“உங்களால் தான் எங்களுக்கு வேலை கிடைக்கல..” : வடமாநில இளைஞரை கத்தியால் வெட்டிய 4 பேர் கைது..!
Author: kavin kumar17 January 2022, 1:06 pm
திருவள்ளூர்: திருவள்ளூரில் வடமாநில இளைஞரை கத்தியால் வெட்டிய நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
திருவள்ளூர் அருகே உள்ள தண்டலம் கிராமத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் சுமார் 20 வடமாநில இளைஞர்கள் மர வேலையில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்கள் திருவள்ளூர் மார்க்கெட் பகுதியில் மளிகை பொருட்களை வாங்கிக் கொண்டிருந்தபோது திருவள்ளூர் பகுதியை சேர்ந்த 6 பேர் வடமாநில இளைஞர்களை பார்த்து உங்களால் தமிழக மக்களுக்கு வேலை கிடைக்கவில்லை எனவும், வடமாநில இளைஞர்கள் இங்கு யாரும் வரக்கூடாது எனவும் திட்டி வடமாநில இளைஞர்களை தாக்கியுள்ளனர். பின்னர் மறைத்து வைத்திருந்த கத்தியால் வடமாநில இளைஞர் அமித்குமார் என்பவரை வெட்டியுள்ளனர். இதனால் தற்காப்பிற்காக கத்தியை கையால் தடுக்க முயன்ற அமித்குமாரின் இடது உள்ளங்கையில் பலமாக வெட்டு விழுந்தது.
இதனையடுத்து அக்கம்பக்கத்தினர் பலத்த காயமடைந்த இளைஞரை மீட்டு திருவள்ளூர் அரசு மருத்துமனைக்கு சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவருக்கு உள்ளங்கையில் 13 தையல்கள் போடப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதனை அடுத்து வழக்குப்பதிவு செய்த திருவள்ளூர் நகர காவல் ஆய்வாளர் சத்யஸ்ரீபாபி தலைமையிலான காவல்துறையினர் தலைமறைவாக இருந்த திருவள்ளூர் எடப்பாளையம் விஜய், தலகாஞ்சேரியை சேர்ந்த வேலு, பெருமாள் செட்டி தெருவை சேர்ந்த மஜித் , முகமதலி தெருவை சேர்ந்த மொய்னுதீன் ஆகிய 6 பேரை பிடித்து காவல்துறை வாகனத்தில் கொண்டு சென்றபோது வாகனத்திலிருந்து எகிறி குதித்து இருவர் தப்பி ஓடினர். பின்னர் பிடிபட்ட 4 நபர்களை காவல் நிலையத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பட்டப்பகலில் மார்க்கெட் பகுதியில் நடைபெற்ற சம்பவம் மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மேலும் வடமாநில இளைஞர்களை கத்தியால் வெட்டி தாக்குதல் நடத்திய இருவரை திருவள்ளூர் நகர காவல் துறையினர் தேடி வருகின்றனர்.
0
0