கோவை வெள்ளலூர் குப்பை கிடங்கு பிரச்சனைக்கு இனி குட்பை? நேரில் ஆய்வு செய்த பாஜக எம்பி உறுதி!!

Author: Udayachandran RadhaKrishnan
19 January 2024, 3:59 pm

கோவை வெள்ளலூர் குப்பை கிடங்கு பிரச்சனைக்கு இனி குட்பை? நேரில் ஆய்வு செய்த பாஜக எம்பி உறுதி!!

கோவை குனியமுத்தூர் பகுதியில் மத்திய அரசின் திட்டங்கள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சியான ‘நமது லட்சியம், வளர்ச்சி அடைந்த பாரதம்’ நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.

இதில் சிறப்ப விருந்தினராக ராஜ்யசபா உறுப்பினரும், உத்தரப்பிரதேசத்தின் முன்னாள் துணை முதல்வருமான டாக்டர்.தினேஷ் சர்மா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

மாவட்ட முன்னோடி வங்கியான கனரா வங்கி, நபார்டு வங்கி, தபால் துறை, சுகாதாரத்துறை, இந்தியன் ஆயில் நிறுவனம் உள்ளிட்ட மத்திய அரசு துறைகளைச் சேர்ந்த அதிகாரிகள் இந்நிகழ்வில் பங்கேற்றனர்.

இதில், வளர்ச்சி அடைந்த பாரதத்திற்கான உறுதிமொழி ஏற்கப்பட்டது. மத்திய அரசின் உஜ்வாலா கேஸ் இணைப்பு திட்டம், தபால் துறையின் கீழ் செல்வமகள் சேமிப்பு திட்டம், சாலையோர வியாபாரிகளுக்கான பி.எம் ஸ்வநிதி திட்டம், ஸ்டார்ட் அப் கடனுதவி திட்டம் ஆகியவை இந்நிகழ்வில் பயனாளிகளுக்கு வழங்கப்பட்டது.

இந்நிகழ்வில் சிறப்புரையாற்றிய ராஜ்யசபா உறுப்பினர் டாக்டர்.தினேஷ் சர்மா பேசுகையில்,’நமது லட்சியம் வளர்ச்சி அடைந்த பாரதம் நிகழ்ச்சி’ நாடு முழுவதும் சிறப்பாக நடைபெற்று வருவதாகவும், இதில் பிரதமரின் உத்தரவாதத்தோடு மத்திய அரசின் திட்டங்கள் குறித்து பொதுமக்களிடம் சிறப்பாக கொண்டு செல்வதாக குறிப்பிட்டார்.

இந்நிகழ்ச்சியில் மத்திய அரசின் பல்வேறு திட்டங்கள் பொதுமக்களை நேரடியாக சென்றடைவதாகவும், பொதுமக்கள் புதிதாக திட்டங்களில் இணைவதற்கு நல்வாய்ப்பாக இந்த நிகழ்ச்சி அமைந்துள்ளதாகவும் தெரிவித்தார்.தொடர்ந்து பேசியவர், மத்திய அரசின் திட்டங்களை அமல்படுத்துவதில் தமிழகத்தில் ஆளும் திமுக அரசு சுணக்கம் காட்டுவதாகவும், இதனால் மத்திய அரசின் திட்டங்கள் மக்களை சென்றடைவதில் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாகவும் கூறினார்.

மேலும், தமிழகத்தின் முக்கிய மாவட்டமாக திகழும் கோயம்புத்தூரின் மாநகர பகுதியில் உள்ள வெள்ளலூர் குப்பை கிடங்கில் மலை அளவு குப்பைகள் தேங்கி இருப்பதால் சுற்றுச்சூழல் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளது எனவும், இதனால் நிலத்தடி நீர் பாதிக்கப்பட்டு சுற்றி வசிக்கும் பொதுமக்கள் பல்வேறு சுகாதார சீர்கேடுகளை அனுபவித்து வருவதாக சுட்டிக்காட்டினார்.

இதுகுறித்து மத்திய அரசிடம் அறிக்கை கொடுக்கப்பட்டு வெள்ளலூர் குப்பை கிடங்கு பிரச்சனையை சரி செய்ய மத்திய அரசு சார்பில் உரிய நடவடிக்கை எடுக்க பாஜக சார்பில் வலியுறுத்தப்படும் எனவும் அவர் உறுதியளித்தார்.

இந்நிகழ்ச்சிக்கு, முன்னதாக வெள்ளலூர் பகுதியில் உள்ள குப்பை கிடங்கிற்கு நேரடியாக சென்ற ராஜ்யசபா உறுப்பினர் டாக்டர்.தினேஷ் சர்மா அங்கு தேங்கியிருந்த குப்பைகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அதனைத் தொடர்ந்து, வெள்ளலூர் பகுதி குடியிருப்பு வாசிகளிடம் குறைகளை கேட்டறிந்தார்.இந்நிகழ்ச்சிகளில், கோயம்புத்தூர் தெற்கு மாவட்ட பாஜக தலைவர் வசந்த ராஜன், பாஜக நிர்வாகிகள் மற்றும் பலர் உடன் இருந்தனர்.

  • G.V. Prakash understood Sainthavi at the time of separation.. Affection blossomed during the divorce case பிரியும் நேரத்தில் சைந்தவியை புரிந்து கொண்ட ஜி.வி பிரகாஷ்.. விவாகரத்து வழக்கில் மலர்ந்த பாசம்!