திமுகவுக்கு ஏன் வாக்களித்தோம் என மக்கள் புலம்பும் நிலை… அதிமுக வேட்பாளர்களுக்கு ஆதரவாக எம்ஆர் விஜயபாஸ்கர் பிரச்சாரம்!!

Author: Babu Lakshmanan
5 February 2022, 5:46 pm

திமுக ஆட்சியின் அவலங்கள் மாற வேண்டுமென்றால் உள்ளாட்சி தேர்தலில் அதிமுகவினை தேர்ந்தெடுங்கள் என்று முன்னாள் அமைச்சரும், அதிமுக மாவட்ட செயலாளருமான எம்.ஆர்.விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

கரூர் அருகே உள்ள கோடங்கிப்பட்டி பட்டாளம்மன் ஆலயத்தில் கரூர் மாவட்ட அதிமுக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எம்.ஆர்.விஜயபாஸ்கர், நகரமைப்பு உள்ளாட்சி தேர்தலில் அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரத்தினை துவக்கினார். கோயிலில் வழிபாடு நிகழ்த்திய பின்னர் திறந்த வெளி பிரச்சாரத்தில் தேர்தல் பிரச்சாரத்தினை துவக்கினார்.

அப்போது, அவர் பேசியதாவது :- இந்த நகரமைப்பு தேர்தலை நீதிமன்றத்தினை நாடி எப்படியாவது, நிறுத்த வேண்டுமென்று நினைத்தார்கள். ஆனால், உச்சநீதிமன்றமே தேர்தலை நடத்த வேண்டுமென்று உத்தரவு போட்டுள்ளது. ஆளுங்கட்சியினர் எந்த கட்சியாக இருந்தாலும் தேர்தலை நடத்த விரும்புவார்கள். ஏனென்றால் யார் ஆட்சியில் இருப்பார்களோ, அந்த கட்சிக்கு ஆதரவாக தான் தேர்தல் அமையும். ஆனால், தேர்தலை நடத்த திமுக விரும்பவில்லை என்றால், ஆட்சிக்கு வந்து 8 மாதங்கள் முடிந்த 9 மாதம் துவங்குகின்றது. ஊழலும், அராஜகமும் அதிகமாக அரங்கேற்றியுள்ளது என்பதனை மக்கள் சிந்தித்து பார்க்க வேண்டும்.

10 ஆண்டு காலம் முன்னாள் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா அவர்களின் ஆட்சி இருந்தது. 4 ½ வருடங்களாக தமிழகத்தின் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியும், துணை முதல்வராக ஒ.பி.எஸ் அவர்களும் ஆட்சி புரிந்தனர். 10 ஆண்டுகாலம் ஆட்சியில் மாற்றம் வேண்டுமென்று மக்கள் விரும்பியுள்ளனர். ஆனால், ஏன் திமுகவிற்கு வாக்களித்துள்ளோம் என்று நினைத்து பார்க்கின்றார்கள். தேர்தல் பிரச்சாரத்தின் போது, ஏராளமான வாக்குறுதிகள் கொடுத்தார்கள், ஆனால், எதையும் நடைமுறைப்படுத்த வில்லை.

நீட் தேர்வு ரத்து, கேஸ் சிலிண்டருக்கு ரூ.100 மானியம் வழங்கப்படும். மாதம், மாதம் ரூ. ஆயிரம் குடும்பத்தில் உள்ள இல்லத்தரசிகளுக்கு வழங்கப்படும் என்றும், பல்வேறு வாக்குறுதிகளை கொடுத்தார்கள்., ஒன்றையும் நிறைவேற்றவில்லை, ஆனால் ஒன்றே ஒன்றை நிறைவேற்றியுள்ளனர்.

என்னவென்றால் டவுன்பஸ்களில் மகளிருக்கு இலவசம் என்று கூறியதிலையும், 2 மணி நேரத்திற்கு ஒரு பேருந்தினை அறிவித்து அதில் மட்டும் பெண்களுக்கு இலவசம் என்று சென்று வருகின்றார்கள். 100 சதவிகிதத்தில் 80 விழுக்காடு பேருந்துகள் எல்.எஸ்.எஸ் மற்றும் எக்ஸ்பிரஸ் ஆக மாற்றியுள்ளனர். நானும் அத்துறையில் மந்திரியாக இருந்தவர் என்பதினால் அதனை பற்றி நன்கு தெரியும்.

இந்த மாவட்டத்தில் ஒரு அமைச்சர் ஒருவர் இருக்கின்றார். அவர் தேர்தல் பிரச்சாரத்தின் போது, 11 மணிக்கு முதல்வராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்பார், 11.05 க்கு மாட்டுவண்டி எடுத்து கொண்டு மணல் அள்ள செல்லுங்கள், எவனும் கேட்க மாட்டான். அப்படி கேட்டால் அந்த அதிகாரி இங்கே இருக்க மாட்டான் என்று பிரச்சாரத்தில் பேசி வாக்குகள் வாங்கினார். இப்போது எங்க போச்சு, மாட்டுவண்டி மணல் உரிமையாளர்களின் வாழ்வாதாரம் என்ன ஆச்சு.

இதுமட்டுமல்ல, முதல்வரின் மகன் உதயநிதி ஸ்டாலின் மற்றும் தங்கை கனிமொழி ஆகியோர் ஸ்டாலின் முதல்வரானவுடன் உங்கள் விவசாய நகைக்கடன்கள் ரத்து செய்யப்படும் என்றெல்லாம் வாக்குகள் கேட்டனர். ஆனால் என்னாச்சு, தற்போது ஏழைகளின் நகைகள் எல்லாம் ஏலத்திற்கு செல்ல உள்ளது. சுய உதவிக்குழு கடன் தள்ளுபடி இல்லை, பயிர்க்கடன் தள்ளுபடி இல்லை, நகைக்கடன் தள்ளுபடி இல்லை. இது தான் உண்மை.

பொங்கல் தொகுப்பு பரிசுகளில் இலவச வேஷ்டி சேலை மற்றும் பணம் கொடுத்து கடைசியில் ரூ 2 ஆயிரத்து 500 கொடுத்தார்கள். ஆனால் தற்போதைய முதல்வர் மு.க.ஸ்டாலின் அன்றைய எதிர்கட்சியாக இருக்கும் போது, ரூ.5 ஆயிரம் கொடுக்க வேண்டுமென்று கூறினார்கள். ஆனால், தற்போது மு.க.ஸ்டாலின் ஆட்சியில் ரூ.5 ஆயிரம் எங்கே, இந்த பொங்கலுக்கு என்ன கொடுத்தார்கள் தெரியுமா..? வெல்லத்திற்கு பதிலாக வெல்லப்பாகு கொடுத்தார்கள். திமுக ஆட்சி இன்று கிடையாது. குடும்ப ஆட்சி தான். மகன், மருமகன் ஆகிய எல்லோரும் அரசியல் செய்தார்கள். திமுக அரசின் அவலநிலையை மாற்ற வேண்டுமென்றால் நடைபெற உள்ள மாநகராட்சி மற்றும் நகராட்சி மட்டுமில்லாது பேரூராட்சிகளில் அதிமுக சின்னத்தினை ஆதரித்து உள்ளாட்சியில் நல்லாட்சி பெற வேண்டும், என்றார்.

  • G.V. Prakash understood Sainthavi at the time of separation.. Affection blossomed during the divorce case பிரியும் நேரத்தில் சைந்தவியை புரிந்து கொண்ட ஜி.வி பிரகாஷ்.. விவாகரத்து வழக்கில் மலர்ந்த பாசம்!