அமைச்சர் பின்னால் அமர்ந்து Youtubeல் படம் பார்த்த அரசு அதிகாரி : கிராம சபை கூட்டத்தில் நடந்த கூத்து.. மக்கள் அதிருப்தி!!

Author: Udayachandran RadhaKrishnan
2 November 2022, 9:47 am
Youtube film - Updatenews360
Quick Share

விருத்தாசலம் அருகே நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில், ஊரக வளர்ச்சித் துறை உதவி இயக்குனர் கூட்டத்தை கவனிக்காமல், செல்போனில் படம் பார்த்த வீடியோ வெளியாகியுள்ளது.

நவம்பர் 1 உள்ளாட்சி தினத்தை கொண்டாடும் வகையில் , தமிழகத்தில் உள்ள 12,525 ஊராட்சிகளிலும் பொது மக்கள் பங்கேற்கும் கிராம சபை கூட்டம் நடத்த தமிழக அரசு அறிவித்துள்ளதையடுத்து,

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த மு.பட்டி கிராமத்தில் சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெற்றது. இக்கிராம சபை கூட்டத்தில், தமிழக தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் சி.வெ.கணேசன் கலந்து கொண்டார்.

இந்த கிராம சபை கூட்டத்தில் ஏரியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி பின்பு தூர்வாருதல், புதிய மேல்நிலை நீர் திறக்க தொட்டி அமைத்தல், சாலை வசதி மேம்படுத்துதல், ஐம்பது லட்சம் மதிப்பீட்டில் சமுதாய கூடம் அமைத்தல், தெரு விளக்கு உள்ளிட்ட மக்களின் அடிப்படை வசதிகளை அனைத்தும் செய்து தர தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

அனைத்து துறை அதிகாரிகளும் கலந்து கொண்ட இக்கூட்டத்தில், கலந்து கொண்ட ஊரக வளர்ச்சித்துறை உதவி இயக்குனர் இன்பா கூட்டத்தை கவனிக்காமல் அமைச்சர் பின்னால், உட்கார்ந்து, கூட்டம் ஆரம்பத்தில் இருந்தே நிகழ்ச்சி முடியும் வரை தனது செல்போனில், Youtube-ல் படம் பார்க்கும் வீடியோ காட்சி வெளியாகி பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

மேலும் ஊரக வளர்ச்சித்துறை உதவி இயக்குனர் இன்பா, பொதுமக்கள் எடுத்துரைத்த பிரச்சினைகளைப் பற்றி எதுவும் கண்டு கொள்ளாமல், செல்போனில் படம் பார்த்ததால், பொதுமக்களிடையே சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

உடனடியாக மாவட்ட நிர்வாகம் சம்பந்தப்பட்ட அதிகாரி மீது, துறை ரீதியான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுகின்றனர்.

Views: - 161

0

0