போதை ஆசாமியை செருப்பால் தாக்கிய அரசு பேருந்து நடத்துனர் : வைரலாகும் அதிர்ச்சி வீடியோ!!

Author: Udayachandran RadhaKrishnan
4 March 2023, 9:38 pm

தென்காசி மாவட்டம், தென்காசி புதிய பேருந்து நிலையத்திலிருந்து மதுரை கோட்ட அரசு பேருந்து ஒன்று ராஜபாளையம் நோக்கி பயணிகளை ஏற்றிக் கொண்டு சென்று கொண்டிருந்தது.

அப்பொழுது, கடையநல்லூர் பேருந்து நிலையத்தில் அந்த பேருந்து பயணிகளை ஏற்றிக் கொண்டிருக்கும்போது, அங்கு வந்த ஒரு போதை ஆசாமி தள்ளாடியபடி பேருந்தில் ஏற முயற்சி செய்துள்ளார்.

அப்பொழுது, அதைப் பார்த்த பேருந்து நடத்துனர் ‘நீ பேருந்தில் ஏறாத, பேருந்தில் பெண்கள் பலர் உள்ளனர். உனக்கு நிக்கவே முடியல, இங்க வந்து எனக்கு பிரச்சனைகளை இழுத்து விட்டுராத’ என கூறியபடி அந்த போதை ஆசாமியை பேருந்து நடத்துனர் பேருந்தில் ஏறவிடாமல் தடுத்துள்ளார்.

இதனால், ஆத்திரமடைந்த அந்த போதை ஆசாமி நடத்துனரை ஆபாசமாக பேசியதாக கூறப்படுகிறது. இதனால், ஆத்திரமடைந்த அந்த நடத்துனர் பேருந்தில் இருந்தவாறு ‘நடிகர் விஜயகாந்த் போன்று பேருந்து கம்பிகளைப் பிடித்துக் கொண்டு தொங்கியபடி, அந்தப் போதை ஆசாமியை தனது கால்களால் மிதித்துள்ளார்’.

அப்பொழுது, நடத்துனரின் காலனியானது கீழே விழவே, அதை எடுக்க கீழே இறங்கிய நடத்துனருக்கு ‘தன்னை இப்படி ஆபாசமாக பேசி விட்டானே’ என்ற ஆத்திரத்தில் மறுபடியும் தனது ஆத்திரம் தீர செருப்பால் அந்த போதை பயணியை தாக்கியுள்ளார்.

இதை பார்த்த பேருந்து நிலையத்தில் நின்று கொண்டிருந்த சக பயணிகள் அதிர்ச்சிடையவே, அங்கு நின்று கொண்டிருந்த ஒரு நபர் நடத்துனரை சமாதானம் செய்து பஸ்ஸில் அனுப்பி வைத்தார்.

அதனை தொடர்ந்து, நீண்ட நேரமாக அந்த போதை ஆசாமி பேருந்து நிலையத்தில் நின்று கொண்டிருந்த சூழலில், போதை ஆசாமியை நடத்துனர் செருப்பால் அடிக்கும் வீடியோ தற்போது வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.

  • tourist family negative review from valaipechu team படம் வர்ரதுக்கு முன்னாடியே நெகட்டிவ் விமர்சனம்; டூரிஸ்ட் ஃபேமிலி குறித்து வாய்விட்ட பிரபலம்!