மும்பையில் இருந்து குமரி வரை… பெண் சப்இன்ஸ்பெக்டர் துணையுடன் கஞ்சா விற்பனை : சொகுசு வாழ்க்கை வாழ்ந்த ஜிம் மாஸ்டர்!!

Author: Udayachandran RadhaKrishnan
22 May 2022, 9:32 pm

கன்னியாகுமரி : மும்பை பெண் சப்-இஸ்பெக்டரின் துணையோடு குமரியில் கஞ்சா விற்ற கணவர் உட்பட 2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.

குமரி மாவட்டம் திருவிதாங்கோட்டில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக தக்கலை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. 

இதனையடுத்து,டிஎஸ்பி கணேசன் வழிகாட்டுதலில் பயிற்சி ஏ.எஸ்.பி விவேகானந்தா சுக்லா தலைமையில், சப் இன்ஸ்பெக்டர் ராஜசேகர் தலைமையிலான போலீசார் திருவிதாங்கோடு உட்பட பல இடங்களில் வாகன சோதனை செய்தனர். 

அப்போது திருவிதாங்கோட்டில் சந்தேகப்படும்படியாக நின்ற புதுப்பள்ளி தெரு செட்டியார் விளையை சேர்ந்த செல்வின் மற்றும் கமலபந்தி தெருவை சேர்ந்த மனோஜ் ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர். இதில் இருவரும் கஞ்சா வைத்திருந்தது தெரியவந்தது. 

தொடர்ந்து நடத்திய விசாரணையில் பளு தூக்கும் வீரரான செல்வின் கடந்த சில வருடங்களுங்களுக்கு முன் மும்பை சென்று அங்குள்ள ஜிம் ஒன்றில் டிரைனராக பணியாற்றி வந்துள்ளார்.

அப்போது அங்கு வரும் மும்பையை சேர்ந்த பெண் சப்-இன்ஸ்பெக்டர் ஒருவரை காதலித்து திருமணம் செய்து கொண்டதோடு அங்கேயே குடும்பத்தோடு வசித்து வந்துள்ளார்.

இந்த நிலையில் மனைவியின் மூலம் அங்குள்ள கஞ்சா விற்பனை கும்பலுடன் தொடர்பு ஏற்பட்ட நிலையில் சப்-இன்ஸ்பெக்டரான மனைவியின் துணையுடன் திருவிதாங்கோடு பகுதியை சேர்ந்த மற்றொரு ஜிம் டிரைனரான தனது நண்பன் மனோஜ் உடன் சேர்ந்து மும்பையில் இருந்து கஞ்சாவை மொத்தமாக கொள்முதல் செய்து காரில் கடத்தி வந்து வரும்போதே கேரளா உள்ளிட்ட இடங்களுக்கு சப்ளை செய்வதும் தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் விற்பனை செய்து மும்பையில் அடுக்குமாடி குடியிருப்பில் தொழிலதிபர் போல உல்லாச வாழ்க்கை வாழ்ந்து வந்ததும் தெரியவந்துள்ளது.

பின்னர் அவர்களிடமிருந்து 4 கிலோ 100 கிராம் கஞ்சா, கார், மோட்டார் சைக்கிள் மற்றும் ரூ.36 ஆயிரம் பணத்தையும் போலீசார் பறிமுதல் செய்து இருவரையும் போலீஸ் ஸ்டேஷன் கொண்டு வந்தனர். தொடர்ந்து அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

  • tourist family negative review from valaipechu team படம் வர்ரதுக்கு முன்னாடியே நெகட்டிவ் விமர்சனம்; டூரிஸ்ட் ஃபேமிலி குறித்து வாய்விட்ட பிரபலம்!