சாவகாசமாக கூட்டமாக நின்று தங்கள் செல்போனில் படம் எடுத்தனர்.

சுமார் 30 நிமிடத்திக்கு மேலாக கரும்புகளை சுவைத்த யானை அரை மணி நேர விருந்தை முடித்த பிறகே கரும்பு லாரியை விடுவித்தது. பின்னர் லாரியை ஓட்டுநர் ஓட்டிசென்றார்.

இதனால் கர்நாடக – தமிழகம் இடையே சுமார் 30 நிமிடம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. வாகன ஓட்டிகள் யானைகளை தொந்தரவு செய்யாமல் செல்லவேண்டும் வனத்துறையினர் அறிவுறுத்தி வருகின்றனர்.

Views: - 225

0

0