மகளின் தோழியை ஆசை வார்த்தை கூறி கடத்திய தந்தை கைது : கேரளாவில் வைத்து பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்டது அம்பலம்!!

Author: Udayachandran RadhaKrishnan
1 April 2022, 7:54 pm
Sexual Abuse Child -Updatenews360
Quick Share

கோவை : கோவை கருமத்தம்பட்டி பகுதியில், மகளின் தோழியை ஆசைவார்த்தை கூறி கடத்தி சென்று பாலியல் ரீதியாக துன்புறுத்தலில் ஈடுபட்ட நபர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.

கள்ளக்குறிச்சி அருகே உள்ள கிராமத்தை சேர்ந்தவர் 17 வயது சிறுமி. இவர் கோவை கருமத்தம்பட்டியில் தங்கி வேலை பார்த்து வருகிறார். சிறுமியின் பெற்றோர் அவரை தினமும் செல்போனில் தொடர்பு கொண்டு பேசுவது வழக்கம். கடந்த 21-ந் தேதி பெற்றோர் சிறுமியை தொடர்பு கொண்டனர்.

ஆனால் அவர் போனை எடுக்கவில்லை. இதையடுத்து மில் நிர்வாகத்தை தொடர்பு கொண்டபோது, சிறுமி மாயமாகி விட்டதாக மில் நிர்வாகம், தெரிவித்தது. இதையடுத்து சிறுமியின் பெற்றோர் கோவை வந்து கருமத்தம்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான சிறுமி குறித்து விசாரிக்க தொடங்கினர்.

அப்போது சிறுமியின் சொந்த ஊரை சேர்ந்த 38 வயதான தேவேந்திரன் என்பவர் கடத்தி சென்றது தெரிய வந்தது. இதையடுத்து அவர் சிறுமியுடன் எங்கு தங்கி உள்ளார் என்பது குறித்து விசாரணையை தொடங்கினர்.

அவர்களது உறவினர்கள் உள்பட பலரிடமும் விசாரணை நடத்தினர். பின்னர் தேவேந்திரனின் செல்போன் எண்ணை வாங்கி அதன்மூலம் அவரை தேடும் பணியில் ஈடுபட்டனர். செல்போன் எண்ணின் டவர் கேரள மாநிலம் கண்ணூர் பகுதியில் இருப்பதை காண்பித்தது.

இதையடுத்து கருமத்தம்பட்டி போலீசார் கண்ணூர் சென்று, அங்கு ஒரு வீட்டில் அடைத்து வைக்கப்பட்டிருந்த சிறுமியை மீட்டனர். பின்னர் 2 பேரையும் கருமத்தம்பட்டி போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரித்தனர்.

விசாரணையில் பல்வேறு பரபரப்பு தகவல்கள் தெரிய வந்தது.தேவேந்திரனுக்கு 3 மகள்கள், ஒரு மகன் உள்ளனர். கடந்த 10 வருடங்களுக்கு முன்பு மனைவி இறந்து விட்டதால் மகன் மற்றும் மகள்களுடன் தனியாக வசித்து வந்தார்.

தேவேந்திரனின் 2-வது மகளும், கடத்தப்பட்ட 17 வயது சிறுமியும் தோழிகள். இதனால் 17 வயது சிறுமி அடிக்கடி தேவேந்திரன் வீட்டிற்கு சென்றார். அப்போது அவர்களுக்குள் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

சிறுமியிடம் அவர் நட்பாக பேசி வந்தார். இந்த நிலையில் சிறுமி வேலை கிடைத்து கோவைக்கு வந்து விட்டார். கோவைக்கு வந்த பின்னரும், தேவேந்திரன் செல்போனில் தொடர்பு கொண்டு சிறுமியிடம் பேசி வந்தார்.

அப்போது பல்வேறு ஆசை வார்த்தைகளை கூறி அவரை மயக்கியுள்ளார். சம்பவத்தன்று பேசிய தேவேந்திரன் நாம் எங்காவது சென்று வரலாம் என சிறுமியிடம் கூறியுள்ளார். அதன்படி தேவேந்திரன் கோவை வந்து சிறுமியை அழைத்து கொண்டு கேரள மாநிலம் கண்ணூருக்கு சென்றார்.

அங்கு தனது நண்பர் ஒருவரின் வீட்டில் சிறுமியை அடைத்து வைத்து பலமுறை வலுக்கட்டாயமாக பாலியல் பலாத்காரம் செய்ததும் விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் தேவேந்திரன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். பின்னர் அவரை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும், சிறுமியை மீட்டு அவரது பெற்றோரிடத்தில் ஒப்படைத்தனர்.

Views: - 359

0

0