நீட் தேர்வு நடத்த வேண்டும் என்ற நீதிமன்ற உத்தரவை திமுக எப்படி ரத்து செய்யும் : பாஜக அண்ணாமலை கேள்வி..!

13 September 2020, 5:06 pm
Quick Share

நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என கூறிய மு.க.ஸ்டாலின் கருத்து சட்டத்திற்கு உட்பட்ட கருத்து இல்லை என பாஜக மாநிலத் துணை தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். 

சென்னை அண்ணா நகரில் பாஜக அறிவுசார் பிரிவு மாவட்ட அலுவலகத்தை திறந்து வைத்த பின் கட்சியின் மாநில துணைத் தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர் பேசியதாவது :-

 நீட் தேர்வு அச்சத்தால் உயிரிழந்த மாணவர்களுக்கு கட்சி சார்பிலும் என்னுடைய சார்பிலும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்.

என்னை பொறுத்தவரையில் நான் நீட் தேர்வுக்கு ஆதரவு  தெரிவிக்கிறேன். குழந்தைகள் கொஞ்சம் தைரியமாக இருக்க வேண்டும். அதுவும் இந்த கொரோனா காலத்தில் அவர்கள் இன்னும் தைரியமாக இருக்க வேண்டும்.இது தொடர்பாக தற்போது பேச வேண்டாம் என நினைக்கிறேன். 

மாணவர்கள் இன்று தேர்வு எழுத உள்ளனர்.இது அரசியல் பேசும் நேரம் இல்லை மாணவர்கள் தேர்வு எழுத வேண்டி உள்ளது. 4 ஆண்டுகள் கழித்து நீட் சம்பந்தமாக தற்போது பேசுகிறோம். 

ஆண்டுக்கு ஆண்டு தமிழக மாணவர்கள் நீட் தேர்வில் அதிக அளவில் தேர்ச்சி பெற்று வருகின்றனர். நீட் தேர்வை நடத்துவது என்பது மாநில சுய ஆட்சிக்கு எதிரானது அல்ல.

திமுக ஆட்சி அமைத்தால் நீட் தேர்வை ரத்து செய்வேன் என்று ஸ்டாலின் சொல்வது அரசியல் அமைப்பு சட்டத்திற்கு உட்பட்டது அல்ல. கேரளா மற்றும் கர்நாடகாவில் கொரோனா காலத்திலும் தேர்வுகளை வெற்றிகரமாக நடத்தி காட்டியுள்ளனர்.

கல்வி வணிகமாக மாறியதை உடைப்பதற்கு தான் புதிய கல்வி கொள்கை கொண்டு வரப்பட்டுள்ளது.நேரடி விவாதத்திற்காக திமுக நாடாளுமன்ற உறுப்பினர் செந்தில் குமார் அழைத்ததற்கு எப்போது வேண்டுமானாலும் விவாதிக்க நான் தயார். இவ்வாறு அவர் கூறினார்.

Views: - 7

0

0