புதிய மின் இணைப்பு பெற ரூ.3 ஆயிரம் லஞ்சம் : லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் சிக்கிய செயற்பொறியாளர்!!

Author: Udayachandran
30 July 2021, 10:12 pm
TNEB Bribery Arrest -Updatenews360
Quick Share

கிருஷ்ணகிரி : புதிய மின் இணைப்பு வழங்க 3 ஆயிரம் லஞ்சம் வாங்கிய செயற்பொறியாளரை போலீசார் கைது செய்தனர்.

கிருஷ்ணகிரி அடுத்த பெத்ததாளாப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் சந்திரகுமார். இவர் புதியதாக தொழில் தொடங்குவதற்காக தனது கட்டிடத்திற்கு புதிய மின் இணைப்பு கோரி கிருஷ்ணகிரி மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலகத்தில் ஆன்லைன் மூலமாக விண்ணப்பித்து இருந்தார்.

நீண்ட நாட்களாகியும் இவருக்கு மின் இணைப்பு வழங்காததால் சந்திரகுமார் நேற்று கிருஷ்ணகிரி மின்வாரிய செயற்பொறியாளர் சுதாகரனை அணுகி விளக்கம் கேட்டுள்ளார். அதற்கு பதிலளித்த சுதாகரன் தனக்கு மூன்றாயிரம் ரூபாய் லஞ்சமாக வழங்கினால் உடனடியாக மின் இணைப்பு வழங்குவதாக தெரிவித்துள்ளார்.

இதனை அடுத்து லஞ்சம் கொடுத்து மின் இணைப்பு பெற விருப்பமில்லாத சந்திரகுமார் நேரடியாக மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு புகார் அளித்துள்ளார்.

இதனையடுத்து லஞ்ச ஒழிப்பு போலீசாரின் அறிவுறுத்தலின் பேரில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் வழங்கிய ரசாயனம் தடவிய 3 ஆயிரம் ரூபாயை இன்று செயற்பொறியாளர் சுதாகரன் இடம் சந்திரகுமார் வழங்கினார்.

அப்பொழுது மின்வாரிய அலுவலகத்தில் மாறுவேடத்தில் மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் சுதாகரன் லஞ்சம் வாங்கும்போது கையும் களவுமாக பிடித்தனர். இதனை தொடர்ந்து புதிய மின் இணைப்பு வழங்க 3 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கிய குற்றச்சாட்டில் செயற்பொறியாளர் சுதாகரனை கைது செய்து லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Views: - 179

0

0