தொற்றை கட்டுப்படுத்த முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணி யோசனை : அமைச்சர் சுப்பிரமணியனிடம் கோரிக்கை மனு!!

15 May 2021, 4:20 pm
Cbe SP vElumani Minister - Updatenews360
Quick Share

கோவை : வைரஸ் தொற்று பரவலை கட்டுப்படுத்த 13 அம்ச கோரிக்கைகள் அடங்கிய மனுவை தொண்டாமுத்தூர் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் எஸ் பி வேலுமணி, சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியனிடம் அளித்தார்.

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் தலைமையில், கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

இதில் அரசு அதிகாரிகள் மற்றும் கோவை மாவட்டத்தைச் சேர்ந்த அதிமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சியான பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள் பங்கேற்றனர். அப்போது தொண்டாமுத்தூர் சட்டமன்ற உறுப்பினர் வேலுமணி கோவையில் வைரஸ் தொற்றை கட்டுப்படுத்த மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்த கோரிக்கை மனுவை சுகாதாரத்துறை அமைச்சரிடம் வழங்கினார்.

அந்த மனுவில், கோவை மாவட்ட நிர்வாகம் மற்றும் மாநகராட்சி நிர்வாகம் இணைந்து நோய் தொற்றின் முதல் அலையின் போது எடுத்த நடவடிக்கையை போல வீதி வீதியாக கிருமிநாசினிகள் தெளித்து நோய் தொற்றை கட்டுபடுத்த வேண்டும். பரவலை தடுக்க அரசு மருத்துவமனைகள், அனைத்து தனியார் மருத்துவமனைகள் கூடுதல் கொரோனா வார்டுகள் மற்றும் கூடுதல் ஆக்சிஜன் படுக்கை வசதிகளை அதிகரிக்க செய்ய உரிய நடவடிக்கை மேற் கொள்ள வேண்டும்.
கிராமப்புறங்களில் தொற்று வேகமாக பரவி வருகின்றது. தொற்று பாதித்தவர்கள் நகரப் பகுதிகளில் உள்ள மருத்துவமனையை நாடி வருகின்றனர். இதை தவிர்க்க அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் கூடுதல் படுக்கை வசதிகள் செய்து கொடுத்தால் கொரோனா தொற்று பாதித்தவர்களுக்கு சிகிச்சை அளிக்க ஏதுவாக இருக்கும்.

கோவை அரசு மருத்துவமனையில் கொரோனா தொற்று பாதித்து இறந்த நோயாளியின் உடலை விரைவில் அப்புறப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இறந்தவரின் உறவினர்கள் பலமணி நேரங்கள் காத்திருக்கின்றனர். அரசு மற்றும் அனைத்து தனியார் மருத்துவமனைகளிலும் உள்ள படுக்கை வசதி மற்றும் ஆக்சிஜன் படுக்கை வசதிகள் காலி உள்ள விபரங்களை பொது மக்கள் அறிந்து கொள்ளும் வகையில் செய்தித்தாள் மற்றும் ஊடகம் வாயிலாக அனைவரும் அறிந்து கொள்ளும் வகையில் தெரிய படுத்தினால் தொற்று பாதித்த நோயாளிகள் அலைக்கழிக்கப்படுவது தடுக்கப்படும்.

ஆம்புலன்ஸ் காத்திருப்பு அதனால் ஏற்படும் உயிர் இழப்புகளை தடுக்க போர்க்கால நடவடிக்கைகளை மேற் கொள்ள வேண்டும். கொரோனா தொற்றின் தன்மைக்கேற்ப நோயாளிகளை வகைப்படுத்தி பிரித்து நோயாளிகளை காக்க வைக்காமல் உடனடியாக சிகிச்சை மையங்களுக்கு அனுப்பி சிகிச்சை அளிக்க நடவடிக்கையும், அவர்களை தொடர்ந்து
கண்காணிக்க மருத்துவர் குழுக்கள் மற்றும் அதிகாரிகள் அடங்கிய குழுக்கள் நியமிக்கப்பட வேண்டும்.

கோவை மாவட்டத்தின் எல்லைகளில் அண்டை மாநிலம் மற்றும் மாவட்ட எல்லைகளில் சோதனை சாவடிகள் மூலம் நோய் தொற்று குறித்து பரிசோதனை செய்து அனுமதிக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். முழு ஊரடங்கின்போது பொது மக்களுக்கு தேவையான காய்கறிகள் மற்றும் பழங்கள் நடமாடும் வாகனங்கள் மூலம் 2 (அல்லது) 3 நாட்களுக்கு ஒரு முறை கிடைக்கும் வகையில் ஏற்பாடு செய்தால் பொது மக்கள் வெளியில் நடமாடுவதை தடுக்கலாம்.

தனியார் மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சைக்கு கூடுதல் கட்டணம் பெறாமல் தடுக்க கண்காணிப்பு குழு அமைக்க வேண்டும் ஆகிய 13 அம்ச கோரிக்கைகள் இடம்பெற்றுள்ளன. இந்த கூட்டத்தில் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் பொள்ளாச்சி ஜெயராம், அம்மன் கே.அர்ஜுனன், கே.ஆர்.ஜெயராம், வானதி சீனிவாசன், அமுல் கந்தசாமி, தாமோதரன், கந்தசாமி, பி.ஆர்.ஜி அருண்குமார், ஏ.கே செல்வராஜ் மற்றும் அரசு அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

Views: - 213

0

0