குளங்களை பொது ஏலம் விடுவதற்கு எதிர்ப்பு: ஆட்சியர் அலுவலகத்தில் வலைகளுடன் மீனவர்கள் ஆர்ப்பாட்டம்..!!

Author: Rajesh
31 January 2022, 1:36 pm
Quick Share

கோவை: மீனவர் கூட்டுறவு சங்கத்தை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டோர் ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கோவை ஆட்சியர் அலுவலகத்திற்கு கோவை வட்ட மீனவர் கூட்டுறவு சங்கத்தை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட மீனவர்கள் மனு அளிக்க வந்தனர். அப்போது அவர்கள் கையில் மீன் பிடிக்கும் வலைகள் மற்றும் மீன்களுடன் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு குளங்களை பொது ஏலம் விடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து கோஷமிட்டனர்.

அப்போது அவர்கள் கூறியதாவது, கோவை வட்ட மீனவர் கூட்டுறவு சங்கத்திற்கு 1-1-2019 முதல் 31.12.2023 வரை ஐந்து ஆண்டு காலத்திற்கு மீன் பாசி குத்தகை அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை சார்பில் குளங்களை பொது ஏலம் விட போவதாக மாவட்ட கலெக்டருக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.

இதனால் சங்கத்தில் உள்ள 761 மீனவ உறுப்பினர்களின் குடும்பங்கள் கடுமையான பாதிப்புக்கு உள்ளாகும். எனவே குளத்தை பொது ஏலம் விட கூடாது. நடைபெற உள்ள சட்டமன்ற கூட்டத்தொடரில் இது தொடர்பாக பேசி மீனவர்களுக்கு வழிவகை செய்து வாழ்வாதாரம் பாதிக்காமலிருக்க மீனவர்களுக்கு உதவ வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர். இதனைத்தொடர்ந்து அவர்கள் இதே கோரிக்கையை வலியுறுத்தி ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

Views: - 1096

0

0