மு.க. அழகிரிக்கு வாழ்த்துக் கூறிய ஹெச்.ராஜா : தமிழக அரசியலில் பரபரப்பு!!

25 December 2020, 5:14 pm
H raja Azhagiri -Updatenews360
Quick Share

சிவகங்கை : முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரிக்கு பாஜக மூத்த தலைவர் ஹெச் ராஜா வாழ்த்து கூறியது தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

முதல் சுதந்திர போராட்ட வீரமங்கை வேலுநாச்சியாரின் 224வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டது. அவரது நினைவு தினத்தில் பல்வேறு அரசியல் கட்சியினர் அவரின் நினைவை போற்றி வணங்கினர்.

அந்த வகையில் பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா வேலுநாச்சியாருக்கு அஞ்சலி செலுத்தி செய்தியாளர்கள் சந்திப்பில் ஈடுபட்டார். அப்போது அவர் பேசியதாவது, சிவகங்கை மாவட்டத்தில் ஆங்கில ஏகாதிபத்தியத்தை எதிர்த்து பல்வேறு தலைவர்கள் போராடி இருக்கிறார்கள் .

இந்தியாவின் முதல் சுதந்திரப் போருக்கு முன்னோடி வீரமங்கை வேலுநாச்சியாரின் போராட்டம் ஆகும். இன்று நடைபெறும் வேலுநாச்சியாரின் 224 -வது நினைவு தினத்தில் பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் அவருக்கு எங்களது வீரவணக்கத்தைச் செலுத்துகிறோம் என்றார்.

டெல்லியில் தேசிய மகளிர் அணி தலைவியாக பொறுப்பேற்றுள்ள வானதி சீனிவாசன் அவர்கள் பதவி ஏற்கும்போது சிவகங்கை வேலு நாச்சியாருக்கு எனது முதல் வணக்கம் எனக்கூறி பதவியேற்றது குறிப்பிடத்தக்கதாகும்.

இந்திய வரலாற்றில் கால்டுவெல் அவர்களின் போராட்டத்தை பற்றியும் முதல் பேரரசை பற்றியும் வரலாற்றில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. ஆனால் வீர மங்கை வேலு நாச்சியார் போன்றவர்களின் முதல் போராட்டங்களைப் பற்றி சொல்லப்படவில்லை.

இதேபோல் சோழப்பேரரசை பற்றி முழுமையாக எழுதப்படவில்லை. ராஜராஜ சோழனை பற்றியோ அவருக்குப் பின் வந்த அவரது வாரிசுகளை பற்றியோ சொல்லிக் கொடுத்திருக்கிறோமா? இல்லை. ஆனால் பாபர் பற்றியும் அவரது மகன், மகள்கள் பற்றியும் சொல்லிக் கொடுத்திருக்கிறோம். பாராளுமன்றத்தில் வீரமங்கை வேலுநாச்சியாரின் சிலை வைப்பது சம்பந்தமாக பரிசீலனையில் இருக்கிறது.

ஸ்டாலின் அவர்கள் மக்களை எப்படி வேணாலும் சந்திக்கட்டும். ஆனால் அவர் முதலமைச்சர் ஆவார் என்று அவர் ஜாதகத்திலேயே இல்லை. நாம் என்ன செய்வது? எனது நண்பர் மு.க .அழகிரி அவர்கள் கட்சி தொடங்கப் போவதாக தெரிவிக்கிறார்கள். அப்படி அவர் கட்சி தொடங்கினால் அவருக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள். இவ்வாறு அவர் பேசினார்.

Views: - 0

0

0