சவுக்கு சங்கர் மீது குண்டர் சட்டம்.. இதெல்லாம் ரொம்ப தவறு : தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் செக்!

Author: Udayachandran RadhaKrishnan
6 August 2024, 8:15 pm

பெண் போலீசாரை அவதூறாகப் பேசியதாகக் கைது செய்யப்பட்ட யூ டியூபர் சவுக்கு சங்கரைக் குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையிலடைத்த உத்தரவை ரத்து செய்யக்கோரி அவரது தாய் கமலா சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனு நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம், வி.சிவஞானம் அமர்வில் விசாரணைக்கு வந்தது. வழக்கு: அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் அய்யப்பராஜ், சவுக்கு சங்கரின் கருத்தால் பொது அமைதிக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை எனக் கூறினார்.

மேலும், தவறான தகவல்களின் அடிப்படையில் இந்த வழக்குப் பதிவு செய்யப்பட்டு குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். காவல்துறை சார்பில் கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் ராஜ் திலக் ஆஜராகி, சவுக்கு சங்கர் தொடர்ந்து இதுபோல அவதூறு கருத்துகளைத் தெரிவித்து வருவதாகவும், அதனைத் தடுக்கக் கூடிய வகையிலேயே குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டதாக விளக்கமளித்தார்.

சவுக்கு சங்கரின் கருத்து கண்டனத்திற்குரியது எனத் தெரிவித்த நீதிபதிகள், இதற்காக அவர் மீது வழக்குப் பதிவு செய்து அவருக்குத் தண்டனை பெற்றுத்தரலாம் எனவும், ஆனால் குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்டது தவறு எனக் குறிப்பிட்டனர்.

திரைப்படங்களில் போலீசார், வழக்கறிஞர்கள் மற்றும் நீதிபதிகள் குறித்து விமர்சனம் செய்யப்படுகிறது? அப்படியென்றால் அனைவரும் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா? எனவும் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். ஆங்கிலேயர்கள் காலத்தில் கொண்டு வரப்பட்ட தடுப்புக் காவல் சட்டத்தை தற்போது பயன்படுத்தினால் அது நம்மை ஆங்கிலேயர் ஆட்சிக்குக் கொண்டு செல்லும் எனவும் நீதிபதிகள் கூறினார்.

வழக்கில் அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்த நிலையில், இந்த மனு மீதான தீர்ப்பை நீதிபதிகள் தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்தனர்.

  • G.V. Prakash understood Sainthavi at the time of separation.. Affection blossomed during the divorce case பிரியும் நேரத்தில் சைந்தவியை புரிந்து கொண்ட ஜி.வி பிரகாஷ்.. விவாகரத்து வழக்கில் மலர்ந்த பாசம்!