கருணாநிதிக்கு OKAY…. எம்ஜிஆருக்கு NOT OKAY… ஓசூர் மாநகராட்சி கூட்டத்தில் அதிமுக கவுன்சிலர் தர்ணா…!!

Author: Babu Lakshmanan
23 February 2024, 10:01 pm

ஓசூர் மாநகராட்சியில் இன்று நடைபெற்ற மாமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் அதிகாரிகளை கண்டித்து அதிமுக பெண் கவுன்சிலர் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.

ஓசூர் மாநகராட்சி கூட்ட அரங்கில் இன்று மேயர் சத்யா தலைமையில், ஆணையாளர் சினேகா துணை மேயர் ஆனந்தய்யா ஆகியோர் முன்னிலையில் மாமன்ற உறுப்பினர்களின் அவசர கூட்டம் நடைபெற்றது. மாமன்ற கூட்டம் தொடங்கியதும் உறுப்பினர்கள் தங்கள் வார்டு பகுதிகளில் செய்யப்பட வேண்டிய பணிகள் குறித்து கேள்விகளை எழுப்பினர்.

அப்போது, ஓசூர் மாநகராட்சி 45ஆவது வார்டு அதிமுக உறுப்பினர் கலாவதி சந்திரன், தன்னுடைய வார்டு பகுதியில் தனக்கு தெரியாமல் அதிகாரிகள் பல்வேறு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். இதனால் வார்டு பகுதியில் உள்ள மக்கள் தன்னை கேள்வி கேட்கின்றனர் என அதிகாரிகளை கண்டித்து தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.

அப்போது, அவருக்கு ஆதரவாக அதிமுக கவுன்சிலர்கள் மேயர் மற்றும் ஆணையாளர் ஆகியோரிடம் கேள்விகளை எழுப்பினர்.

இந்த மாமன்ற கூட்டத்தில் மொத்தம் 82 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் ஓசூர் மாநகராட்சி தளி சாலை பூங்காவில் முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கும், ஓசூர் மாநகராட்சி வளாகத்தில் திருவள்ளுவருக்கும் சிலைகளை அமைப்பதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இந்த தீர்மானம் தொடர்பான விவாதத்தை எழுப்பிய அதிமுக கவுன்சிலர்கள், கலைஞர், திருவள்ளுவர் ஆகியோருக்கு சிலைகளை வைப்பது போல, ஓசூர் மாநகராட்சி பகுதியில் முன்னாள் முதலமைச்சர்கள் எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோருக்கு சிலைகளை அமைக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை வைத்தனர். அதற்கு திமுக கவுன்சிலர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால், அதிமுக, திமுக கவுன்சிலர்களுக்கு இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

எம்ஜிஆர், ஜெயலலிதா சிலைகளை வைக்க மேயரிடம் அனுமதி கேட்கிறோம், இது சம்பந்தமாக அவர் பேசட்டும் நீங்கள் பேசக்கூடாது என திமுக கவுன்சிலர்களை அதிமுக மாமன்ற உறுப்பினர் ஜெயபிரகாஷ், சங்கர், அசோகா ஆகியோர் தடுத்து பேசினர். நீண்ட நேரம் இருதரப்புக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதத்தால் கடும் கூச்சல் ஏற்பட்டது. அதனைத்தொடர்ந்து, அனைத்து தீர்மானங்களும் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டன.

  • tourist family negative review from valaipechu team படம் வர்ரதுக்கு முன்னாடியே நெகட்டிவ் விமர்சனம்; டூரிஸ்ட் ஃபேமிலி குறித்து வாய்விட்ட பிரபலம்!