சரமாரிக் கேள்வி கேட்ட இளைஞர்.. பத்திரிகையாளர்களை படம் பிடிக்க கூடாது என ஆவேசமடைந்த நிதியமைச்சர் நிர்மலா!
Author: Udayachandran RadhaKrishnan12 செப்டம்பர் 2024, 7:15 மணி
கோவை மாவட்டம், கருமத்தம்பட்டி, ஊஞ்சபாளையத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் பாரதிய ஜனதா கட்சியின் உறுப்பினர் சேர்க்கை நடைபெற்றது.
இதில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கலந்துகொண்டு புதிதாக சேர்ந்த உறுப்பினர்களுக்கு உறுப்பினர் அட்டையை வழங்கினார்.
பின்னர் மேடையில் பேசிய நிர்மலா சீதாராமன் கரப்சன் இல்லாமல் நடந்து வரும் அரசு மோடி அரசு பொதுமக்கள் பணத்தை பொதுமக்களுக்காக செலவிடும் அரசு மோடி அரசு. மத்திய அரசின் நிதியோடு தூத்துக்குடி துறைமுகம் சிறப்பாக இருந்து வருகிறது. முன்பு ஒரு குடும்பத்திற்கு மட்டும் நாட்டின் வரிப்பணம் சென்று கொண்டிருந்தது.
இப்போது நாட்டின் வரிப்பணத்தில் முன்னேற்ற திட்டங்கள் பல செயல்படுத்தப்பட்டு வருகிறது. மோடி அரசில் வரும் வரி பணம் அனைத்து தரப்பினருக்கும் செல்கிறது. இந்திரா காந்தி காலம் ராஜீவ்காந்தி காலம் எந்த காலத்திலும் மூன்று முறை பிரதமர் இருந்ததில்லை பிரதமர் மோடி மூன்று முறை பிரதமராக இருந்து வருகிறார்.
பலதரப்பட்ட மக்களுக்கு நேரடியாக உறுப்பினர் அட்டையை வழங்குவது மகிழ்ச்சியாக இருக்கிறது என தெரிவித்தார். விழா முடிந்து கிளம்பும்போது திருமண மண்டபத்திற்கு அருகே உள்ள பொதுமக்களின் வீட்டிற்கே சென்று பாரதிய ஜனதா கட்சியின் சேர்ந்தமைக்காக, உறுப்பினர் அட்டையை வீட்டின் திண்ணையில் அமர்ந்து வழங்கினார்.
பின்னர் அங்கிருந்து கிளம்பும்போது அருண் சந்திரன் என்ற பட்டதாரி இளைஞர், நிர்மலா சீதாராமனிடம் செல்போன் உதிரி பாகமான செமி கண்டக்டர் என்ற உதிரிபாகத்தை வெளிநாடுகளில் இருந்து தொடர்ந்து இறக்குமதி செய்வது ஏன் என்று கேள்வி எழுப்பினார். அதற்கு ஆவேசமடைந்த நிர்மலா சீதாராமன் அந்த இளைஞரிடம் இது தொடர்பாக அரசு வெளியிட்டுள்ள குறிப்புகளை படித்து தெரிந்து கொண்டு அதன்பின் டெல்லி வந்து சந்தித்து நேரடியாக விவாதம் செய்து கொள்ளலாம் அதற்கு நான் தயார் என்று அந்த இளைஞரிடம் தெரிவித்தார்.
மீண்டும் அந்த இளைஞர் தொடர்ந்து நிர்மலா சீதாராமன் இடம் பல்வேறு கேள்விகளை கேட்க முற்பட்டார். இதனால் கோபம் அடைந்த நிர்மலா சீதாராமன் பத்திரிக்கையாளர்களை ஒளிப்பதிவு செய்ய வேண்டாம் என எச்சரித்தார்.
அதன் பிறகு அருண் சந்திரனிடம் இவ்வாறு கேள்வி கேட்கக் கூடாது என பாஜகவினர் எச்சரித்தனர். இதனை அடுத்து போலீசார் அந்த இளைஞரை காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டனர். இந்த விசாரணையில் காவல்துறையின் பல்வேறு உளவுபிரிவு சார்ந்த போலீசார் இளைஞரிடம் பல்வேறு கேள்விகளை கேட்டனர்.
இதனை அடுத்து அந்த இளைஞரை போலீசார் ஒரு மணி நேரம் கழித்து விடுவித்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.
0
0