பல்வேறு மாநிலங்களில் சொகுசு கார்களை திருடிய கும்பல் கைது : 11 கார்கள் பறிமுதல்..!

30 November 2020, 4:13 pm
car Theft Culprits- Updatenews360
Quick Share

கோவை : பல்வேறு மாநிலங்களில் சொகுசு கார்களை திருடிய கும்பலை கோவை போலீசார் கைது செய்துள்ளனர். அவர்களிடமிருந்து 11 கார்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

கோவை மதுக்கரை அடுத்த அரிசிபாளையம் பகுதியில் மதுக்கரை போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது பதிவு எண் இல்லாமல் வந்த சொகுசு கார் ஒன்றை போலீசார் தடுத்து நிறுத்தினர்.

போலீசை பார்த்த உடன் காரில் வந்த 6 பேர் அங்கிருந்து தப்பி ஓட முயன்றனர். அதில் 3 பேரை போலீசார் மடக்கி பிடித்தனர். அவர்களிடம் விசாரித்தபோது மதுக்கரையை சேர்ந்த சக்தி (வயது 22), திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்த விஜயராஜா (வயது 23), தூத்துக்குடியை சுரேந்திரன் (வயது 23) என்ப்தும், இவர்கள் வந்தது திருட்டு கார் என்பது தெரியவந்தது.

இதையடுத்து அவர்களை காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரித்த போது இதேபோல பல்வேறு கார்களை திருடி கோவைக்கு எடுத்து வந்தது தெரியவந்தது. இதையடுத்து மாவட்ட எஸ்.பி அருளரசு உத்தரவின் பேரில் மதுக்கரை இன்ஸ்பெக்டர் முருகேஷ் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் ரதீஸ்குமார், திருமலைசாமி உள்ளிட்ட தனிப்படை போலீஸார் ஆய்வு விசாரணை மேற்கொண்டனர்.

அப்போது டெல்லி பதிவு எண் கொண்ட ஆடி கார், கர்நாடகா பதிவு எண் கொண்ட இன்னவோ உள்ளிட்ட 11 சொகுசு கார்களை பறிமுதல் செய்தனர். மேலும் தப்பி ஓடிய மற்ற நபர்களை தேடி வருகின்றனர்.

முதல் கட்ட விசாரணையில் இந்த கார்கள் அனைத்தும் உள்ளூரில் ஓட்ட கர்நாடகா, டெல்லி உள்ளிட்ட மாநிலங்களில் வாடகைக்கு எடுத்து விட்டு, அதை கோவைக்கு திருடி வந்ததும், பின்னர் ஜி.பி.எஸ். கருவிகளை உடைத்து வீசி விட்டு, கார்களை விற்பனை செய்வது போன்ற செயல்களில் ஈடுபட்டது தெரியவந்தது.

இதுகுறித்து செய்தியாளர்களை சந்தித்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருளரசு, இவர்கள் வெளி மாவட்டங்களில் இருந்து கார்களை வாடகைக்கு எடுத்து வந்து அதில் பொருத்தி உள்ள ஜிபிஎஸ் கருவியை நீக்கிவிட்டு கார்களை விற்பனை செய்யும் பணியில் ஈடுபட்டு வந்தது தெரிய வந்ததாக தெரிவித்துள்ளார்.

இவர்களுடன் வந்த மற்ற குற்றவாளிகளான சாதிக், இம்ரான், தினேஷ், ஆகியோர் சுந்தராபுரம் பகுதியில் “சைன்” ஆட்டோகேரேஜ் என்ற பெயரில் நடத்தி வந்துள்ளார்கள், கடத்தி வரும் கார்களை அந்த ஒர்க் ஷாப்பில் வைத்து பிரித்து விற்பனையில் ஈடுபட்டது தெரிய வந்துள்ளது.

தற்போது பிடிபட்ட காரின் உரிமையாளர்களை தொடர்பு கொண்டுள்ளோம் அவர்கள் வருவதாக தெரிவித்துள்ளார்கள். அவர்கள் வந்ததும் உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்படும் என தெரிவித்தார். மேலும் தப்பி ஓடிய குற்றவாளிகள் கேரளாவில் பதுங்கி இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. அவர்களை பிடிக்க தனிப்படை போலீசார் கேரளா விரைந்து உள்ளதாக தெரிவித்தார்.

Views: - 26

0

0