பேருந்துகளை விற்று போக்குவரத்து ஊழியர்களுக்கு ஊதியம் கொடுக்க வேண்டிய அவலநிலை ; திமுக அரசு குறித்து அர்ஜுன் சம்பத் விமர்சனம்…!!

Author: Babu Lakshmanan
4 October 2023, 2:11 pm
Quick Share

திண்டுக்கல் ; போக்குவரத்து கழகம் பேருந்துகளை அடமானம் வைத்து தான் சம்பளம் கொடுக்க வேண்டிய அவல நிலையில் உள்ளது திமுக ஸ்டாலின் அரசு என்று இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் தெரிவித்துள்ளார்.

திண்டுக்கல் ரவுண்ட் ரோட்டில் இந்து மக்கள் கட்சி இளைஞர் அணி சார்பில் சனாதனம் விளக்க தெருமுனை பிரச்சாரம் மாநில இளைஞரணி துணை தலைவர் மோகன் குமார் தலைமையில் நடைபெற்றது. இந்து மக்கள் கட்சி நிறுவனத் தலைவர் அர்ஜுன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு சனாதனம் குறித்தும், திமுக அரசின் ஆட்சி அவல நிலை குறித்தும் சிறப்புரையாற்றினார்.

கூட்டத்திற்கு ‌பின்னர் செய்தியாளரிடம் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது :- தமிழகத்தில் பல இடங்களில் ஆசிரியர்களும், அரசு ஊழியர்களும் போராடி வருகின்றனர். தேர்தல் வாக்குறுதியில் அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக கூறி நிறைவேற்றாமல் தெருவிலே நிறுத்தியுள்ளார்கள். இரண்டுகட்ட பேச்சுவார்த்தை நடத்தியும், அவர்களின் அடிப்படை கோரிக்கை கூட நிறைவேற்றப்படவில்லை. தமிழக முதல்வர் தலையிட்டு அவர்களது கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும்.

பல இடங்களில் போக்குவரத்து துறையில் ஊழல் பெருகி விட்டது. தற்போது பணிமனைகளை மற்றும் பேருந்துகளை அடமானம் வைத்து ஊழியர்களுக்கு சம்பளம் கொடுக்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. ஆகவே, போக்குவரத்து துறையை சீரமைக்க வேண்டும்.

மின்சார துறையும் ஊழல் துறையாக மாறிவிட்டது. மின்வாரியமும் மின் கட்டணத்தை ஏத்திய பின்பும் நஷ்டத்தில் இயங்கி வருகிறது. நிர்வாக சீர்கேட்டையும் சீரமைக்க வேண்டும். இதனால், பொதுமக்கள் அதிகளவில் துன்பப்படுகின்றனர். இதனால், தொழில் முனைவோர்கள் பொதுமக்கள் அனைவரும் போராட்ட களத்தில் ஈடுபட்டு வருகின்றனர். முதலமைச்சர் இதை கவனத்தில் கொண்டு மாற்றி அமைக்க வேண்டும்.

காவிரி நதிநீர் பங்கீட்டில், ஆணைய உத்தரவின்படி தண்ணீர் வர வேண்டும். இதில், திமுக இரட்டைவேடம் போடுகின்றது துரோகம் செய்கின்றது. கர்நாடகத்தில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்த பிறகுதான் இந்த நிலை. இதற்கு முன்னர் தொகுதி பங்கீடு சரியாக தான் இருந்து வந்தது.

திமுக கூட்டணி கட்சியினர் இது குறித்து பேசினால் அங்கு வாழும் தமிழர்களின் நிலை கவலைக்கிடம் தான் என்று சொல்வது வேதனை அளிக்கிறது. அங்கு வாழும் தமிழர்களின் வாழ்க்கைக்கு ஸ்டாலின் தான் பொறுப்பு. காவிரி தொகுதி பங்கிட்டின்படி தண்ணீரை வாங்கி கொடுப்பது முதல்வரின் பொறுப்பு.

சீமான் பேசிய வெறுப்பு பேச்சு தேச விரோத பேச்சு. திராவிட எதிர்ப்பு என பொய்யான தோற்றத்தை ஏற்படுத்தி வருகிறார். திராவிடத்திற்கு மாற்று இந்துத்துவம் தான், தேசியம் தான். நாம் தமிழர் என்பதெல்லாம் நாடகம்தான். சீமான் பேசிய பேச்சுக்கு அவரை கைது செய்ய வேண்டும் என கோரிக்கை விடுகிறோம்.

பிஜேபி என்பது காலத்தின் கட்டாயம். திராவிடத்திற்கு மாற்றுக் கட்சியாக அமையும். தமிழகத்துக்கு பிஜேபியால் மட்டுமே காமராஜர் ஆட்சியை வழங்க முடியும். அனைத்து அதிமுக மற்றும் பாஜக தொண்டர்களின் அடிப்படை கருத்து திமுக அகற்றப்பட வேண்டும் என்பதுதான், என பேசினார்.

கூட்டத்தில் மாநிலத் துணை பொதுச்செயலாளர் தர்மா, இளைஞர் அணி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Views: - 238

0

0