ஆறுமுகசாமி ஆணையத்திற்கு 11ஆவது முறையாக கால அவகாசம் நீட்டிப்பு!

Author: Udayaraman
23 July 2021, 10:38 pm
Quick Share

சென்னை: ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை நடத்திவரும் ஆறுமுகசாமி ஆணையத்திற்கு மேலும் 6 மாத காலம் கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா கடந்த 2016-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 5-ம் தேதி உடல் நலக்குறைவு காரணமாக காலமானார். இதையடுத்து, முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்தில் மர்மம் இருப்பதாக கூறி அதுகுறித்து விசாரிக்க ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் ஒருநபர் விசாரணை ஆணையத்தை அப்போதைய அதிமுக அரசு அமைத்தது. இதையடுத்து, விசாரணையை தொடங்கிய ஆணையம், ஜெயலலிதா உடன் இருந்தவர்கள், உறவினர்கள், அரசு மூத்த அதிகாரிகள், அமைச்சர்கள், அப்போலோ நிர்வாகம், அப்பல்லோ மருத்துவமனை மருத்துவர்கள், அரசு மருத்துவர்கள் உள்ளிட்ட பலருக்கும் சம்மன் ஆனுப்பி விசாரித்து வருகிறது.

விசாரணை கமிஷன் தொடங்கப்பட்ட போது, 3 மாதங்களுக்குள் அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிடபட்டிருந்தது. ஆனால் அடுத்தடுத்து ஆணையத்துக்கு கால அவகாசம் நீட்டிக்கப்பட்டு கொண்டே வந்ததே தவிர, இன்னமும் விசாரணை கமிஷனின் விசாரணை முடிந்து இறுதி அறிக்கையை தாக்கல் செய்யவில்லை.இந்த நிலையில், ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை நடத்திவரும் ஆறுமுகசாமி ஆணையத்திற்கு மேலும் 6 மாத காலம் கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. நாளையுடன் கால அவகாசம் முடிவடையும் நிலையில் அவகாசம் நீடிக்கப்பட்டுள்ளது. 11ஆவது முறையாக ஆணையத்துக்கு கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, ஆறுமுகசாமி ஆணையத்தை கலைக்க அரசுக்கு உத்தரவிடக் கோரி தொடரப்பட்ட வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், நீதிபதி ஆறுமுகசாமி ஆணையம் மூன்று மாதங்களில் இறுதி அறிக்கையை தாக்கல் செய்யும்படி ஏன் உத்தரவிடக் கூடாது என கேள்வி எழுப்பி இதுதொடர்பாக ஆறு வாரங்களில் விளக்கமளிக்க இம்மாத தொடக்கத்தில் தமிழக அரசுக்கு உத்தரவிட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Views: - 112

0

0