கொரோனா சடலத்தை சாலையில் வீசிச் சென்றதாக போலி செய்தி : போலீசாருக்கு போக்கு காட்டிய மர்மநபருக்கு வலைவீச்சு!!

15 May 2021, 7:02 pm
FB Fake 1 - Updatenews360
Quick Share

கன்னியாகுமரி : குருந்தன்கோடு அருகே கொரோனா சடலத்தை சாலையில் வீசி சென்ற அவலம் என போலி செய்தியை பேஸ் புக்கில் பதிவிட்டு போலீசாருக்கு போக்கு காட்டிய மர்ம நபரை சைபர் கிரைம் போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்

கன்னியாகுமரி மாவட்டத்தில் நேற்று முதல் பேஸ்புக் வாட்ஸ் ஆப் போன்ற சமூக வலைதளங்களில் பாலித்த்தீன் உறையால் சுற்றப்பட்ட சடலம் ஒன்று சாலையில் கிடப்பது போன்றும் அதை பொதுமக்கள் பார்த்து கொண்டிருப்பது போலவும் ஒரு புகைப்படம் வெளியானது.

ஆசாரிப்பள்ளம் மருத்துவகல்லூரி மருத்துவமனையில் கொரோனா சிகிட்சை பெற்று வந்த உயிரிழந்த நோயாளியின் சடலத்தை ஊழியர்கள் சாலையில் வீசி சென்றதாகவும் சடலத்தை சாலையில் வீசி சென்ற அவலம் என்றும் வாசகங்களுடன் செய்திகள் வெளியானது.

இந்த நிலையில் குளச்சல் ஏ.எஸ்.பி விஸ்வேஷ் சாஸ்த்ரி தலைமையிலான போலீசார் அதன் உண்மை தன்மை குறித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அந்த சடலம் குருந்தன்கோடு அருகே வடக்கு ஈத்தங்காடு பகுதியை சேர்ந்த 68-வயதான கோபாலன் என்ற கூலி தொழிலாளியின் சடலம் என்பது தெரியவந்தது.

68-வயதான அந்த நபர் 40-வருடங்களுக்கு முன் மனைவி கைவிட்டு சென்ற நிலையில் தனியாக வாழ்ந்து வந்ததாகவும் புற்று நோயால் பாதிக்கப்பட்ட அவர் கடந்த மூன்று நாட்களாக வீட்டை விட்டு வெளியே வராததால் அக்கம்பக்கத்தினர் வீட்டருகே சென்ற போது வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசிய நிலையில், போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

போலீசார் அங்கு சென்று பார்த்த போது கோபாலன் அழுகிய நிலையில் சடலமாக கிடந்த நிலையில் வருவாய் துறை அதிகாரிகள் முன் சடலத்தை போலீசார் பாலித்தீன் கோணி மூலம் மீட்டு பிரேத பரிசோதனைக்கு ஆசாரிப்பள்ளம் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்க அதிகாரிகள் முன்னிலையில் சாலையில் சடலத்தை வைத்துள்ளனர்.

பின்னர் ஆம்புலன்ஸ் அழைத்து வர சென்ற நிலையில் அதை புகைப்படம் எடுத்த மர்ம நபர் ஒருவர், பொன் சுரேஷ் பிரசாத் என்ற பேஸ்புக் ஐடி மூலம் தவறான செய்தியை பரப்பியதும் இது சமூக ஊடகங்களில் வைரலானதும் தெரியவந்தது.

இதனையடுத்து அரசின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்க முற்பட்டதாகவும் போலீசாரை போக்கு காட்டி அரசு பணியை செய்ய விடாமல் தடுக்க பொய் செய்தியை வெளியிட்ட அந்த பேஸ்புக் நபரை கண்டுபிடித்து வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க சைபர் கிரைம் போலீசாருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவிட்ட நிலையில் சைபர் கிரைம் போலீசார் அந்த மர்ம நபரை வலைவீசி தேடி வருகின்றனர்.

Views: - 181

0

0