ஆ ராசாவுக்கு எதிராக குவிந்த இந்து முன்னணியினர்… அன்னூரில் கடையடைப்பு : முன்னெச்சரிக்கையாக 16 பேர் கைது!!

Author: Udayachandran RadhaKrishnan
20 September 2022, 11:57 am

அன்னூரில் 50 சதவீதத்துக்கு மேல் கடைகள் அடைத்து திமுக எம்பி ஆ ராசாவுக்கு எதிராக போராட்டம் நடைபெற்றது.

திமுக எம்பி.ஆ.ராசாவின் இந்துக்கள் குறித்த சர்ச்சை பேச்சை கண்டித்து நீலகிரி நாடாளுமன்ற தொகுதி முழுவதும் கடை அடைப்புக்கு அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில் அன்னூரில் 50% கடைகள் அடைக்கப்பட்டுள்ளன.

நீலகிரி எம்.பி ஆ.ராசா நிகழ்ச்சி ஒன்றில் பேசும் போது இந்துக்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக சொல்லப்படும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.

இதையடுத்து நீலகிரி தொகுதி முழுவதும் இன்று இந்து முன்னணி சார்பில் ஆ. ராசாவை கண்டித்து கடையடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் நீலகிரி நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட கோவை மாவட்டம் அன்னூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரத்தில் கடையடைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்த திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சியினர், வியாபாரிகள் போராட்டத்துக்கு ஆதரவளிக்க கூடாது என கடை கடையாக சென்று துண்டு பிரசுரங்களை வழங்கினர்.

மேலும் கடைகளை திறக்க பாதுகாப்பு அளிக்க கோரி அன்னூர் காவல் நிலையத்திலும் புகார் அளித்தனர். இதற்கு போட்டியாக இந்து அமைப்புகள் சார்பில் கடைகளை மூடுமாறு துண்டு பிரசுரங்கள் வழங்கி பிரச்சாரம் செய்யப்பட்டது.

இதனால் நேற்றைய தினமே பரபரப்பான சூழல் நிலவியது. இந்த நிலையில் இன்று அன்னூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கிட்டத்தட்ட அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டுள்ளன. இதனால் அன்னூரில் பரபரப்பான முக்கிய சாலைகள் மற்றும் வணிக வளாகங்கள் நிறைந்த கடைவீதிகள் வெறுச்சோடி காணப்படுகின்றன.

பெரும்பாலான உணவகங்கள் மூடப்பட்டுள்ள நிலையில் உணவு தேவைக்கு அவற்றை நம்பியுள்ள பலரும் அவதிக்குள்ளாகினர். பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டுள்ளதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டிருக்கிறது.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்து அமைப்புகளை சேர்ந்த 16 பேர் கைது செய்யப்பட்டு தனியார் திருமண மண்டபத்தில் அடைக்கப்பட்டுள்ளனர்.

மேலும் முக்கிய சாலைகளில் போலீசார் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

  • ilaiyaraaja used yuvan shankar raja tune in his song தனது மகன் போட்ட ட்யூனையே காப்பி அடித்த இளையராஜா? இப்படி எல்லாம் நடந்துருக்கா?