தினமும் ஒரு சம்பவமா..? சுகாதாரத்துறையின் சுணக்கம் தான் இது ; மக்களின் கடைசி நம்பிக்கையை காப்பாற்றுங்க ; சி.விஜயபாஸ்கர்!!

Author: Babu Lakshmanan
14 December 2023, 1:45 pm
Quick Share

தொடர்ந்து தீவிர சிகிச்சை பிரிவில் (ICU)எவ்வித முன்னேற்றமும் இல்லாமல் இருக்கும் தமிழக சுகாதாரத் துறையை மீட்டு எடுக்க வேண்டும் என்று முன்னாள் சுகாதாராத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள X தளப்பதிவில் கூறியிருப்பதாவது :- சென்னை செங்குன்றம் அருகே நாரவாரிக்குப்பம் பேரூராட்சியில் மிக்ஜாம் புயல் பாதித்த இடங்களில் தூய்மைப் பணிகளை மேற்கொள்ளும் போது ப்ளீச்சிங் பவுடருக்கு பதிலாக மைதா மாவு தூவப்பட்ட காமெடி அரங்கேறி இருக்கிறது.

மறுபுறம், தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற வந்த நோயாளிக்கு பயன்படுத்தப்பட்ட ரத்தம் படிந்த அறுவை சிகிச்சை உபகரணங்களை அவரது மகன் கழுவுகின்ற கொடுமை நடந்தேறி இருக்கிறது. எளிய மக்களின் உயிர் பாதுகாப்பில், அவர்களது சுகாதாரமான வாழ்வுக்கு வித்திட வேண்டிய அரசு மற்றும் சுகாதாரத் துறையின் சுனக்கத்தால் ஏற்பட்டிருக்கிற நிர்வாகத் தோல்வியின் ஆகச்சிறந்த உதாரணங்கள் இவை.

உடனடியாக இவ்விவகாரத்தில் சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு, ‘நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக’ சுகாதாரத் துறையில் நிகழ்ந்து வரும் இதுபோன்ற அதிர்ச்சிகரமான சம்பவங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்திட வேண்டுமென வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்.

அதேபோல், தொடர்ந்து தீவிர சிகிச்சை பிரிவில் (ICU) எவ்வித முன்னேற்றமும் இல்லாமல் இருக்கும் தமிழக சுகாதாரத் துறையை மீட்டு, ஏழை – எளிய மக்களுக்கு அரசு மருத்துவமனைகள் மீது இருக்கின்ற கடைசி நம்பிக்கையை காப்பாற்றிட வேண்டுமென வலியுறுத்துகிறேன், என தெரிவித்துள்ளார்.

Views: - 238

0

0