ஆந்திராவில் இருந்து மதுரை வரை : கஞ்சா கடத்திய கும்பல்!!
3 September 2020, 5:47 pmவிழுப்புரம் : ஆந்திராவில் இருந்து மதுரைக்கு 134 கிலோ கஞ்சா மற்றும் கடத்திய லாரி பறிமுதல் செய்த போலீசார் 2 பேரை கைது செய்தனர்.
ஆந்திராவில் இருந்து விழுப்புரம் மாவட்டம் வழியாக லாரியில் கஞ்சா கடத்தப்படுவதாக விழுப்புரம் போதைப்பொருள் தடுப்பு பிரிவு காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து விழுப்புரம் போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசார் சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.
இந்நிலையில் சம்பந்தப்பட்ட லாரி விக்கிரவாண்டி சுங்கச்சாவடியை கடக்க உள்ளதாக கிடைத்த தகவலையடுத்து அப்பகுதியிலிருந்த நெடுஞ்சாலை ரோந்துப்பிரிவு குழுவினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அவர்கள், சுங்கச்சாவடியில் தீவிர வாகன சோதனை மேற்கொண்டனர்.
அப்போது அந்த வழியாக வந்த ஒரு லாரியை போலீசார் சந்தேகத்தின்பேரில் மடக்கிப்பிடித்து சோதனை செய்ததில் அந்த லாரியினுள் 134 கிலோ எடை கொண்ட பாக்கெட்டுகளில் கஞ்சா இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து லாரியில் வந்த 2 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தியதில் அவர்கள் மதுரையை சேர்ந்த டிரைவர் முருகானந்தம் (வயது 31), கிளீனர் பிரபாகரன் (வயது 28) என்பதும், ஆந்திரா பகுதியிலிருந்து மதுரைக்கு கஞ்சாவை கடத்திச்செல்ல இருந்ததும் தெரியவந்தது.
இதனையடுத்து முருகானந்தம், பிரபாகரன் ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்து அவர்களிடமிருந்த ரூ.2 லட்சத்து 30 ஆயிரம் மதிப்புள்ள கஞ்சாவையும், கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட லாரியையும் பறிமுதல் செய்தனர். மேலும் இந்த கஞ்சா கடத்தல் பின்னணியில் உள்ள நபர்கள் யார், யார்? என போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
0
0