மின்கம்பத்தில் அதிவேகத்தில் மோதிய கார்…தீப்பற்றி எரிந்து விபத்து: பைனான்சியர் உடல்கருகி பலி..!!

Author: Rajesh
2 May 2022, 11:54 pm
Quick Share

திண்டுக்கல்: பழனி அருகே மின்கம்பத்தில் கார் மோதி தீப்பிடித்தால் காரில் பயணித்த பைனான்சியர் உடல் கருகி பலியானார்.


பழனி அருகே வாகரை பகுதியில் மரிச்சிலம்பு சாலையில் இன்று மாலை 6.30 மணி அளவில் கார் ஒன்று சென்று கொண்டிருந்தது.

வாகரையில் உள்ள மக்காச்சோள ஆராய்ச்சி நிலையம் அருகே வந்தபோது திடீரென கார் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடி சாலையோர மின்கம்பத்தில் பயங்கரமாக மோதியது.

சத்தம் கேட்டு அக்கம்பக்கத்து தோட்ட விவசாயிகள் சம்பவ இடத்துக்கு ஓடி வந்தனர். இதற்கிடையே பயங்கரமாக மோதியதில் கார் மீது மின்கம்பம் விழுந்து தீப்பிடித்து எரிய தொடங்கியது. இதையடுத்து அதிர்ச்சி அடைந்த விவசாயிகள், உடனடியாக தண்ணீரை ஊற்றி தீயை அணைக்க முயன்றனர்.

இருப்பினும், கார் முழுவதும் தீப்பற்றி கொழுந்துவிட்டு எரிந்ததால் தீயை அணைக்க முடியவில்லை. இதையடுத்து பழனி தீயணைப்பு நிலையம், கள்ளிமந்தையம் போலீசுக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

அதன்பேரில் பழனி தீயணைப்பு வீரர்கள் மற்றும் கள்ளிமந்தையம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். பின்னர் தீயணைப்பு வீரர்கள் தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர். அப்போது காரின் டிரைவர் இருக்கையில் உடல் கருகிய நிலையில் பிணமாக கிடந்தார்.

பின்னர் போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஒட்டன்சத்திரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். காரை ஓட்டி வந்தது யார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தினர். அதில், காரில் வந்தது திருப்பூர் மாவட்டம் தாராபுரம் காந்திபுரத்தை சேர்ந்த பழனிசாமி மகன் சுரேஷ்பாபு (வயது 45) என்பதும், பைனான்சியராக இருப்பதும் தெரியவந்தது. இதைத்தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, விபத்துக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்.

Views: - 470

0

0