கள்ளநோட்டுக்களை புழக்கத்தில் விட்ட ஆளுங்கட்சி பிரமுகர் உள்பட 4 பேர் கைது… ரூ.2.40 லட்சம் கள்ளநோட்டுகள் பறிமுதல்

Author: Babu Lakshmanan
9 March 2022, 8:32 am
Quick Share

கள்ள நோட்டுகளை புழக்கத்தில் விட்ட ஆளுங்கட்சி பிரமுகர் உட்பட நான்கு பேரை கைது செய்து, அவர்களிடமிருந்து 2 லட்சத்தி 40 ஆயிரம் ரூபாய் கள்ள நோட்டுகளை புதுச்சேரி போலீசார் பறிமுதல் செய்தனர்.

புதுச்சேரி திருவள்ளுவர் சாலையில் உள்ள ஒரு மதுபான கடையில் இரண்டு இளைஞர்கள் மது வாங்க சென்று கடையில் இருந்த காசாளர் பிரபாகரனிடம் ரூபாய் 500 கொடுத்துள்ளனர். அதனை பெற்ற பிரபாகரன் அந்த 500 ரூபாய் நோட்டின் மீது சந்தேகம் எழுந்ததால், இருவருக்கு மது கொடுத்து அங்கே அருந்த கூறிவிட்டு, இது குறித்து உருளையான்பேட்டை காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளார்.

இதனை அடுத்து அங்கு வந்த போலீசார் அந்த 500 ரூபாய் நோட்டை பரிசோதித்ததில் அது கள்ள நோட்டு என்பதனை உறுதி செய்ததை அடுத்து, மது அருந்தி கொண்டிருந்த இருவரையும் கைது செய்து காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டனர். அதில் அவர்கள் புதுச்சேரி சாரம் பகுதியை சேர்ந்த பெயிண்டர் ஜெயபால் மற்றும் எலக்ட்ரிஸியன் மனோஜ் என்கிற மனோஜ் குமார் என்பதும் தெரிய வந்தது.

இவர்கள் அருமார்த்தப்புரம் பகுதியை சேர்ந்த ஆட்டோ ஓட்டுனர் சரன் என்பவரிடம் 20 ஆயிரம் அசல் நோட்டுகள் கொடுத்தால், அவர் இரட்டிப்பாக தொகையாக கள்ள நோட்டுகள் கொடுப்பார். அதனை தாங்கள் பெற்று வந்து செலவு செய்ததாக தெரிவித்ததை அடுத்து, போலீசார் சரனை கைது செய்து விசாரணை செய்ததில், அவர் புதுச்சேரி என்.ஆர் காங்கிரஸ் பிரமுகர் கமல் (31) என்பவரிடம் கமிஷன் அடிப்படையில் 1 லட்சம் ரூபாய் வரை கள்ள நோட்டு பெற்று அதனை வெளியில் புழக்கத்திற்கு விட்டதாக தெரிவித்துள்ளார்.

இதனை அடுத்து போலீசார் என்.ஆர் காங்கிரஸ் பிரமுகர் கமலை கைது செய்து, அவர் வீட்டில் இருந்து 200 எண்ணிக்கையிலான 500 ரூபாய் கள்ள நோட்டுகளை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டனர். அதில் அவர் சென்னையை சேர்ந்த கும்பலிடம் 10 ஆயிரம் ரூபாய் கொடுத்தால் 50 ஆயிரம் ரூபாய் வரையில் அவர்கள் கள்ள நோட்டுகளை வழங்கிவந்ததாக ஒப்புதல் அளித்ததை அடுத்து, கைது செய்யப்பட்ட மற்ற மூவரிடம் இருந்து 83 எண்ணிக்கையிலான 500 ரூபாய் கள்ள நோட்டுகள் மற்றும் செல்போஃன்களை பறிமுதல் செய்த போலீசார். என்.ஆர் காங்கிரஸ் பிரமுகர் உட்பட நான்கு பேரை நீதிபதி வீட்டில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

மேலும் கமலுக்கு கள்ள நோட்டுகள் கொடுத்த சென்னையை சேர்ந்த கும்பலை பிடிப்பதற்காக புதுச்சேரியில் இருந்து தணிபடை விரைந்துள்ளதாகவும், கள்ள நோட்டு புழக்கம் விவகாரம் என்பதால் இது குறித்து தேசிய விசாரணை குழு விரைவில் விசாரணை நடத்த உள்ளதாகவும், காவல் துறை வட்டாரங்கள் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Views: - 879

0

0