வேளாண் படிப்புகளுக்கான தர வரிசை வெளியீடு: நீலகிரி மாணவி 200க்கு 200 மதிப்பெண் பெற்று முதலிடம்..!!

Author: Rajesh
28 January 2022, 2:34 pm
Quick Share

தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தில் பட்ட படிப்புக்கும் , பட்டய படிப்புக்கும் தரவரிசை பட்டியலை பல்கலைக்கழக நிர்வாக குழு வெளியிட்டிருக்கின்றனர்.

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் 2021-2022 கல்வியாண்டிற்கான தரவரிசை பட்டியல் இன்று வெளியிட்டுள்ளது. தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக இளம் அறிவியல் பட்டப்படிப்பு மற்றும் பட்டயப் படிப்புகளுக்கு நடப்பு கல்வியாண்டிற்கான தரவரிசைப் பட்டியலை பல்கலைக்கழகத் செயல் துணைவேந்தர் கிருஷ்ண மூர்த்தி வெளியிட்டிருக்கின்றார்.

இந்த தரவரிசை பட்டியலில் நீலகிரி மாவட்டத்தை சேர்ந்த பூர்வா ஸ்ரீ 200-க்கு 200 மதிப்பெண்கள் பெற்று முதல் இடத்தை பெற்றார். நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த புஷ்கலா 199 மதிப்பெண்கள் பெற்று 2-வது இடத்தையும்,  ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த சார்ஜிங் 198.75 மதிப்பெண்கள் பெற்று 3-வது இடத்தையும் பிடித்தனர்.

தமிழக அரசு பள்ளியில் படித்த மாணவர்களுக்கான 7.5 சதவீத ஒதுக்கீடு செய்யப்பட்ட தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டது. இதில் அரசுப் பள்ளியில் படித்த தர்மபுரி மாவட்டத்தைச் சேர்ந்த பவித்ரா 193.33 மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பிடித்தார். 

பட்டயப் படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டது. இதில், வேளாண்மை மற்றும் தோட்டக்கலை பட்டயப் படிப்புகளுக்கான தரவரிசை பட்டியலில் திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த அனுஜா 191.43 மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பிடித்தார். புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த ஜெரால்ட் எடிசன் 189.68 மதிப்பெண்கள் பெற்று 2-ம் இடம் பிடித்தார். நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த ராம் பிரசாத்  189.99  மதிப்பெண்கள் பெற்று மூன்றாம் இடம் பிடித்தார்.

வேளாண் பொறியியல் பட்டயப் படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியலில் கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த அனுபா 200-க்கு 191.43 மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பிடித்தார். திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த அனுஜா 190.03  மதிப்பெண்கள் பெற்று 2-வது இடமும், புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த கைலாஷ் சங்கர் 189.99 மதிப்பெண்கள் பெற்று 3-வது இடமும் பிடித்தார். மாணவர் சேர்க்கை கலந்தாய்வு நேரடியாக நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, வரும் பிப்ரவரி 11-ம் தேதி முன்னாள் ராணுவ வீரர்களின் வாரிசுகள், மாற்றுத்திறனாளிகள், விளையாட்டு வீரர்கள் போன்ற சிறப்பு பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வு நடக்கிறது. இதனைத் தொடர்ந்து பிப்ரவரி 14,15 ஆகிய தேதிகளில் தொழில்முறை கல்வி பிரிவினர், 17 மற்றும் 18-ம் தேதி அரசு பள்ளிகளில் படித்த 7.5 சதவீதம் இடஒதுக்கீடு பிரிவினருக்கு நடக்கிறது.பொது கலந்தாய்வு ஆன்லைன் மூலம் நடக்கிறது.

அதன்படி, பிப்ரவரி 21-ம் தேதி முதல் 23-ம் தேதி வரை கலந்தாய்வு நடக்கிறது.  கல்லூரி மற்றும் பாடப்பிரிவு இட ஒதுக்கீடு 25-ம் தேதி ஆன்லைன் முறையில் நடக்கிறது. மேலும், மார்ச் 2-ம் தேதி முதல் 5-ம் தேதி வரை சான்றிதழ் சரிபார்ப்பு நடக்கிறது. இதில், மாணவர்கள் நேரடியாக கலந்து கொள்ள வேண்டும். தொடர்ந்து, முதல் நகர்வு பட்டியல் மற்றும் கல்லூரி பாடப்பிரிவுகள் இட ஒதுக்கீடு மார்ச் 8-ம் தேதி ஆன்லைன் முறையில் நடக்கிறது.
சான்றிதழ் சரிபார்ப்பு மார்ச் 11 முதல் 13-ம் தேதி வரை நேரடியாக நடக்கிறது. இரண்டாம் நகர்வு பட்டியல் மற்றும் கல்லூரி, பாடப்பிரிவுகள் ஒதுக்கீடு ஆன்லைன் முறையில் மார்ச் 16-ம் தேதி நடக்கிறது. வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான இட ஒதுக்கீடு நேரடி கலந்தாய்வு மார்ச் 17-ல் நடக்கிறது. வேளாண் தொழில் நிறுவனங்களுக்கான இட ஒதுக்கீடு நேரடி கலந்தாய்வு மார்ச் 18-ம் தேதி நடக்கிறது. சான்றிதழ் சரிபார்ப்பு மார்ச் 19 முதல் 21-ம் தேதி வரை நடக்கிறது.

இதில், மாணவர்கள் நேரடியாக கலந்து கொள்ள வேண்டும். மூன்றாம் நகர்வு பட்டியல் மற்றும் கல்லூரி பாடப்பிரிவு இட ஒதுக்கீடு மார்ச் 24-ம் தேதி ஆன்லைன் மூலம் நடக்கிறது. பட்டயப் படிப்புகளுக்கான கலந்தாய்வு குறித்த விவரங்கள் விரைவில் அறிவிக்கப்படும் என்று முதன்மையர் மற்றும் மாணவர் சேர்க்கை தலைவர் தெரிவித்தார்.

Views: - 1347

0

0