கு.க. செல்வம் மீது நடவடிக்கை எடுத்த திமுக இந்து விரோத கட்சியே…! ஹெச். ராஜா அதிரடி டுவீட்

7 August 2020, 12:27 pm
Quick Share

சென்னை: கு.க. செல்வம் மீது நடவடிக்கை எடுத்த திமுக இந்து விரோத கட்சி என்று பாஜக தேசிய செயலாளர் ஹெச். ராஜா விமர்சித்துள்ளார்.

சட்டசபை தேர்தலுக்கான களப்பணிகள் கிட்டத்தட்ட அனைத்து கட்சிகளிலும் துவங்கி விட்டன. ஆகையால் ஒரு கட்சியில் இருந்து மற்ற கட்சிக்கு முக்கிய பிரமுகர்கள் தாவும் காட்சிகள் அரங்கேறி வருகின்றன.

அதில் பிரதானமாக பாதிக்கப்பட்டு இருப்பது திமுக தான். முதலில் விபி துரைசாமி அந்த கட்சியில் இருந்து விலகி பாஜகவில் சேர்ந்தார். சமீபத்தில் சென்னை ஆயிரம் விளக்கு தொகுதி எம்.எல்.ஏ கு.க.செல்வம் பாஜகவில் இணைந்துள்ளார். ஆனால் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை.

மேலும் முக்கிய திமுக பிரமுகர்களும் பாஜகவில் இணைய உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்நிலையில் பாஜக தேசிய செயலாளர் ஹெச். ராஜா தமது டுவிட்டரில் கூறி இருப்பதாவது:

ஆயிரம் விளக்குத் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் திரு. கு.க. செல்வம் அவர்களின் கருத்து தமிழக மக்கள் எண்ணத்தை பிரதிபலிப்பதாக உள்ளது. அவரை இடைநீக்கம் செய்த திமுக கோட்டையில் குத்து வெட்டு துவக்கம். நல்லது இன்றே துவங்குவது சிறப்பு  என்று பதிவிட்டுள்ளார்.

மற்றொரு பதிவில் அவர் கூறி இருப்பதாவது: இந்து விரோத திமுக: இந்து மதத்தை இழிவாகப் பேசிய ஆ.ராசா மீதோ அல்லது அக்கினி தெய்வம் திரௌபதியை இழிவாகப் பேசிய பழ.கருப்பையா மீதோ நடவடிக்கை எடுக்காமல், தமிழக மக்களின் எண்ணங்களை பிரதிபலித்த கு.க.செல்வம் மீது நடவடிக்கை எடுத்து திமுக இந்து விரோத கட்சியே என்று கூறி உள்ளார்.

இதே போன்று தா. கிருட்டிணனின் மருமகன் புவியரசு பாஜகவில் தம்மை இணைத்துக் கொண்டுள்ளார். புவியரசு பாஜகவில் இணைந்ததற்கு பாஜக மாநில தேசிய செயலாளர் ஹெச்.ராஜா வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.

பாஜக பதவி ஆசை காட்டி முக்கிய அரசியல் பிரமுகர்களை இழுப்பதாக திமுக குற்றம்சாட்டுகிறது. ஆனால் பாஜகவோ திமுகவின் குடும்ப அரசியல் கண்டு, வெறுத்து பாஜகவில் இணைகிறார்கள் என்று பதிலடி கொடுத்து வருகிறது.

Views: - 60

0

0