14 உயிர்களை காவு வாங்கிய பட்டாசு கடை விபத்து.. எடப்பாடி பழனிசாமி இரங்கல்!!

Author: Udayachandran RadhaKrishnan
8 October 2023, 12:35 pm

14 உயிர்களை காவு வாங்கிய பட்டாசு கடை விபத்து.. எடப்பாடி பழனிசாமி இரங்கல்!!

தமிழக, கர்நாடக எல்லையான அத்திப்பள்ளியில் பட்டாசுக் கடையில் நேற்று நடைபெற்ற தீ விபத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 14ஆக உயர்ந்துள்ளது. தொழிலாளர்கள் வாகனத்தில் இருந்து பட்டாசுகளை இறக்கும் போது கடையில் தீப்பிடித்தது.

தீ, மளமளவென பரவியதால் உயிரிழப்பு அதிகமாக ஏற்பட்டுள்ளது. கடையில் இருந்து மளமளவென பரவிய தீ அருகில் இருந்த 4 கடைகளுக்கும் பரவியது. பட்டாசு கடையில் ஏற்பட்ட தீ விபத்தில் 5 கடைகள் எரிந்து நாசமானது.

இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 14 ஆக உயர்ந்துள்ளது. மேலும், இதில் பலரும் சிக்கி இருப்பதால் உயிரிழப்பு மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. பட்டாசு கடையில் 20 பேர் வேலை செய்து கொண்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது, வெடி விபத்து குறித்து விசாரிக்க 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. விபத்தில் படுகாயமடைந்த 7 பேரிடம் புகார் பெறப்பட்டு வழக்குப்பதிவு செய்து விசாரணை நடந்து வருகிறது. முதற்கட்ட விசாரணையில் தருமபுரியில் இருந்து பட்டாசுகள் கொண்டுவரப்பட்ட தகவல் வெளியாகியுள்ளது.

இந்த நிலையில், வெடி விபத்து தொடர்பாக எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், “கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே தமிழக – கர்நாடக எல்லைப் பகுதியான அத்திப்பள்ளியில் பட்டாசு கடையில் ஏற்பட்ட தீ விபத்தினால் 14 பேர் வரை உயிரிழந்தனர் என்ற செய்தி அறிந்து மிகுந்த மனவேதனை அடைந்தேன்

உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்வதுடன், தீ விபத்தில் காயமுற்று சிகிச்சை பெற்று வருவோர் விரைவில் பூரண நலம் பெற்று வீடு திரும்ப அனைத்து முன்னெடுப்புகளையும் தமிழக அரசு துரிதமாக எடுக்க வலியுறுத்துகிறேன்.

மேலும், தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும், படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவோருக்கும் அறிவிக்கப்பட்ட நிவாரண தொகையை, இந்த விடியா திமுக அரசு உடனடியாக வழங்க வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்.” என்று தெரிவித்துள்ளார்.

  • G.V. Prakash understood Sainthavi at the time of separation.. Affection blossomed during the divorce case பிரியும் நேரத்தில் சைந்தவியை புரிந்து கொண்ட ஜி.வி பிரகாஷ்.. விவாகரத்து வழக்கில் மலர்ந்த பாசம்!