தமிழகத்தில் பெருகிவரும் போதைப்பொருள் புழக்கம்… பின்னணியில் சர்வதேச சதி ; என்ஐஏ விசாரணை கோரும் இந்து முன்னணி..!!!

Author: Babu Lakshmanan
2 March 2024, 4:23 pm

போதை எனும் பேராபத்தில் இருந்து இளைஞர்கள் விழிப்புணர்வு பெற வரும் 4ம் தேதி மாலை 4 மணியளவில் தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளதாக இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வர சுப்ரமணியம் தெரிவித்துள்ளார்.

இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வர சுப்ரமணியம் திருப்பூர் தாராபுரம் ரோடு இந்து முன்னணி அலுவலகத்தில் செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெற்றது.

அவர் கூறியதாவது:- தமிழகத்தில் தற்போது கல்வி நிலையங்களில் கஞ்சா மற்றும் போதைப்பொருட்கள் விற்பனை அதிகரித்து வருவதாக அடிக்கடி செய்திகள் வெளிவந்த வண்ணம் உள்ளது. ஒருபுறம் டாஸ்மாக் மது மக்களை சீரழித்து வரும், அதே வேளையில் கஞ்சா மற்றும் சிந்தட்டிக் போதை பொருட்கள் தமிழகத்தை போதைப் பொருள்களின் கூடாரமாக மாற்றி வருவது தமிழக மக்களிடையே மிகுந்த வேதனையை ஏற்படுத்தியுள்ளது.

ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் மற்றும் அரபு நாடுகளிலிருந்து கடத்தி வரப்படும் போதைப்பொருட்களை வினியோகிக்கும் சந்தையாக தமிழகம் மாற்றப்பட்டிருக்கிறதோ! என்ற அச்சமானது பேரதிர்ச்சியை அளிக்கிறது.

கடந்த பிப் 15ம் தேதி டெல்லியில் தேசிய போதை தடுப்பு பிரிவின் மூலமாக 2500கோடி மதிப்புடைய மெட்ட பெத்தமைன் என்ற கொடிய போதைப் பொருளின் மூலப்பொருளான சூடோபெட்ரினை கடத்தியதாக தமிழகத்தைச் சேர்ந்த முஜிபுர் ரகுமான் உட்பட 3 நபர்கள் பிடிபட்டதோடு, இந்தக் கடத்தல் கும்பலின் தலைவனாக இராமநாதபுரத்தை சேர்ந்த திமுக அயலக பிரிவின் மாவட்ட அமைப்பாளர் ஜாபர் சாதிக் என்பவன் செயல்படுவதும், அமீர் போன்ற சினிமா பிரபலங்கள் அவனுடன் தொடர்பில் இருப்பதும் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

மேலும் 29ம் தேதி குஜராத் கடல் பகுதியில் 3500 கிலோ போதை பொருட்கள் பிடிபட்ட நிலையில் விசாரணையில் அது தமிழகத்திற்கு கடத்தப்பட இருந்ததாக தகவல் வருகிறது. இதேபோல கடந்தவாரம் மதுரையில் தமிமுன் அன்சாரி என்பவனிடம் 100 கோடி மதிப்புள்ள 20 கிலோ மெத்த பெட்டமைன் பிடிபட்டுள்ளது. மார்ச்1 அன்று மதுரை பொதிகை ரயிலில் சிலமன் பிரகாஷ் என்பவனிடம் இருந்து 30 கிலோ மெத்த பெட்டமைன் கைப்பற்றப்பட்டுள்ளது.

கடந்தாண்டு மார்ச் மாதம் வாசிம் மற்றும் சகுபர் சாதிக் ஆகியோரிடம் 9கோடி மதிப்பிலான மெத்த பெட்டமைன் பிடிபட்டது. இது போன்ற சம்பவங்களின் மூலம் மெத்த பெட்டமைனின் மொத்த வியாபாரமும் தமிழகத்தில்தான் நடக்கிறதோ என்ற ஐயம் ஏற்படாமல் இல்லை. மெத்த பெட்டமைன் போன்ற செயற்கை ரசாயன போதைப்பொருட்களை உபயோகிக்கும் இளைஞர்கள் அதற்கு அடிமையாவது மட்டுமில்லாமல், கொடிய நோய் தாக்குதலுக்குள்ளாகி சிறு வயதிலேயே உடல் உறுப்புகளை இழந்து உயிரையே இழக்கும் நிலைக்கு தள்ளப்படுகின்றனர்.

இது தவிர நேற்று உளுந்தூர்பேட்டையில் சக மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை செய்த +2 மாணவர்கள் இருவர் கைது செய்யப்பட்டிருப்பது, சாதிக்க நினைக்கும் இளைஞர்களை கஞ்சா வியாபாரிகளாக மாற்றி அவர்களது எதிர்காலத்தையே அழிக்கவும், போதைக்கு அடிமையாக்கி அவர்களது மூளையை மழுங்கடித்து அவர்களை முடக்கி செயலற்றவர்களாக மாற்றிடவும் சர்வதேச சதி உள்ளது என்பது இதன்மூலம் நிரூபணமாகிறது.

இந்த சதிச்செயலுக்கு உடந்தையாக உள்ள சதிகாரர்களிடம் இருந்து இளைஞர்களை காக்கவும்,கடத்தல் மாஃபியாக்களை இரும்புக்கரம்கொண்டு ஒடுக்கவும் தமிழக அரசு பாரபட்சமின்றி நடவடிக்கை எடுப்பதுடன் போதை கடத்தலில் ஈட்டிய சட்டவிரோத பணத்தை திரைத்துறை போன்ற எந்தெந்த துறைகளில் எல்லாம் முதலீடு செய்துள்ளனர்.

சர்வதேச தீவிரவாத கும்பல்களுடன் ஏதேனும் தொடர்புள்ளதா என NIA விசாரிக்க வேண்டும் எனவும் இந்து இளைஞர் முன்னணி வலியுறுத்துகிறது. மேலும் தமிழக அரசு அனைத்து கல்வி நிலையங்களையும் தங்கள் கண்காணிப்பு வளையத்திற்குள் கொண்டு வருவதுடன் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு கவுன்சிலிங் கொடுத்திடவும் போதை எனும் பேராபத்தில் இருந்து இளைஞர்கள் விழிப்புணர்வு பெறவும் இந்து இளைஞர் முன்னணி சார்பில் வரும் 4 ம் தேதி மாலை 4 மணியளவில் தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது, என கூறினார்.

இந்த பத்திரிக்கையாளர் சந்திப்பில் இந்து முன்னணி மாநில செயலாளர் கிஷோர் உட்பட இந்து முன்னணி நிர்வாகிகள் பங்கேற்றனர்.

  • madhavan talks about ncert syllabus going controversial எங்க வரலாற்றை மறைக்கிறீங்க?- வம்பாக பேசி சர்ச்சையில் சிக்கிக்கொண்ட மாதவன்! ஏனப்பா இப்படி?