கோவையில் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்கள் எத்தனை பேர்.? கோவை மாவட்டத்தின் முழு விவரம்!!

4 February 2021, 12:52 pm
Cbe Cancer day- Updatenews360
Quick Share

கோவை: தமிழகத்தை பொறுத்தவரை புற்றுநோய் பாதிப்பில் கோவை 4வது இடத்தில் உள்ளது என்று ஸ்ரீ ராமகிருஷ்ணா புற்றுநோய் சிகிச்சை மற்றும் ஆராய்ச்சி மையத்தின் இயக்குனர் மற்றும் தலைமை மருத்துவ சிகிச்சை நிபுணர் குகன் தெரிவித்துள்ளார்.

சர்வதேச புற்றுநோய் கட்டுப்பாட்டு யூனியன் ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 4ம் தேதியை உலக புற்றுநோய் தினமாக அனுசரிக்கிறது. இந்த நாளில், புற்றுநோய் குறித்து மக்களிடம் விழிப்புணர்வுகளை ஏற்படுத்தும் வகையில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்படுவது வழக்கம்.

அதன்படி, கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா புற்றுநோய் சிகிச்சை மற்றும் ஆராய்ச்சி மையம் சார்பில் புற்றுநோய் தொடர்பாக பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் இலவச தொலைபேசி சேவை அறிமுகம் செய்யப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் ஸ்ரீ ராமகிருஷ்ணா புற்றுநோய் சிகிச்சை மற்றும் ஆராய்ச்சி மையத்தின் இயக்குனர் மற்றும் தலைமை மருத்துவ சிகிச்சை நிபுணர் குகன் கூறியதாவது:

புற்றுநோய் தொடர்பாக மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் இந்தாண்டு ஸ்ரீ ராமகிருஷ்ணா புற்றுநோய் சிகிச்சை மற்றும் ஆராய்ச்சி மையம் சார்பில் இலவச ஆலோசனை சேவை தொடங்கப்பட்டுள்ளது.

1800 547 2800 என்ற எண்ணுக்கு மிஸ்டு கால் கொடுத்தால் தமிழிலும், 1800 547 5900 என்ற எண்ணுக்கு மிஸ்டு கால் கொடுத்தால் ஆங்கிலத்திலும் தினமும் அடுத்த நாளில் இருந்து புற்று நோய் குறித்த குறுஞ்செய்திகள் ஒலி வடிவில் கிடைக்கும்.

மரபணு மாற்றத்தால் 10ல் இருந்து 20 சதவீதம் பேருக்கு புற்றுநோய் ஏற்படுகிறது. உடலியல், உணவியல் சார்ந்து வரும் புற்றுநோய் சதவீதம் தான் அதிகம்.

புகையிலை, மசாலா அதிகமுள்ள மற்றும் கொழுப்பு சத்து அதிகமுள்ள உணவுகள், சரியான உடற்பயிற்சி செய்யாமல் இருத்தல், மலக்குடலில் ரத்தம் வடிதல் உள்ளிட்ட பல காரணங்களால் புற்றுநோய் ஏற்படுகிறது.

ஆரம்ப நிலையிலேயே மருத்துவ பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். இந்தியாவில் கடந்தாண்டு 12 முதல் 13.5 லட்சம் பேரும், தமிழகத்தில் கடந்த ஆண்டு 78 ஆயிரத்திற்கும் அதிகமானவர்கள் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தமிழகத்தை பொறுத்தவரை புற்றுநோய் பாதிப்பில் கோவை 4வது இடத்தில் உள்ளது. கடந்தாண்டு 3 ஆயிரத்து 800க்கும் அதிகமானோர் இங்கு புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

முதல் இடத்தில் சென்னையும், அடுத்த இரண்டு இடங்களில் காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்கள் உள்ளன.

ஆண்களில் பெரும்பாலானோர் வயிறு, கழுத்துப்பகுதி, நுரையீரல் புற்றுநோயால் பாதிக்கப்படுகின்றனர். பெண்களில் பெரும்பாலானோர் வாய் மற்றும் மார்பக புற்றுநோயால் பாதிக்கப்படுகின்றனர்.

புற்று நோய் என்றாலே மரணம் என்ற மனோநிலை மக்களிடம் உள்ளது. அது மாற வேண்டும். பலரும் 50 சதவீதம் தீவிரமடைந்த பிறகு தான் சிகிச்சைக்கு வருகின்றனர்.

ஆரம்ப நிலையிலேயே கண்டறிய மருத்துவ சோதனைகள் மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Views: - 0

0

0