பந்தாவுக்காக சொந்த வீட்டுக்கே பெட்ரோல் குண்டு வீசிய அகில பாரத இந்து மகா சபா நிர்வாகி.. விசாரணையில் பகீர்!!
Author: Udayachandran RadhaKrishnan30 December 2023, 6:17 pm
பந்தாவுக்காக சொந்த வீட்டுக்கே பெட்ரோல் குண்டு வீசிய அகில பாரத இந்து மகா சபா நிர்வாகி.. விசாரணையில் பகீர்!!
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை கேசவன் நகரில் வசித்து வருபவர் பெரியசாமி மகன் பெரி.செந்தில் (48). இவர் அகில பாரத இந்து மகா சபா மாநில பொதுச் செயலாளராக உள்ளார்.
இவரது வீட்டில் கடந்த 24ஆம் தேதி நள்ளிரவு நேரத்தில் மர்ம நபர் ஒருவர் பெட்ரோல் குண்டு வீசிய சம்பவம் உளுந்தூர்பேட்டை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
இது தொடர்பாக கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சமய சிங் மீனா உள்ளிட்ட காவல்துறை அதிகாரிகள் செந்தில் வீட்டில் நேரில் சென்று தீவிர விசாரணை செய்தனர்.
பின்னர் மூன்று ஆய்வாளர்கள் தலைமையில் மூன்று தனிப்படை போலீசார் அமைக்கப்பட்டு தீவிர விசாரணை செய்யப்பட்டு வந்தது, இந்த நிலையில் பெரி.செந்தில் செல்போன் பதிவுகள் கொண்டு விசாரணை செய்ததில் அவர் சென்னை கேகே நகர் பகுதியில் வசிக்கும் மோகன் மகன் மாதவன் (24) என்பவர் உடன் அடிக்கடி பேசியது தெரியவந்துள்ளது.
இதனையடுத்து போலீசார் மாதவனை கைது செய்து தீவிர விசாரணை செய்ததில் பெரி.செந்தில் மற்றும் அவருடைய மகன் அகில பாரத இந்து மகாசபா கள்ளக்குறிச்சி மாவட்ட இளைஞர் அணி செயலாளர் மணிகண்டசந்துரு (24) ஆகியோர் மாதவனை கொண்டு தனது வீட்டில் பெட்ரோல் குண்டு போட வைத்தது போலீசார் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
மேலும் விசாரணையில் கடந்த சில வருடங்களுக்கு முன்பு செந்திலுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது, அதனை அவர் பல்வேறு குற்ற செயலுக்கு பயன்படுத்தியதால் போலீஸ் பாதுகாப்பு விலக்கிக் கொள்ளப்பட்டது.
மீண்டும் போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும் என பலமுறை காவல்துறை அதிகாரிகளுக்கு கோரிக்கை வைத்து வந்த நிலையில் இது போன்ற பெட்ரோல் குண்டு போடும் சம்பவத்தை அரங்கேற்றி உள்ளது போலீசார் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
இதனை அடுத்து பெட்ரோல் குண்டு வீசிய மாதவனை போலீசார் கைது செய்தது தெரிந்த செந்தில் மற்றும் அவருடைய மகன் மணிகண்டசந்துரு காரில் கேரள மாநிலம் தப்பி செல்ல முயன்ற போது தனிப்படை போலீசார் கம்பம் அருகே இருவரையும் கைது செய்தனர். அவருடைய காரையும் பறிமுதல் செய்தனர்.
போலீசார் தீவிர விசாரணைக்கு பிறகு செந்தில் அவருடைய மகன் மணிகண்டசந்துரு பெட்ரோல் குண்டு வீசிய மாதவன் ஆகிய மூன்று பேரை கைது செய்து கடலூர் சிறையில் அடைத்தனர்.
இதற்கு உடந்தையாக இருந்த செந்தில் தம்பி ராஜீவ்காந்தி என்பவரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். போலீஸ் பாதுகாப்பு வேண்டும் என்பதற்காக அகில பாரத இந்து மகா சபா மாநில பொதுச் செயலாளர் பெரி.செந்தில் என்பவர் ஆள் வைத்து தனது வீட்டில் பெட்ரோல் குண்டு போட வைத்த சம்பவம் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தி உள்ளது
0
0