கோவையில் 50 ஆயிரம் பேர் திமுகவில் இணைவு… அமைச்சர் துரைமுருகன் சொன்னது போல அவர்கள் விபச்சாரிகளா..? செல்லூர் ராஜு கேள்வி

Author: Babu Lakshmanan
26 August 2022, 1:49 pm

தமிழகத்தில் 52 ஆண்டுகளாக திராவிட கட்சிகள் ஆட்சி செய்து வருவதால், திமுக எங்களுக்கு பங்காளி உறவுமுறை ஆகும் என்று மதுரையில் முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜு தெரிவித்துள்ளார்.

மதுரை பழங்காநத்தத்தில் உள்ள சோமசுந்தரம் பாரதியார் மேல்நிலைப்பள்ளியில் சட்டமன்ற உறுப்பினர் நிதியிலிருந்து 30 இலட்ச ரூபாய் மதிப்பில் கூடுதல் வகுப்பறை கட்டுவதற்கான பூமி பூஜை விழாவில் முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜு பங்கேற்றார்.

பின்னர் செய்தியாளர்களிடம் முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜு கூறியதாவது :- மதுரை மாநகராட்சியில் மேயராக உள்ள இந்திராணி நிதியமைச்சரின் நிழலாக செயல்படுகிறார். நிதியமைச்சர் கீ கொடுத்தால் மட்டுமே மேயர் பொம்மை போல செயல்படுகிறார். மதுரை மாநகராட்சியில் மேயர் எந்தவொரு பணிகளும் செயல்படுத்தவில்லை. மதுரை மாநகராட்சி இயங்குதா? இயங்கவில்லையா என தெரியவில்லை.

மதுரை மாநகராட்சி மட்டுமல்ல தமிழக அரசு செயல்படாத அரசாக உள்ளது. திமுக எதிர்கட்சியாக இருக்கும் போது ஒன்றும், ஆளும் கட்சியாக இருக்கும் போது ஒன்றும் பேசி வருகிறது.

கோவையில் திமுகவில் இணைந்த 55 ஆயிரம் பேரும் துரைமுருகன் சொன்னது போல விபச்சாரிகளா?. சினிமாத்துறை உதயநிதி ஸ்டாலின் கையில் உள்ளது. உதயநிதிக்கு படம் வழங்காததால் பல படங்கள் முடங்கி கிடக்கிறது. சபரீசன் கண் அசைவுக்காக அதிகாரிகள் காத்திருக்கிறார்கள். முதல்வர் ஸ்டாலின் பாராட்டு விழாக்களில் மட்டுமே கலந்து கொள்கிறார். மக்களை கவனிக்கவில்லை.

அதிமுக தொடர்பான வழக்கில் தீர்ப்பு எப்படி வந்தாலும் எங்களுக்கு கவலையில்லை. எடப்பாடியார் தலைமையின் கீழ் அதிமுக தொண்டர்கள் உள்ளனர். திமுக ஆட்சி அமைந்ததில் இருந்து மக்கள் உயிரை கையில் பிடித்து கொண்டு இறக்கிறார்கள். திமுக அரசு சிறப்பாக செயல்பட வேண்டும் என்பதே எங்கள் விருப்பம்.

அதிமுக ஆட்சி காலத்தில் தான் மக்களுக்கு மறுமலர்ச்சி ஏற்பட்டது. தமிழ்நாட்டில் சிங்கமாக செயல்படுவதாக கூறும் முதல்வர் ஸ்டாலின், பிரதமரை சந்திக்கும் போது பணிந்து செயல்படுகிறார். முதல்வர் விளம்பரம் தேடாமல் மக்களுக்காக சிந்தித்து திட்டங்களை செயல்படுத்த வேண்டும்.

தமிழகத்தில் 52 ஆண்டுகளாக திராவிட கட்சிகள் ஆட்சி செய்து வருவதால் திமுக எங்களுக்கு பங்காளி உறவுமுறை ஆகும். தரம் குறைந்து பேசும் அரசியல்வாதிகள் நீடித்து செயல்பட்டதில்லை. 2026ல் நிச்சயம் அதிமுக ஆட்சி அமைக்கும். 2026ல் மிக மோசமான தோல்வியை திமுக சந்திக்கும். 2024 ல் நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணி 39 இடங்களை பிடிக்கும், என கூறினார்.

  • G.V. Prakash understood Sainthavi at the time of separation.. Affection blossomed during the divorce case பிரியும் நேரத்தில் சைந்தவியை புரிந்து கொண்ட ஜி.வி பிரகாஷ்.. விவாகரத்து வழக்கில் மலர்ந்த பாசம்!