அன்புமணியை அவதூறாக பேசிய மாஜி பாமக எம்எல்ஏ மன்னிப்பு கேட்க வேண்டும்.. பாமக கூட்டத்தில் தீர்மானம்!
Author: Udayachandran RadhaKrishnan10 July 2025, 2:32 pm
பா.ம.க., நிறுவனர் ராமதாஸ், தலைவர் அன்புமணிக்கு இடையே ஏற்பட்டுள்ள மோதல் காரணமாக தொண்டர்கள் பிளவுபட்டு உள்ளனர்.
நேற்று முன்தினம் திண்டிவனம் அடுத்த ஓமந்துாரில், பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் தலைமையில் நடந்த செயற்குழு கூட்டத்தில் கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த முன்னாள் பா.ம.க. எம்.எல்.ஏ., மேகநாதன் கலந்து கொண்டார்.
ராமதாஸ் பக்கம் நிற்பதால் அவரை மாவட்ட செயலாளர் பொறுப்பிலிருந்து நீக்கி பழனிவேல் என்பவரை புதிய மாவட்ட செயலாளராக கடந்த சில தினங்களுக்கு முன் அன்புமணி அறிவித்தார்.
இதையும் படியுங்க: சிக்கன், மட்டன் என 9 வகை அசைவ உணவு விருந்து : நள்ளிரவு வரை கட்சியினரை ‘கவனித்த’ செந்தில் பாலாஜி!
இந்நிலையில், பா.ம.க., செயற்குழு கூட்டத்தில் பேசிய மேகநாதன் அன்புமணி வரும் 25ம் தேதி உரிமை மீட்பு நடைபயணம் மேற்கொள்ள உள்ளார். அவர், கிருஷ்ணகிரி வரும்போது கருப்பு சட்டை அணிந்து அவருக்கு எதிர்ப்பு தெரிவிப்பேன், என்றார்.
மேலும் கிருஷ்ணகிரி தாலுகா போலீசில், பா.ம.க., செயற்குழு கூட்டத்திற்கு சென்று வந்த காரை மர்மநபர்கள் உடைத்துள்ளனர். பா.ம.க., நிர்வாகிகள் சிலரால் தனக்கு ஆபத்து உள்ளது. என் வீட்டிற்கு பாதுகாப்பு வேண்டும் எனவும் புகாரளித்துள்ளார்.
இந்த நிலையில் கிருஷ்ணகிரி மாவட்ட ஒருங்கிணைந்த, பா.ம.க., நிர்வாக குழு கூட்டம் நேற்று நடந்தது. மத்திய மாவட்டசெயலாளர் மோகன்ராம் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், மேற்கு மாவட்ட செயலாளர் கோவிந்தராஜ், கிழக்கு மாவட்ட செயலாளர் பழனிவேல் உள்ளிட்ட மாவட்ட ஒன்றிய நகர பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்தில் முன்னாள் எம்எல்ஏ மேகநாதன் மன்னிப்பு கேட்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றினர். தொடர்ந்து மத்திய மாவட்ட செயலாளர் மோகன்ராம் நிருபர்களிடம் கூறியதாவது பா.ம.க., நிறுவனர் ராமதாஸ், தலைவர் அன்புமணியை விமர்சித்து யார் பேசினாலும் நடவடிக்கை எடுக்கப்படும்.

முன்னாள் மாவட்ட செயலாளர் மேகநாதன், தனக்கு தானே விளம்பரம் தேடிக்கொள்வதற்காக, பா.ம.க., செயற்குழு கூட்டத்தில் அன்புமணியை விமர்சித்து பேசியுள்ளார். அவர் பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும்.

இல்லாவிட்டால், பா.ம.க.,வின் எந்த நிகழ்ச்சிகளிலும் அவர் கலந்து கொள்ள முடியாது. மாவட்ட செயலாளர் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். கட்சியின் உறுப்பினரிலிருந்தும் நீக்க தலைமைக்கு பரிந்துரைக்க உள்ளோம். அனைத்து, பா.ம.க., நிர்வாகிகளும் எங்களுடன் உள்ளனர்.

அவர் கார் டிரைவர் கூட அவருடன் இல்லை. இந்நிலையில் அவர்களது காரை உடைத்ததாக போலீசில் புகார் அளிக்கிறார். கட்சி நிர்வாகிகள் யாரும் தலைமையை எப்போதும் விமர்சிக்க மாட்டோம் என தெரிவித்தார்.
