பிரதமர் மோடி திட்டத்தில் மோசடி : ஆட்சியரிடம் பாஜக.,வினர் மனு
7 September 2020, 12:12 pmகோவை : பிரதம மந்திரி வேளாண்மை உதவி திட்டத்தில் நடக்கும் மோசடியை தடுக்க கோரி பாஜக.,வினர் கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
அந்த மனுவில் கூறியிருப்பது : பிரதம மந்திரி வேளாண்மை உதவி திட்டத்தின் கீழ் இந்தியா முழுவதும் 9.5 கோடி விவசாயிகள் பயன்பெற்று வருகிறார்கள். நான்கு மாதத்திற்கு ஒருமுறை ரூ.2,000 என்று ஆண்டுக்கு 6000ரூபாய் விவசாயிகளுக்கு வழங்குவதே இத்திட்டத்தின் நோக்கமாகும்.
திட்டத்தின் சிறப்பு என்னவென்றால் விவசாயிகளுக்கு கிடைக்கக்கூடிய நிதி நேரடியாக அவர்களது வங்கி கணக்கில் செலுத்தப்படுவது தான். இந்த திட்டத்தின் கீழ் தமிழகத்தில் மட்டும் ஏறத்தாழ நாற்பது லட்சம் விவசாயிகள் பயனடைந்து வருகிறார்கள். இப்படிப்பட்ட அற்புதமான திட்டம் நலிவுற்ற விவசாயிகள் தங்களுடைய விவசாய பணிகளை மேற்கொள்ள பயன்படுகிறது.
இடற்பாடு இன்றி விவசாயம் நடைபெற வேண்டுமென்ற நோக்கத்தில் இந்த உதவித்தொகை வழங்கப்படுகிறது. இணையதளத்தில் பதிவு செய்ய அரசு மேற்கொண்டுள்ள வழிகளை
தவறுதலாக கையாண்டு அரசாங்கத்தை ஏமாற்றி சிலர் விவசாயிகள் அல்லாதவர்களுக்கு இந்த உதவித்தொகையை பெற்றுத் தருகிறார்கள் என்பது அதிர்ச்சி அளிக்கக்கூடியது.
நலிவுற்ற விவசாயிகளுக்கு உதவிட வேண்டும் என்ற நல்ல எண்ணத்தில் மத்திய அரசு கொண்டு வந்துள்ள திட்டத்தை சிலர் குறுக்கு வழியில் மோசடி செய்து இந்த நிதியை பயன்படுத்த நினைப்பது மிகப்பெரிய குற்றமாகும்.
கடலூர், விழுப்புரம், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, காஞ்சிபுரம், வேலூர், கரூர், கோவை போன்ற மாவட்டங்களில் இந்த ஆண்டு திடீரென்று ஒவ்வொரு மாவட்டத்திலும் 40,000 பேர், 30,000 பேர் என்று புதிதாக இணைக்கப்பட்டிருக்கிறார்கள். அவர்கள் எல்லோருக்கும் முதல் தவணையாக 2000 ரூபாய் கணக்கில் வரவு வைக்கப்பட்டு இருக்கிறது.
ஒரே வங்கியில் 300 பேர், 400 பேர் என்று தவறான நபர்கள் உதவி பெற்று வருகிறார்கள். விவசாயிகள் அல்லாத பல்லாயிரக்கணக்காணோர் இத்திட்டத்தில் இணைக்கப்பட்டிருப்பது மிகப்பெரிய மோசடியாகும்.
இந்த திட்டத்தின் மூலம் தமிழகம் முழுவதும் பயன்பெறுவோர் பற்றிய கணக்கெடுப்பை மாநில அரசு மிகத்தெளிவாக பரிசீலனை செய்து, இந்த தொகை உரிய விவசாயிகளுக்கு கிடைக்கிறதா அல்லது பல இடங்களில் இது போன்ற மோசடிகள் நடைபெற்று இருக்கிறதா என ஆராய வேண்டும். குற்றவாளிகள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
0
0