தூய்மை பணியாளர்களுக்கு இலவச வீடு, ரூ.10 கோடி கடன், பணி நிரந்தரம்? தமிழக அமைச்சரவையில் முடிவு!
Author: Udayachandran RadhaKrishnan14 August 2025, 2:20 pm
சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட அனைத்து அமைச்சர்களும் பங்கேற்று, தூய்மைப் பணியாளர்களின் வாழ்க்கையை மேம்படுத்தும் வகையில் முடிவுகள் எடுக்கப்பட்டன.

இந்த முடிவுகள் குறித்து அமைச்சர் தங்கம் தென்னரசு விவரித்தபோது, சென்னை மாநகராட்சியில் முதற்கட்டமாக தூய்மைப் பணியாளர்களுக்கு பிரத்யேக திட்டங்கள் அறிமுகப்படுத்தப்படும். இது படிப்படியாக மாநிலம் முழுவதும் விரிவாக்கப்படும்.
பாதுகாப்பு உறுதி:
பணியின்போது உயிரிழக்கும் தூய்மைப் பணியாளர்களின் குடும்பங்களுக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்கப்படும். மேலும், காப்பீட்டுத் தொகையும் ரூ.10 லட்சமாக உயர்த்தப்படுகிறது.
ஆரோக்கியத்தில் அக்கறை:
தூய்மைப் பணியாளர்களுக்கு துறைசார் நோய்களைக் கண்டறிந்து சிகிச்சையளிக்க தனி திட்டம் உருவாக்கப்படும்.
கல்வியில் புரட்சி:
தூய்மைப் பணியாளர்களின் குழந்தைகளுக்கு உயர்கல்வி உதவித்தொகை, விடுதி மற்றும் புத்தகக் கட்டணங்களை அரசே ஏற்கும். எந்தப் பள்ளியில் பயின்றாலும், அவர்களுக்கு கல்வி ஒளி பரவும்!
பொருளாதார வலிமை:
ரூ.10 கோடி கடனுதவி ஒதுக்கீடு, 6% வட்டி மானியம் மற்றும் கடனைத் திருப்பிச் செலுத்துவதற்கு ஆதரவு ஆகியவை தூய்மைப் பணியாளர்களுக்கு புது நம்பிக்கையை அளிக்கும்.
காலை உணவு திட்டம்:
சென்னை மாநகராட்சியில் முதன்முறையாக இலவச காலை உணவு திட்டம் தொடங்கப்படும். இது மற்ற நகர்ப்புறங்களுக்கும் விரிவாக்கப்படும். கிராமப்புறங்களில் ஊராட்சிகள் மூலம் இலவச உணவு வழங்கப்படும்.
கனவு வீடு நனவாகிறது:
நகர்ப்புறங்களில் 30,000 குடியிருப்புகள் கட்டப்படும். கிராமப்புறங்களில் கலைஞர் வீடு திட்டத்தில் முன்னுரிமை, மற்றும் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்துடன் இணைந்து புதிய வீடுகள் கட்டித்தரப்படும்.
பணி நிரந்தரம்:
பணி நிரந்தரம் தொடர்பான வழக்குகள் நிலுவையில் உள்ளன. அவை முடிவடைந்தவுடன், தூய்மைப் பணியாளர்களுக்கு நிரந்தர வேலைவாய்ப்பு குறித்து முடிவு எடுக்கப்படும்.
