சொகுசு கார் மீது மோதிய பெண் நீதிபதியின் கார்…சாலைகளை ஆக்கிரமித்த கடைகளால் விபரீதம்: நீதிபதி மருத்துவமனையில் அனுமதி..!!

Author: Rajesh
19 April 2022, 5:06 pm
Quick Share

சென்னை: மெரினா கடற்கரை லூப் சாலையில் உயர்நீதிமன்ற பெண் நீதிபதி கார், சொகுசு காரில் மோதி விபத்துக்குள்ளான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஒருவரின் கார், சொகுசு காரில் பயங்கரமாக மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. இது குறித்து காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் வந்தவுடன் சம்பவ இடத்திற்கு அண்ணா சதுக்கம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் விரைந்தனர்.

போலீசார் வருவதற்குள் விபத்தில் லேசான காயமடைந்த நீதிபதி மற்றும் ஓட்டுனர் மற்றொரு வாகனத்தில் அருகில் இருக்கும் அரசு ஓமந்தூரார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சென்றுள்ளனர். இதனையடுத்து போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டதில் சென்னை மெரினா லூப் சாலையில் உள்ள பவானி அம்மன் கோயில் அருகே பெரிய வேகத்தடை ஒன்று உள்ளது.

வேகத்தடை இருப்பதற்கான அடையாளம் ஏதும் இல்லாததால், பட்டினப்பாக்கத்தில் இருந்து கலங்கரை விளக்கம் நோக்கிச் சென்று கொண்டிருந்த சொகுசு கார் ஒன்று வேகத்தடையை அறிந்தவுடன் மெதுவாக சென்றுள்ளது.

இதனை கவனிக்காமல் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி பணிக்காக உயர் நீதிமன்றம் அந்த வழியாக செல்லும் போது சொகுசு காரின் பின்புறம் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. விசாரணை மேற்கொண்டதில் சென்னை உயர்நீதிமன்ற பெண் நீதிபதி மாலாவின் கார் மோதி விபத்துக்குள்ளானது தெரியவந்துள்ளது. விபத்துக்குள்ளான சொகுசு கார் ஆர்.ஏ புரத்தைச் சேர்ந்த தொழிலதிபர் அன்சூல் என்பவரது என தெரியவந்துள்ளது.

உயர்நீதிமன்ற நீதிபதி வாகனம் விபத்துக்குள்ளானதை அடுத்து அந்த வழியாக உயர்நீதிமன்றம் செல்லும் நீதிபதிகள் பார்வையிட்டு விசாரித்துச் சென்றனர். இந்த விவகாரம் தொடர்பாக அண்ணா சதுக்கம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நீதிபதி மாலா தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார்.

குறிப்பாக வேகத்தடை இருப்பதற்கான அடையாளம் இல்லாததாலும், லூப் சாலையை ஆக்கிரமித்து மீன் கடைகள் போடப்பட்டுள்ளதால் இதுபோன்ற விபத்துகள் நடப்பதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கின்றனர்.

Views: - 627

0

0