ஒரே இடத்தில் இறந்துகிடந்த 24 குரங்குகள் : தனிப்படை அமைத்து வனத்துறை விசாரணை

Author: kavin kumar
24 January 2022, 2:32 pm
Quick Share

திருச்சி: திருச்சி அருகே நெடுங்கூரில் நேற்று ஒரே இடத்தில் 24 குரங்குகள் உயிரிழந்து கிடந்த விவகாரம் தொடர்பாக, தனிப்படை அமைத்து வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருச்சி மாவட்டம், சமயபுரம் அருகே நெடுங்கூர் கிராமத்தில் திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலை சாலையோரம் நேற்று ஒரே இடத்தில் 18 ஆண் 6 பெண் குரங்குகள் என 24 குரங்குகள் இறந்த நிலையில் கிடந்தது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் திருச்சி மாவட்ட வன அலுவலகத்திற்கு தகவல் அளித்தனர். தகவலை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறை அலுவலர்கள் 24 குரங்குகளின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இறந்த குரங்குகள் அனைத்தும் மந்தி வகையை சேர்ந்தது எனவும்,

மக்கள் வசிக்கும் பகுதியில் வாழ்ந்து வரும் இவ்வகை மந்திகளின் தொல்லை தாங்காமல் யாரோ விஷமிகள் சிலர் இவைகளை அடித்துக்கொன்று சத்தமில்லாமல் போட்டு விட்டு சென்றனா, அல்லது விஷம் வைத்த காய், கனிகளை தின்றதால் இறந்து இருக்கலாம் என்ற சந்தேகமும் உள்ளது. எனவே பிரேத பரிசோதனைக்கு பிறகு தான் இறப்பிற்கான காரணம் தெரியவரும் என வனத்துறையினர் தகவல் தெரிவிக்கின்றனர். இதற்கிடையே, ஒரே இடத்தில் 24 குரங்குகள் தானாக உயிரிழக்க வாய்ப்பில்லை என்பதால், இதுகுறித்து விரிவான விசாரணை நடத்தி அறிக்கை அளிக்குமாறு திருச்சி மாவட்ட வனத் துறையினருக்கு மண்டல தலைமை வனப் பாதுகாவலர் என்.சதீஷ் உத்தரவிட்டார்.

அதன்பேரில், வனச் சரகர் வி.கோபிநாத் தலைமையில் தனிப்படை அமைத்து, குரங்குகளின் மரணத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இதுகுறித்து வனத் துறை அதிகாரிகள் கூறும்போது, “நெடுங்கூர் வனப் பகுதியில் இறந்து கிடந்த குரங்குகள் இந்த வனத்தைச் சேர்ந்த குரங்குகளாக இருக்க வாய்ப்பில்லை. வெளியில் ஏதோ ஒரு இடத்தில் இவற்றைப் பிடித்துக் கொன்று, அவற்றை இங்கு கொண்டு வந்து போட்டுச் சென்றிருக்கலாம் எனத் தெரிய வருகிறது. இறந்து கிடந்த குரங்குகளின் மீது எந்த காயமும் இல்லை.

முதற்கட்ட விசாரணையின் அடிப்படையில் அவற்றின் உணவுப்பாதையில் விஷம் இருந்ததற்கான தடயமும் இல்லை. எனவே, மூச்சுத் திணறல் காரணமாக இவை இறந்திருக்கலாம் என கருதுகிறோம். தொடர்ந்து, விசாரணை நடைபெற்று வருகிறது” என்றனர். ஒரே இடத்தில் 24 குரங்குகள் உயிரிழந்த நிகழ்வு, வனத் துறை மற்றும் வன ஆர்வலர்கள் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்திஉள்ளது.

Views: - 416

0

0